நேர்மையான உழைப்பே உயர்வைத் தரும்!- சாய்ந்தமருது பரீட் ஹாஜியார்
சுனாமியால் உயிர்கள், உடைமைகள் இழந்த அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேச மக்களின் மிக முக்கிய தேவையாக இருந்த காணி பிரச்சினைக்குத் தீர்வை பெற்றுக்கொடுத்தவரும், தரம் 05 வரை மட்டுமே கற்றிருந்தாலும் தனது 15 பிள்ளைகளை சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் உயர்த்திய தந்தையாகவும் கடின உழைப்பால் உயர்ந்த வியாபாரியாகவும், தனது செல்வத்தில் ஏழை மக்களுக்கு வாரிவழங்கும் ஒருவராகவும் தன்னை நிரூபித்த பிரதேச மக்களினால் பரீட் ஹாஜியார் என அறியப்படும் அகமதுலெவ்வை அப்துல் பரீட் தமிழன் வார இதழுக்கு வழங்கிய செவ்வி !
உங்களை பற்றிய அறிமுகத்தைக் கூறுங்கள்?
சாய்ந்தமருதைச் சேர்ந்த பிரபல ஆயுர்வேத வைத்தியர் (பிரதேச மக்களினால் பரிசாரி என அழைக்கப்பட்டவர்) உதுமாலெப்பை அகமதுலெவ்வைக்கும் சேகு இஸ்மாயில் ஆமினா உம்மாவுக்கும் பிறந்த ஐந்து பிள்ளைகளில் மூத்த பிள்ளையாக பிறந்த அகமதுலெவ்வை அப்துல் பரீட் ஆகிய எனக்கு தற்போது 55 வயதாகின்றது. எனக்கு பௌசியா, பஸீனா என்ற இரண்டு இளைய சகோதரிகளும், பாரூக், பர்சான் எனும் இரண்டு சகோதரர்களும் இருக்கிறார்கள். ஏ.எல்.பாரூக் எனும் எனது சகோதரர் ஆசிரியராக அரச பாடசாலைகளில் கடமையாற்றி வருகிறார். மற்றைய சகோதரர் பர்சான் கட்டட நிர்மாணத்துறையில் கற்கைநெறிகளை பூர்த்திசெய்துள்ளார். நான் காணிகளை வாங்கியும் விற்றும் கொடுக்கும் தொழிலை இப்போது வாழ்வாதாரமாகக்கொண்டுள்ள அதேவேளை, ஏனைய வியாபாரிகளுடன் இணைந்து வியாபார நடவடிக்கைகளுடன் ஈடுபடுவதனூடாகவும் வருமானமீட்டி வருகின்றேன். கடந்த 25 வருடங்களாக இத்தகைய வியாபார தொழில்களிலேயே ஈடுபட்டு வருகின்றேன்.
எனக்கு முதல் திருமணத்தின் மூலம் 12 பிள்ளைகளும், 2014ஆம் ஆண்டில் ஒரு விதவைப் பெண்னை திருமணம் முடித்ததன் மூலம் ஒரு பிள்ளையுமாக மொத்தம் 13 பிள்ளைகள் உள்ளனர். இதில் 10 பெண்பிள்ளைகள் என்பதனால் அவர்களது கல்வி, பாதுகாப்பு மற்றும் திருமணம் என பாரிய பொறுப்புகளை சுமந்தவண்ணம் வாழ்ந்து வருகின்றேன்.
உங்களின் குடும்பத்தினரை பற்றி கூறுங்கள்?
18 குடும்ப அங்கத்தவர்களைக்கொண்ட மிகப்பெரிய குடும்பம் என்னுடையது. நான் முதல் திருமணம் செய்த என்னுடைய மனைவியின் பெயர் அப்துல் வஹாப் சித்தி ஸாபிரா. கிழக்கில் புகழ்பெற்ற முத்தலிபு வைத்தியரின் குடும்பத்தைச் சேர்ந்த பெண்னே என்னுடைய முதல் மனைவி. அடுத்ததாக காத்தான்குடியில் ஒரு விதவைப் பெண்ணை திருமணம் செய்துள்ளேன். 43 வயதான ஆதம்லெப்பை சம்ஸா வேகம் என்பது என்னுடைய இரண்டாவது மனைவியாவார். இருவருடனும் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறேன்.
