brand logo
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தரமற்ற உணவு - பிரதிப் பணிப்பாளர்

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தரமற்ற உணவு - பிரதிப் பணிப்பாளர்

16 April 2024 | k.yoshiya

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் நோயாளிகள் மற்றும் ஊழியர்களுக்கு வழங்கப்படும் கணிசமான அளவு உலர் உணவுப் பொருட்கள் தரமற்றவை என வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் டொக்டர் ருக்ஷான் பெல்லான தெரிவித்துள்ளார்.


மேலும், சில சமயங்களில் நோயாளிகளின் உணவுக்காக வழங்கப்படும் காய்கறிகள் கிட்டத்தட்ட அழுகிய நிலையில் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


நோயாளிகள் மற்றும் ஊழியர்களுக்கு வழங்கப்படும் தேநீர் உணவிற்கு பயன்படுத்தப்படும் மாவு மற்றும் சீனியும் காலாவதியானதாகவும் தெரிவித்தார்.


சில சமயங்களில் சம்பந்தப்பட்ட ஒப்பந்த நிறுவனம் தொழிலாளர்களின் உணவுக்கு தகுதியற்ற மீன்களைக் கொண்டு உணவு வழங்குவதாக அவர் தெரிவித்தார்.


இது குறித்து பல ஊழியர்கள் முறைப்பாடு செய்துள்ளதாகவும் ஆனால் சுகாதார அமைச்சினால் முடிவெடுக்கப்பட வேண்டும் எனவும் வைத்தியசாலை அதிகாரிகளால் எதுவும் செய்ய முடியாது எனவும் தெரிவித்தார்.


இது தொடர்பில் சுகாதார அமைச்சுக்கு பல தடவை கடிதங்கள் மூலம் தெரியப்படுத்திய போதிலும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.


வைத்தியசாலைக்கு உணவு வழங்கும் சம்பந்தப்பட்ட ஒப்பந்த நிறுவனமே சிறைச்சாலைகள், இராணுவ முகாம்கள் மற்றும் அரச நிறுவனங்களுக்கும் உணவு விநியோகம் செய்வதாகவும் அவர் தெரிவித்தார்.


உலர் உணவுப் பொருட்களுக்கு மாதாந்தம் 76 மில்லியனும் மீன்களுக்கு 15 மில்லியனும் சம்பந்தப்பட்ட ஒப்பந்த நிறுவனத்திற்கு வழங்கப்படும் என பிரதிப் பணிப்பாளர் குறிப்பிட்டார்.



You may also like