brand logo
அரபிக்கடல் - வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு - மக்களுக்கு எச்சரிக்கை விடுப்பு

அரபிக்கடல் - வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு - மக்களுக்கு எச்சரிக்கை விடுப்பு

02 June 2023 | Saranyaa Sri

தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி எடுத்து வருகிறது. மே மாதம் முடிந்துள்ள நிலையிலும் வெயிலின் தாக்கம் குறையாமலேயே உள்ளது. 


கோடை முடிந்து எப்போதும் ஜூன் மாத ஆரம்பத்திலேயே தென்மேற்கு பருவமழை தொடங்குவது வழக்கம். அந்த வகையில் இன்னும் சில தினங்களில் பருவ மழை தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக வானிலை மைய நிபுணர்கள் கணித்துள்ளனர். 


இந்த நிலையில் அரபிக்கடல் மற்றும் வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


அரபிக்கடலில் தற்போது நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதியில் வருகின்ற 5 ஆம் திகதி புயலாக மாறுவதற்கு வாய்ப்பு ஏற்பட்டிருப்பதாக தனியார் வானிலை நிபுணரான பிரதீப்ஜான் தெரிவித்துள்ளார். 


இதே போன்று வங்கக் கடலிலும் புயல் உருவாவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 


இந்த புயல் இன்னும் சில தினங்களில் உருவாகும் என பிரதீப்ஜான் தெரிவித்தார்.


இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,


ஒவ்வொரு ஆண்டும் தென்மேற்கு பருவமழை தொடங்கும் கால கட்டத்தில் இது போன்ற புயல் சின்னங்கள் ஏற்படுவது வழக்கம். அந்த வகையில்தான் அரபிக்கடல் மற்றும் வங்கக்கடலில் புயல் உருவாவதற்கான அறிகுறிகள் ஏற்பட்டுள்ளன. 


இதில் அரபிக்கடலில் தான் முதலில் புயல் உருவாகிறது. பின்னர்தான் வங்கக்கடலில் புயல் உருவாகும். இவ்வாறு அவர் கூறினார். புயல் உருவாகும் நேரத்தில் தரைகாற்று அதிகமாக வீசுவதற்கு வாய்ப்புள்ளது. 


இதனால் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருக்கும் என்றும் வானிலை மைய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 


வருகின்ற 5 ஆம் திகதி அரபிக்கடலில் புயல் உருவாகும் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில் வங்கக்கடலில் 9 ஆம் திகதி புயல் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.


அரபிக்கடலில் உருவாகும் புயல் தீவிரம் அடைந்து மேற்கு இந்திய கடலோர பகுதிகளை நோக்கி நகரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 


கேரளா மற்றும் கர்நாடகா பகுதியை இந்த புயல் நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வங்க கடலில் உருவாக உள்ள புயலின் தாக்கம் பற்றி தற்போது கணிக்க முடியாது என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.



You may also like