முஸ்லிம் மக்கள் பெரும் பிரச்சினையில் – ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டிய முஸ்லிம் அரசியல்வாதிகள் !
“முஸ்லிம் மக்கள் மீது நாளாந்தம் கெடுபிடிகள் அதிகரித்து வருகின்றன. நீங்கள் விடுதலை செய்த ஞானசார தேரர் இன்று உலமா சபையை விமர்சித்து முஸ்லிம் மக்களுக்கு எதிராக கடுந்தொனியில் பேசி வருகிறார். ஜனாதிபதி என்ற ரீதியில் உடனடியாக நீங்கள் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்”
இவ்வாறு இன்று இரவு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுடன் அவரது இல்லத்தில் நடந்த கூட்டத்தில் முஸ்லிம் அரசியல்வாதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ரவூப் ஹக்கீம் , ரிஷார்ட் பதியுதீன் , பௌசி , பைசர் முஸ்தபா ,அமீரலி ,அப்துல்லா மஹ்ரூப் ,அலிசாஹிர் மௌலானா, பைசல் காசீம் , மன்சூர் , இஸ்மாயில் ஆகிய எம் பிக்கள் இதில் கலந்து கொண்டனர் .
இந்த சந்திப்பில் சுட்டிக்காட்டப்பட்ட விடயங்களை ரிஷார்ட் பதியுதீன் எம் பி விளக்கினார். அவர் கூறியதாவது ,
“ஞானசார தேரரை விடுவித்தது ஜனாதிபதி. இன்று தேரர் எமது உலமா சபையை விமரிசித்து கருத்துக்களை வெளியிடுவது குறித்து நாங்கள் கடும் அதிருப்தியை வெளியிட்டோம்.இதை எங்களால் ஏற்கமுடியாது என்று கூறினோம்.அதேபோல் குருநாகல் டாக்டர் மற்றும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாதவர்களை விடுதலை செய்ய வேண்டுமென வலியுறுத்தினோம்.அவசரகாலச் சட்டத்தை பயன்படுத்தி முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து சுட்டிக்காட்டினோம்.இந்த விடயங்களை கவனமாக கேட்டுக் கொண்ட ஜனாதிபதி அவை தொடர்பில் உரிய நடவடிக்கைகளை எடுப்பதாக எம்மிடம் உறுதியளித்துள்ளார்..” – என்றார் ரிஷார்ட் எம் பி .
ஜனாதிபதியை சந்திக்க முன்னர் இந்த எம் பிக்கள் பிரதமரையும் சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.