brand logo
8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது லக்னோ

8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது லக்னோ

19 April 2024



ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் 34 ஆவது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் நாணயசுழற்சியில் வென்ற லக்னோ அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.


அதன்படி சென்னை அணிக்கு ஆரம்ப வீரராக களமிறங்கிய ரச்சின் ரவீந்திரா, தான் எதிர்கொண்ட முதல் பந்திலேயே ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். இவருடன் துவக்க வீரராக களமிறங்கிய ரஹானே 24 பந்துகளில் 36 ஓட்டங்களை குவித்து ஆட்டமிழந்தார்.


ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிந்த போதிலும் ரவீந்திர ஜடேஜா சிறப்பாக ஆடி 57 ஓட்டங்களை குவித்தார். கடைசியில் களமிறங்கிய எம்.எஸ். டோனி 9 பந்துகளில் 28 ஓட்டங்களை குவித்தார். இதன் மூலம் சென்னை அணி போட்டி முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 176 ஓட்டங்களை குவித்தது.


177 ஓட்டங்களை துரத்திய லக்னோ அணிக்கு கே.எல். ராகுல் மற்றும் குயிண்டன் டி கொக் நல்ல ஆரம்பத்தைக் கொடுத்தனர். இருவரும் நிதானமாக ஆடி ஓட்டங்களை குவித்தனர். இந்த ஜோடி விக்கெட் இழப்பின்றி 100 ஓட்டங்களை கடந்தது. 15 ஓவரில் 134 ஓட்டங்களை குவித்த போது குவிண்டன் டி கொக் தனது விக்கெட்டை இழந்தார்.


19 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 180 ஓட்டங்களை குவித்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சி.எஸ்.கே. சார்பில் முஸ்தாஃபிசுர் மற்றும் பத்திரனா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.



You may also like