“வாங்கும் சம்பளத்திற்கு வேலை செய்யவேண்டும்” – அமைச்சர் ஹரீன் காட்டம் !
– நிர்ஷன் இராமானுஜம் –
இலங்கைக் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் சந்திக ஹத்துருசிங்க மீது மரியாதை வைத்திருப்பதாகக் கூறிய விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ, ஆனபோதிலும் வாங்கும் சம்பளத்துக்குரிய பிரதிபலன் அவசியம் எனவும் தெரிவித்தார்.
நாட்டிலுள்ள தெரிவு செய்யப்பட்ட நூறு பாடசாலைகளுக்கு மைதான சீரமைப்புக்கான இயந்திரங்கள், உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு விளையாட்டுத்துறை அமைச்சில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்து உரைநிகழ்த்துகையில்,
பயிற்றுவிப்பாளரை விலக வேண்டும் என நாம் கோரிக்கை விடுக்கவில்லை. இலங்கை ரூபாவில் சுமார் 79 இலட்ச ரூபா சம்பளக் கொடுப்பனவு என்பது சாதாரண விடயமல்ல, சாதாரண தொகையும் அல்ல. அவ்வாறு சம்பளம் பெறுபவர் அந்த முதலீட்டுக்குரிய ஆரோக்கியமான பிரதிபலனை வழங்க வேண்டும்.
எழுபது இலட்சம் சம்பளம் பெற்று 35 வீதமான போட்டிகளில் வெற்றி பெறுவது முறையல்ல. அவ்வாறெனின் வீரர்களுக்குக் கொடுப்பனவு வழங்கப்படுவது போல வெற்றிபெற்றால் அதற்குரிய கொடுப்பனவை பயிற்சியாளருக்கும் வழங்க வேண்டும் என்ற முறையை கொண்டு வர வேண்டும். தோல்வி அடைந்தால் எதற்கு பெரிய தொகையை கொடுக்க வேண்டும்?
இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இது குறித்து நல்ல தீர்மானம் எடுக்கும் என நினைக்கிறேன். ஐ.சி.சி. பணம் வழங்குகிறது என்பதற்காக உள்நாட்டின் சட்ட விதிமுறைகளை மீறி பணம் வழங்க முடியாது. ஹத்துருசிங்க ஓர் இலங்கையர். அவரை நாம் மதிக்கிறோம். ஆனபோதும் சரியான பிரதிபலனை வழங்க முடியாத ஒருவருக்கு நாம் பெருந்தொகை பணத்தை அள்ளிக் கொடுக்க வேண்டியதில்லை என நினைக்கிறேன்.
ஆதலால், அவருடைய ஒப்பந்தத்தை மீள்பரிசீலனை செய்து சில மாற்றங்களுடன் பணியாற்றுமாறும் அவ்வாறில்லாவிடின் விலகிச் செல்லுமாறும் நான் கூறியிருந்தேன். என்னைப் பொறுத்தவரையில் அது தான் நியாயம் – எனத் தெரிவித்தார் அமைச்சர் ஹரீன்