brand logo
மீண்டுமொரு மக்கள் போராட்டம்- புலனாய்வு அறிக்கையால் அரசு கலக்கம்

மீண்டுமொரு மக்கள் போராட்டம்- புலனாய்வு அறிக்கையால் அரசு கலக்கம்

26 February 2023 | - 𝙎𝙖𝙨𝙞𝙙𝙖𝙧𝙖𝙣

அரசாங்கம் மக்கள் மீது முறையற்ற சுமைகளை சுமத்துவதன் எதிரொலியாக விரைவில் மீண்டுமொரு மக்கள் போராட்டம் வெடிக்கவுள்ளதாக புலனாய்வுத்துறை அரசுக்கு அறிக்கையிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இந்த தகவலால் அதிர்ச்சியடைந்துள்ள அரசு, போராட்டங்களை ஒடுக்கும் திட்டங்கள் வகுப்பதில் தீவிர கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது.


அரச புலனாய்வுத்துறை இந்த உளவு அறிக்கையை அரச உயர்மட்டத்திற்கு வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னாள் ஜனாதிபதிக்கு எதிரான “கோட்டா கோ கோம்“ போராட்டத்தை விட தீவிரமான போராட்டமாக அது வெடிக்குமென்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.


குறிப்பாக, இளையவர்கள், மாணவர்கள் முன்னணி வகிக்கும் இந்த போராட்டம் இவ்வருட நடுப்பகுதியில் வெடிக்குமென எச்சரிக்கப்பட்டுள்ளது.


முறையற்ற வரிச்சுமைகளால் மக்கள் தற்போது திண்டாட ஆரம்பித்துள்ளனர். அத்தியாவசிய உணவுப்பொருட்களின் விலைகளும் சாதாரண மக்களால் வாங்க முடியாத நிலைமையில் காணப்படுகிறது. அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடு எதிர்வரும் சித்திரை மாதத்தில் தீவிரமடையலாமென்றும், அதை தொடர்ந்து மக்கள் போராட்டம் ஆரம்பிக்கக்கூடுமென்றும் அந்த எச்சரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


இந்த எச்சரிக்கையடுத்து, அரசுக்கு எதிரான போராட்டங்களை முடக்கும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், கொழும்பின் முக்கிய பகுதிகளை அதிஉயர் பாதுகாப்பு வலயங்களாக பிரகடனப்படுத்தி, போராட்டக்காரர்கள் நுழைவதை தடுக்கவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.



You may also like