மீண்டும் பஸ்களில் பழைய கட்டணத்தை அறவிட நேரிடலாம் – திலும் அமுனுகம
எதிர்காலத்தில் பஸ் பயணிகளுக்காக புதிய கட்டண முறைமை அறிமுகப்படுத்த வேண்டி ஏற்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
பஸ் ஊழியர்கள் பொறுப்புடன் செயற்படாவிட்டால் எதிர்காலத்தில் இந்த கட்டண முறைமை அறிமுகப்படுத்தப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
ஆசனங்கள் தொடர்பான சட்டங்களை மீறும் பஸ்களை கையகப்படுத்துமாறு பொலிஸ்மா அதிபருக்கு தான் எழுத்துமூலமாக அறிவித்துள்ளதாகவும். பெரும்பாலான இடங்களில் இவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. கிராமப்புற வீதிகளில் இந்த சட்டம் பெரும்பாலும் மீறப்படுவதாக தெரியவருகிறது.
இதனை நிறுத்தாவிடின் எதிர்வரும் வாரமாகும்போது, பஸ்களில் நின்றவாறு பயணிப்பதற்கு வேறு கட்டணங்களை அறிமுகப்படுத்த எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நாட்டின் நிலைமையை கருத்திற்கொண்டு, பஸ் ஊழியர்கள் தொடர்பில் சிந்தித்து கட்டண அதிகரிப்பை வழங்கினோம். அவ்வாறாயின் அவர்கள் எமது நிபந்தனைகளுக்கு இணங்க வேண்டும். இல்லையாயின், பழைய கட்டணத்தை அமுலாக்குவதற்கு நாம் எதிர்பார்க்கிறோம். பஸ்களில் நின்று பயணிப்பவர்களை போன்றே அமர்ந்து பயணிப்பவர்களும் பழைய கட்டணத்தை செலுத்தலாம்.
மீண்டும் அவர்கள் எம்மிடம் வந்து கட்டணத்தை மாற்றக்கோரினால், நாம் அதனை மேற்கொள்ளமாட்டோம் என்றார்.