மனித உரிமை மீறலுக்கு இடமில்லை- ஜனாதிபதி
கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா தொற்று காரணமாக இலங்கைக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டும் வருவதற்கு, கட்சி பேதங்களின்றி அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது அவசியம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
9ஆவது நாடாளுமன்றத்தின் இரண்டாவது அமர்வில் கலந்துகொண்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உரை நிகழ்த்தும் போதே இதனைத் தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், தனது ஆட்சியில் மனித உரிமை மீறலுக்கு இடமில்லை எனவும், நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
யுத்தத்தின் போது காணாமல் போனவர்கள் தொடர்பில் நியாயமான விசாரணைகள் மேற்கொள்ளப்படும் எனவும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார்.
தாம் பாதுகாப்பு செயலாளராக இருந்த காலப்பகுதியில் வடக்கு கிழக்கில் பாதுகாப்புத் தரப்பினரால் கைப்பற்றப்பட்ட காணிகளில் 90 சதவீதமானவை விடுவிக்கப்பட்டதாகவும், இன்னும் விடுவிக்கப்படாத காணிகள் விரைவில் விடுவிக்கப்படும் என்றும் கூறினார்.
முன்னாள் விடுதலைப் புலிகளின் போராளிகளை சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு அமைய விடுவிப்பதற்குக் கடந்த நாட்களில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
எதிர்காலத்திலும் அவ்வாறான பலரை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் பயங்கரவாத தடை சட்டத்தில் காலத்துக்கு ஏற்ற மாற்றங்களைச் செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அரசியல் இலாபத்துக்காக மக்களை உசுப்பேற்றும் செயற்பாடுகளை நிறுத்துமாறும் ஜனாதிபதி கோரினார்.