முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையாருக்கு தமிழர் திருவிழா வடக்கு கிழக்கு மக்கள் பொங்கல் பொங்கி வழிபாடு !
– வன்னி செய்தியாளர்-
பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் இன்று தமிழர் திருவிழா எனும் பெயரில் வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் இணைந்து பொங்கல் நிகழ்வுகள் இடம்பெற்றன.
அந்தவகையில் பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தின் தமிழர் திருவிழா பொங்கல் உற்சவம் இன்று அதிகாலை கோட்டைக்கேணி பிள்ளையார் ஆலயத்தில் இருந்து மடப்பண்டம் எடுத்து வருவதோடு ஆரம்பமாகியது.
இன்று அதிகாலை 3 மணி அளவில் சிங்களத்தால்ஆக்கிரமிக்கப்பட்டுவரும் கோட்டைக்கேணி பிள்ளையார் ஆலயத்தில் மடை பரவி பூசைகள் இடம்பெற்று அதனைத் தொடர்ந்து அங்கிருந்து மடப்பண்டம் எடுத்து வரப்பட்டு நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்துக்கு கொண்டுவரப்பட்டு அங்கே வருடாந்த பொங்கல் ஆரம்பாமாகியது.
விசேடமாக ஆக்கிரமிப்பாளர்களுக்கு எமது நிலவுரிமையை எடுத்துக்கூறும் முகமாக வடக்கு கிழக்கு மாகாணங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் இந்த வழிபாட்டில் கலந்துகொண்டு பொங்கல் பொங்கி வழிபட்டனர் .
நூற்றுக்கணக்கான பொலிஸார் குவிக்கப்பட்டு நடைபெற்ற பொங்கல் நிகழ்வில் தென்பகுதியிலிருந்து வருகைதந்த சிங்கள ராவய அமைப்பினரால் வழிபாட்டுக்கு வந்த மக்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது . வருகைதந்த அனைவரையும் சிங்கள ராவய அமைப்பினரும் பௌத்த பிக்குவின் உதவியாளரும் புகைப்படம் எடுத்து அச்சுறுத்தும் விதத்தில் நடந்துகொண்டனர் .
ஆலயத்துக்கு எதிரே உள்ள இராணுவமுகாம் முன்பாக காவலரண் அமைக்கப்பட்டு இராணுவத்தினர் நிறுத்தப்பட்டிருந்தனர் . இராணுவத்தின் கண்காணிப்புக்கு மத்தியில் மக்கள் பொங்கல் பொங்கி வழிபாடுகளில் ஈடுபட்டனர் .
இந்த பொங்கல் நிகழ்வில் பல தமிழ் அரசியல் தலைவர்களும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது .