brand logo
BestWeb.LK 2024 logo
கல்முனையில் திடீர் சோதனை – பல உணவகங்களுக்கு எதிராக நடவடிக்கை

கல்முனையில் திடீர் சோதனை – பல உணவகங்களுக்கு எதிராக நடவடிக்கை

02 April 2024

 

புனித நோன்பு காலங்களில் சுகாதாரமற்ற சிற்றுண்டிகள் பொதுமக்களுக்கு விற்கப்படுவதை தடுத்து உணவுப்பாதுகாப்பு மற்றும் சுத்தமான உணவை பொதுமக்களுக்கு உறுதிப்படுத்தல் என்ற நோக்கில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஸஹீலா இஸ்ஸதீனின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலில் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ஜே.கே.எம். அர்ஷாத் காரியப்பர் தலைமையில் தொடர்ந்தும் திடீர் சோதனை நடவடிக்கை இடம்பெற்று வருகிறது.

 

தொடர்ந்தும் இன்று (02) நான்காவது நாளாகவும் சாய்ந்தமருது பிரதேச உணவகங்கள், சந்தை, சில்லறை கடைகள், மொத்த விற்பனை நிலையங்கள், சிறிய சூப்பர் மார்க்கட்டுகள் போன்றவற்றில் சோதனை நடவடிக்கை இடம்பெற்றது.

 

இதன்போது பாவனைக்கு பொருத்தமற்ற பழுதடைந்த மீன்கள் எரிபொருள் ஊற்றி அழிக்கப்பட்டதுடன் உணவகங்கள், வெதுப்பகங்களில் மனித பாவனைக்கு பொருத்தமற்ற மட்டும் எலி எச்சங்கள் காணப்பட்ட உணவு பண்டங்கள் கைப்பற்றப்பட்டன.

 

கடந்த காலங்களில் சாய்ந்தமருது பிரதேச உணவகங்கள், சந்தை, சில்லறை கடைகள், மொத்த விற்பனை நிலையங்கள், சிறிய சூப்பர் மார்க்கட்கள் போன்றவற்றை பார்வையிட்ட சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய சுகாதார குழுவினர் உரிமையாளர்களுக்கும், உணவு தயாரிப்பவர்களுக்கும் சுகாதார நடைமுறைகளை பேணி உணவுகளை தயாரிக்குமாறும், உணவங்கள் சுத்தமில்லாது இருத்தல், உணவு கையாளுகையில் முறையான ஒழுங்கீன்மை, நீண்ட நாட்களுக்கு பொருத்தமில்லாதவாறு உணவுகளை தேக்கி வைத்தல், சமையல் பாத்திரங்கள் மற்றும் சமையல் பொருட்களின் தரம் போன்றவற்றை சுகாதார முறைப்படி பேணுமாறும் ஆலோசனை வழங்கியதுடன் அறிவித்தல்களை பேணி நடக்காத உணவகங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்திருந்தனர். அதன் தொடர்ச்சியாகவே இந்த சோதனை நடவடிக்கை இடம்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

 

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய மேற்பார்வை பொதுச்சுகாதார பரிசோதகர் ஏ.எல்.எம். ஜெரின் உட்பட காரியாலய உத்தியோகத்தர்கள் பலரும் இந்த திடீர் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

நூருல் ஹுதா உமர்

 



You may also like