விசேட பொலிஸ் பாதுகாப்புடன் நீராவியடிப் பிள்ளையார் ஆலய தமிழர் திருவிழா பொங்கல் நிகழ்வு!
– வன்னி செய்தியாளர் –
முல்லைத்தீவு மாவட்டத்தில் பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்சவம் நாளைய தினம் சிறப்பாக இடம்பெற உள்ளது.
இந்நிலையில் குறித்த ஆலய பகுதியில் குடி கொண்டிருந்த பௌத்த துறவி சர்ச்சைக்குரிய விகாரை ஒன்றை நிறுவி தொடர்ச்சியாக குழப்பநிலைகளை ஏற்படுத்தி வந்த நிலையில் ஆலய உற்சவத்துக்கு சவாலாக இன்றைய தினம் பிரித் ஓதும் நிகழ்வில் ஈடுபடுவதாக இருந்தார்.
இந்நிலையில் ஏற்கனவே ஆலயத்தினர் தங்களுடைய வருடாந்த உற்சவத்திற்கான அனுமதிகள் பொலிசாரிடம் பெற்றதன் அடிப்படையில் ஆலய பூஜை நடவடிக்கைகளுக்கு எந்தவித குழப்பங்களும் பௌத்த மதகுரு உள்ளிட்டவர்களால் ஏற்படுத்தப்படாத அளவிற்கு போலீசார் கொண்டுவரப்பட்டு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து இருக்கின்றனர்.
அத்தோடு இன்று அவர்களுடைய பிரித் ஓதும் நிகழ்வுகளை நடத்துவதற்கு வந்த மக்கள் இங்கே குடி கொண்டிருக்கின்ற பௌத்த துறவி உள்ளிட்டவர்களிடம் போலீசார், ஆலயத்தின் பூஜை வழிபாடுகளுக்கு எந்தவித இடையூறுகளும் ஏற்படுத்த வேண்டாம் என தெரிவித்த நிலையில் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றிருக்கின்றார்கள்.
இந்நிலையில் விசேட பொலிஸ் பாதுகாப்புடன் மிகவும் சிறப்பான முறையில் ஆலயத்தினுடைய பொங்கல் நிகழ்வுகள் ஏற்பாடு ஆகியிருக்கின்றது.
நாளை காலை 3 மணிக்கு கோட்டைகேணி பிள்ளையார் ஆலயத்தில் இருந்து மடப்பண்டம் எடுத்து வரப்பட்டு ஆலயத்தில் நாளை மாலை வரை பூசை வழிபாடுகள் இடம்பெற இருக்கின்றது எனவே சிறப்பாக இடம்பெற இருக்கின்ற இந்த பூஜை வழிபாடுகளில் பக்தர்களை வந்து பங்குகொள்ளுமாறு ஆலய நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர்.