brand logo
BestWeb.LK 2024 logo
பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கம்

பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கம்

12 February 2024 | Mahendran Dinush Khan

கிழக்கு ஆப்பிரிக்காவின் தீவு நாடான மடகஸ்கரில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த ஆண்டு 600 சிறுமிகள்/குழந்தைகள் பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நடப்பாண்டில் கடந்த ஜனவரி மாதம் மட்டும் 133 சிறுமிகள்/குழந்தைகள் பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.


குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றங்கள் அதிகரித்துவருவதால் குற்றங்களை தடுக்கவும், குற்றவாளிகளுக்கு தண்டனையை அதிகரிக்கவும் மடகஸ்கர் அரசு அதிரடி முடிவெடுத்துள்ளது.

அதன்படி, குழந்தைகளுக்கு எதிராக பாலியல் வன்கொடுமை குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கம் செய்ய மடகஸ்கர் அரசு சட்டம் கொண்டுவந்துள்ளது.


குற்றவாளிகளுக்கு இரசாயன ரீதியிலும், அறுவை சிகிச்சை மூலமாகவும் ஆண்மை நீக்கம் செய்யும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ள சட்டம் இன்று மடகஸ்கர் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.


தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள சட்டம் அந்நாட்டின் உயர் அரசியலமைப்பு நீதிமன்றத்தின் அங்கீகாரத்தை பெற்று பின்னர் ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பப்படவுள்ளது. ஜனாதிபதி ஒப்புதல் அளித்த உடன் சட்டம் அமுலுக்கு வரவுள்ளது.


இந்த சட்டத்தின்படி, 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் குற்றவாளிக்கு அறுவை சிகிச்சை மூலம் ஆண்மை நீக்கப்படும். 10 முதல் 13 வயதிற்கு உள்பட்ட குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் குற்றவாளிக்கு அறுவை சிகிச்சை மூலமோ அல்லது இரசாயன முறையிலோ ஆண்மை நீக்கப்படும். 14 முதல் 17 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் குற்றவாளிக்கு இரசாயன முறையில் ஆண்மை நீக்கப்படும். ஆண்மை நீக்கம் மட்டுமின்றி பாலியல் வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்படும் வகையில் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. மடகஸ்கர் அரசு கொண்டுவந்துள்ள சட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


You may also like