பசறை பேருந்து விபத்துக்கான காரணம் வெளியானது
இன்று (20) அதிகாலை பசறையில் இடம்பெற்ற பேருந்து விபத்துற்கான காரணம் சாரதியின் கவனயீனமே என பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
பொலிஸ் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.
மேலும், விபத்து இடம்பெற்ற இடத்தில் சுற்றுச்சூழல் சான்றுகளை சோதனையிட்டதில் சாரதிக்கு பேருந்தை கட்டுப்படுத்த முடியாமல் போயுள்ளமை தெரியவந்துள்ளது. எவ்வாறாயினும் குறித்த பேருந்து தொடர்பில் தொழிநுட்ப ஆய்வொன்று மோட்டார் வாகன பரிசோதகர்களால் மேற்கொள்ளப்படவுள்ளது.
மோட்டார் வாகன சடடத்தின் விதிகளின்படி எவ்வாறான சந்தர்ப்பத்திலும் விபத்தொன்றை தடுப்பது சாரதியின் பொறுப்பு மற்றும் கடமையாகும். சாரதியின் இருக்கையில் நபரொருவர் சிக்கியிருந்தார். அவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டார். ஆரம்பகட்ட தகவலின் படி பேருந்தின் சாரதி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்ட போதும் சாரதியின் இருக்கையில் உயிரிழந்திருந்த நபர் சாரதி அல்ல என தெரியவந்துள்ளது.
மேலும் சாரதி கவலைக்கிடமான நிலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். காயமடைந்தவர்கள் தற்போது பசறை மற்றும் பதுளை வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.
குறித்த விபத்தில் உயிரிழந்த நபர்களின் சடலங்கள் பிசிஆர் பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளன.
இதேவேளை, விபத்து இடம்பெறும் போது பேருந்துக்கு எதிர்திசையில் வருகைத் தந்த டிப்பர் வாகனத்தின் சாரதி, அங்கிருந்த தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.