யானைக்கு வைத்த மின்சார வேலியில் சிக்குண்டு குடும்பஸ்தர் பலி
மட்டக்களப்பு-கொக்கட்டிச்சோலை-கச்சக்கொடி சுவாமிமலை பிரதேசத்தில் ஐந்து பிள்ளைகளின் தந்தை ஒருவர் யானைக்கு வைத்த மின்சார வேலியில் சிக்குண்டு பலியான சம்பவம் நேற்று (30) இடம் பெற்றுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர் கடந்த பத்து வருடங்களுக்கு மேலக தனக்கு சொந்தமான காணியினை பராமரிக்கும் பொருட்டு அங்கு பயிரிடப்பட்ட பயிர்களை பாதுகாத்து வருவதாகவும், அவர் தனது காணியினை சுற்றி யானைகள் உட்பிரவேசிக்காமல் சட்டவிரோதமான முறையில் மின்சார வேலிகளை அமைத்து தனது காணியினை பாதுகாத்து வந்ததாகவும் அறியமுடிகின்றது.
இந்நிலையில் சம்பவ தினத்தன்று வீட்டிலிருந்து தனது காணிக்கு வந்தவர் வீடு திரும்பாத நிலையில், அவரின் மனைவி குறித்த இடத்திற்கு சென்ற போது மின்சாரம் தாக்கிய நிலையில் உயிரிழந்து இருந்ததாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின போது தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மண்முனை நிருபர்