brand logo
அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட்  தொடரில் இங்கிலாந்து வெற்றி

அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து வெற்றி

04 June 2023 | Saranyaa Sri

இங்கிலாந்து, அயர்லாந்து அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டி லண்டனில் நடைபெற்றது. 


நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. 


அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய அயர்லாந்து முதல் இன்னிங்சில் 172 ஓட்டங்களில் சுருண்டது. 


இங்கிலாந்து சார்பில் பிராட் 5 விக்கெட்டும், ஜேக் லீச் 3 விக்கெட்டும், மேத்யூ பாட்ஸ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து, இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. 


தொடக்கம் முதல் இங்கிலாந்து வீரர்கள் அடித்து ஆடினர். ஜேக் கிராவ்லி 56 ஓட்டத்தில் அவுட்டானார். பென் டக்கெட் சதமடித்து 24 பவுண்டரி 1 சிக்சருடன் 182 ஓட்டங்களை விளாசினார். ஒல்லி போப் இரட்டை சதமடித்து 22 பவுண்டரி 3 சிக்சருடன் 205 ஓட்டங்கள் குவித்தார். ஜோ ரூட் 4 பவுண்டரி 1 சிக்சருடன் 56 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.


இறுதியில், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 524 ஓட்டங்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இதையடுத்து, 352 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில், அயர்லாந்து அணி 2வது இன்னிங்சில் களமிறங்கியது. 


இரண்டாவது நாள் போட்டி நேர முடிவில் 3 விக்கெட்டுக்கு 97 ஓட்டங்கள் எடுத்திருந்தது. இந்நிலையில், மூன்றாம் நாள் போட்டி நேற்று நடைபெற்றது. 


ஹாரி டெக்டர் அரை சதமடித்து 51 ஓட்டத்தில் அவுட்டானார். மார்க் அடைர் 88 ஓட்டம் எடுத்து வெளியேறினார். 


ஆண்டி மெக்பிரின் 86 ஓட்டம் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியில், அயர்லாந்து 9 விக்கெட்டுக்கு 362 ஓட்டங்கள் எடுத்தது. இங்கிலாந்து சார்பில் ஜோஷ் டாங் 5 விக்கெட் வீழ்த்தினர். 


தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து 2வது இன்னிங்சில் 12 ஓட்டம் எடுத்து அபார வெற்றி பெற்று 1-0 என தொடரை கைப்பற்றியது. ஒல்லி போப் ஆட்ட நாயகன் விருது வென்றார்.


You may also like