பரீட்சைகள் இடம்பெறும் திகதி தொடர்பில் அடுத்த வாரம் இறுதித் தீர்மானம்
பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் பரீட்சைகள் இடம்பெறும் திகதி தொடர்பிலான இறுதித் தீர்மானத்தை அடுத்த வாரத்திற்குள் அறிவிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இன்று (02) காலை இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட வேளையிலேயே அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் நேற்று (01) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது ஜனாதிபதி மற்றும் பிரதமர், கல்வியமைச்சர் டலஸ் அழகப்பெருமவுடன் இதுதொடர்பில் நீண்ட பேச்சுவார்த்தயைில் ஈடுபட்டதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய எதிர்வரும் வாரம், பரீட்சை தொடர்பான இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் எனவும் கல்வி அமைச்சர் கூறியுள்ளார்.
சுகாதார அறிவுறுத்தல்களுக்கு அமைய ஆரம்பப் பாடசாலைகள் மற்றும் முதலாம், இரண்டாம் தர மாணவர்களுக்கு முகக்கவசம் அணிவது கட்டாயம் என்பதனால் மாணவர்களில் உயிர் பாதுகாப்பு தொடர்பில் கூடிய கவனம் செலுத்தி, அனைத்து பாடசாலைகளையும் ஆகஸ்ட் 10 ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் இதன்போது தெரிவித்துள்ளார்.
இதேவேளை மாணவர்கள் தொடர்பில் கூடுதல் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்பதனால் அவசரப்பட்டு எந்தத் தீர்மானத்தையும் மேற்கொள்ள முடியாது எனவும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.