2021ஆம் ஆண்டின் முதலாவது நாடாளுமன்ற அமர்வு ஜனவரி 05 ஆம் திகதி
எதிர்வரும் 2021ஆம் ஆண்டின் முதலாவது நாடாளுமன்ற அமர்வு வாரத்தை எதிர்வரும் ஜனவரி மாதம் 5ஆம் திகதி முதல் 8ஆம் திகதி வரை கூட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இன்று கூடிய நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு இதனை தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் நாடாளுமன்ற அறிக்கையிடலுக்காக மீண்டும் ஊடகங்களை நாடாளுமன்ற கட்டிடத் தொகுதிக்குள் அனுமதிப்பதற்கும் இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எனினும் கொவிட் 19 சுகாதார ஒழுங்குவிதிகளுக்கு அமைய தயாரிக்கப்பட்டுள்ள வழிகாட்டல்களின் கீழ் நாடாளுமன்ற கட்டடத் தொகுதிக்குள் பிரவேசிப்பதற்கு ஊடகவியலாளர்களுக்கு அனுமதி வழங்கப்படும்.
எதிர்வரும் ஜனவரி 5ஆம் திகதி முதல் 7ஆம் திகதி வரை முற்பகல் 10 மணி முதல் பிற்பகல் 4.30 வரையில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் இடம்பெறும்.
அத்துடன் ஜனவரி 8ஆம் திகதி முற்பகல் 9.30 முதல் பிற்பகல் 4.30 வரை நாடாளுமன்ற கூட்டம் இடம்பெறும் என நாடாளுமன்ற தொடர்பாளர் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.