யுகதனவி ஒப்பந்தத்தினால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் – உயர் நீதிமன்றில் வெளியானது தகவல்
யுகதனவி மின் நிலையம் தொடர்பான ஒப்பந்தத்தினூடாக இலங்கையின் இறைமையை அமெரிக்க நிறுவனத்துக்கு காட்டிக்கொடுக்க நேரிடும் என்றும் இதனால் தேசிய பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்றும் உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் ஜனாதிபதி சட்டத்தரணி மனோஹர த சில்வா சாட்சியமளித்துள்ளார்.
யுகதனவி மின் நிலையத்தில் அரசுக்கு சொந்தமான 40 சதவீத பங்கை அமெரிக்க நிறுவனத்துக்கு வழங்குவது தொடர்பில் அமைச்சரவையில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்தை இரத்து செய்வதற்கு உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்த விசாரணை நடவடிக்கையின்போது நீதிமன்றத்துக்கு இதனை அறிவித்துள்ளார்.
இந்த மனுதொடர்பில் மீண்டும் நாளை (17) அடுத்தக்கட்ட விசாரணைகளுக்கு எடுத்துக்கொள்ளப்படுமென்று உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, புவனேக அலுவிஹாரே, பிரியந்த ஜயவர்தன, விஜித் மலல்கொட மற்றும் எல்.டீ.பீ. தெஹிதெனிய உள்ளிட்ட ஐவரடங்கிய நீதியரசர்கள் குழுவின் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது மனுத் தாக்கலுடன் தொடர்புடைய பிரதிவாதிகளான பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அமைச்சரவை சார்பில் ஆஜராகியிருந்த சட்டமா அதிபர் சஞ்சய ராஜரத்னம், இந்த மனுக்கள் அனைத்தையும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமல் தள்ளுபடி செய்யுமாறு கோரி ஆட்சேபனைகளை வெளியிட்டிருந்தனர்.
அதற்கமைய, மனுதாரரான இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்கத்தின் சார்பில் ஆஜராகியிருந்த ஜனாதிபதி சட்டத்தரணி மனோஹர த சில்வா நீதிமன்றின் முன்னிலையில் கருத்து தெரிவிக்கையில்,
இந்த ஒப்பந்தத்தினூடாக சமையல் எரிவாயு தொடர்பில் ஏகபோக உரிமை அமெரிக்க நிறுவனத்துக்கு வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுவொரு ஆபத்தான நிலைமையாகும். இந்த ஒப்பந்தத்தினூடாக இலங்கையின் இறைமையை அமெரிக்க நிறுவனத்துக்கு காட்டிக்கொடுக்க நேரிடும்.
அதேபோன்று இதனூடாக தேசிய பாதுகாப்புக்கும் கடும் அச்சுறுத்தல் ஏற்படும். இதேவேளை, கொழும்பு நகரம் மற்றும் ஜனாதிபதி இல்லம் வரையிலான கடற்பரப்புகளில் பாரிய வாயு முனையமொன்றை அமைப்பதற்கு பிரதிவாதியான அமெரிக்க நிறுவனத்துக்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும்.
அந்த முனையத்தினூடாக வெளிநாட்டு போர் கப்பல்களுக்கு வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்க அமெரிக்க நிறுவனத்துக்கு இயல்பாகவே வாய்ப்பு கிடைத்துவிடும். இது இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று நீதிமன்றத்தின் முன்னிலையில் சாட்சியமளித்துள்ளார்.