எனது முதல் மனைவிக்கும் எனக்குமான மொத்த குழந்தைகள் பதின்மூன்று. அதில் மூத்த மகள் பாத்திமா சுமையா – அவர் இலங்கை தென்கிழக்குக் பல்கலைக்
கழகத்தில் கலைமாணி பட்டத்தை முடித்து அக்கரைப்பற்று பதுரியா வித்தியா லயத்தில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். அவரது கணவர் ஆங்கில ஆசிரியராக சம்மாந்துறை மத்திய கல்லூரியில் பணியாற்றி வருகிறார். சட்டக்கல்வியை முடித்துக்கொண்டு இப்போது சட்டத்தரணியாக பிரமாணம் செய்ய சகல முயற்சிகளையும் செய்து வருகிறார். இரண்டாவது மகள் பாத்திமா அஸ்மா – தன்னுடைய மருத்துவக் கல்வியை ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் முடித்துக்கொண்டு இப்போது கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் வைத்தியராக கடமையாற்றி வருகிறார்.
அவரது கணவரும் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் வைத்தியராக கடமையாற்றி வருகிறார். மூன்றாவது மகள் பாத்திமா ஆயிஷா – கொழும்பு பல்கலைக்கழகத்தில் யுனானி மருத்துவக் கல்வியை கற்றுவருகிறார். அவர் பொறியியலாளரை திருமணம் செய்துகொண்டுள்ளார். நான்காவது பிள்ளையான என்னுடைய மகன் முஹம்மட் யாஸீர் – மாவடிப்பள்ளி மற்றும் அக்கரைப்பற்று அரபுக் கலாசாலைகளில் தன்னுடைய உலமா கற்கைகளை முடித்து இன்று அல்ஹாபிழாகவும், மௌலவியாகவும் இருந்துவருகிறார் அவரும் திருமணம் செய்துகொண்டுள்ளார். ஐந்தாவது பிள்ளை பாத்திமா – சம்மாந்துறை தொழில்நுட்பக் கல்லூரியில் பயின்று ஆங்கில பயிற்சி ஆசிரியையாக கடமையாற்றி வருவதுடன், அரச வர்த்தகக் கூட்டுத்தாபன உத்தியோகத்தரை திருமணம் செய்துகொண்டுள்ளார். ஆறாவது பிள்ளையான மகன் முஹம்மட் உஸாமாவும் மாவடிப்பள்ளி அரபுக் கலாசாலையில் தன்னுடைய உலமா கற்கைகளை முடித்து இன்று அல்ஹாபிழாக இருந்துவருகிறார். என்னுடைய இரண்டு மகன்களும் உலமாக்களாக இருந்தாலும் கூட என்னுடைய தொழில் மற்றும் வியாபார நடவடிக்கைகளில் கண்ணியத்துடன் இணைந்து பணியாற்றி வருகிறார்கள்.
ஏழாவதாக பிறந்தது பாத்திமா ஜுவைரியா எனும் மகள். அவர் இறுதியாக வெளியான பெறுபேறுகளின் அடிப்படையில் சித்த மருத்துவத்துறையில் கல்வி பயிலும் வாய்ப்பை கிழக்கு பல்கலைக்கழகத்தில் பெற்றுள்ளார். இருந்தாலும் மற்றுமொரு தடவை முயற்சிசெய்து பார்க்க எண்ணியுள்ளார். எட்டாவதாக பிறந்த மகன் முஹம்மட் உமைர் காலமாகிவிட்டார். ஒன்பதாவது குழந்தை பாத்திமா ருஹய்யா எனும் மகள். இப்போது கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் உயர்தரம் கற்று வருகிறார். பத்தாவது பிள்ளையான மகள் பாத்திமா ஜெய்னப் கடந்த சாதாரண தரப் பரீட்சையில் 09 (யு ) திறமை சித்திகளை பெற்று இப்போது விஞ்ஞானப் பிரிவில் உயர்தரம் கற்று வருகிறார். பதினோராவது பிள்ளை முஹம்மட் ஹ{பைப் என்பவர். இன்னும் சில மாதங்களில் சாதாரண தரப் பரீட்சை எழுதத் தயாராகி வருகிறார். பன்னிரண்டாவது பிள்ளை பாத்திமா அம்மாரா எனும் மகள். அவர் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் திறமை சித்தி பெற்றுள்ளதுடன் மட்டுமன்றி குர்ஆனை மனனமிட்ட அல்-ஹாபிழாகவும் திகழ்கிறார். பதின்மூன்றாவது குழந்தை பாத்திமா ஹாஜரா. அந்த குழந்தையும் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சிறந்த பெறுபேற்றை பெற்றுள்ளது.
