brand logo
BestWeb.LK 2024 logo
வவுனியாவில் 59.56 சதவீத வாக்களிப்பு

வவுனியாவில் 59.56 சதவீத வாக்களிப்பு

06 May 2025 | Rinosharaai


 

வவுனியாவில் 59.56 சதவீத வாக்குப் பதிவு இடம்பெற்றுள்ளதாக மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி பீ.ஏ.சரத்சந்திர தெரிவித்தார்.

 

வாக்களிப்பு நடவடிக்கைகள் முடிவடைந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்திருந்தார். 

 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

 

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று (06) காலை ஆரம்பமாகிய நிலையில் வவுனியாவில் அமைதியான முறையில் வாக்களிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்றது. காலை முதல் மக்கள் ஆர்வத்துடன் சென்று வாக்களித்த நிலையில் மாலை 4 மணியுடன் வாக்களிக்கும் நடவடிக்கை நிறைவிற்கு வந்தது.

 

வவுனியா மாநகரசபை, வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை, வெண்கல செட்டிகுளம் பிரதேச சபை, வவுனியா வடக்கு பிரதேச சபை, வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபை ஆகிய 5 சபைகளுக்கும் 86 வட்டாரங்களில் 103 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 1231பேர் இத்தேர்தலில் போட்டியிட்டனர்.

 

மாவட்டத்தில் ஒரு இலட்சத்து 29ஆயிரத்து 293 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்த நிலையில் 154 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு இடம்பெற்றது. 56 வாக்கெண்ணும் நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளது. பொலிஸாரின் பாதுகாப்புக்கு மத்தியில் அமைதியான வாக்களிப்பு இடம்பெற்றது.

 

இதேவளை, வாக்களிப்பு நடவடிக்கை முடிவடைந்துள்ள நிலையில் வாக்களிப்பு நிலையங்களில் இருந்து வாக்குப்பெட்டிகள் அனைத்தும் அந்தந்த வட்டாரங்களில் ஏற்ப்பாடு செய்யப்பட்டுள்ள வாக்கு எண்ணும் நிலையத்திற்கு கொண்டுசெல்லும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. குறிப்பாக மாலை 4.30 மணிக்கு வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

 

தேர்தலின் இறுதி முடிவுகளை நாளையதினம் (07) அதிகாலைக்குள் வெளியிடுவதற்கு எதிர்பார்த்துள்ளோம். இதேவேளை வாக்களிப்பு செயற்பாடுகள் சுமூகமாக இடம்பெற்றுள்ளதுடன் மாவட்டத்தில் பாரதூரமான தேர்தல் வன்முறைகள் எவையும் பதிவுசெய்யப்படவில்லை. அமைதியான தேர்தலுக்கு ஒத்துழைத்த அனைத்து தரப்பினருக்கும் நன்றி என்றார்.

 

சி.திவியா


You may also like