காத்தான்குடியில் நான் திருமணம் செய்த என்னுடைய மனைவிக்கு ஏற்கனவே இரண்டு பெண்பிள்ளைகள் இருக்கிறார்கள் அவர்களுக்கு நான் வளவுகளை வாங்கி வீடுகட்டி கொடுத்து திருமணமும் செய்து வைத்துள்ளேன். அதில் எனக்கு பிறந்த சொந்த மகள் ஒன்று இருக்கிறது. அதன் பெயரும் பாத்திமா ஹாஜரா என்றே வைத்துள்ளேன். இப்போது அந்த குழந்தை பாலர் பாடசாலைக்கு சென்று கொண்டிருக்கிறது. நான் ஐந்தாம் தரம் வரை மட்டுமே கல்விகற்றுள்ளேன். ஆனால், இவ்வாறு என்னுடைய சகல குழந்தைகளும் இறைவனின் உதவியினால் நல்ல திறமையான பிள்ளைகளாக உருவாகியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
சமகாலத்தில் உள்ள நெருக்கடி நிலைகளை சமாளித்துக்கொண்டு 13 திறமையான பிள்ளைகளை உருவாக்கியது கஷ்டமாக தெரியவில்லையா?
இறைவனை பயந்தவனாக நான் முன்னெடுத்த என்னுடைய வியாபாரம் எனக்கு உறுதுணையாக இருந்தது. என்னுடைய புடவை வியாபாரமாக இருந்தாலும் சரி, காணி வியாபாரமாக இருந்தாலும் சரி எந்த வியாபாரத்திலும் சரி நான் யாரையும் பொய் கூறி ஏமாற்றுவதில்லை. நீண்டநேரம் அர்ப்பணிப்புடன் என்னுடைய வியாபார நடவடிக்கைகளை செய்தமையினால் என்னுடைய தொழிலில் வெற்றி இருந்தது. என்னுடைய பிள்ளைகளின் இவ்வளவு திறமையான வளர்ச்சிக்கு காரணமாக என்னுடைய மனைவியின் திறமையை கூறுவேன். சிறந்த தாயாக தன்னுடைய கடமையை சிறப்பாக செய்திருக்கிறார் என்பதே உண்மை.
உங்களினால் சாய்ந்தமருது பொலிவேரியன் கிராமத்தில் உருவாக்கப் பட்ட தாருஸ்ஸலாம் சிட்டி தொடர்பில் கூறுங்கள்?
கடந்த 2004.12.26ஆம் திகதி ஏற்பட்ட ஆழிப்பேரலை அனர்த்தம் காரணமாக நான் உட்பட எனது குடும்பத்தினரும் பெரும் பாதிப்புக்குள்ளானோம். அந்த வகையில், கடற்கரையிலிருந்து 200 மீற்றர் எல்லைக்குள் அமைந்திருந்த எனது வீடும் அதனோடு ஒட்டிய சிறியளவிலான புடவைக் கடையும் , சில்லறைக் கடைகளும் முற்றாக அழிந்து விட்டன . அக்காலகட்டத்தில் எனக்கு ஏழு பெண்களும் இரண்டு ஆண்களுமாக ஒன்பது பிள்ளைகள் காணப்பட்டார்கள். எனது உறவினர்களில் 22 பேர் குறித்த ஆழிப்பேரலை அனர்த்தம் காரணமாக மரணமடைந்த நிலையில் நானும் எனது சிறுபிள்ளைகளும் தொடர்ச்சியாக ஆழிப்பேரலை அனர்த்தம் ஏற்படுமோ என்ற பீதியுடனேயே வாழ்ந்துவந்தோம்.
எனவே, தொடர்ந்தும் குறித்த 200 மீற்றர் எல்லைக்குள் வசிக்க விரும்பாத நாங்கள் அயலவர்கள் மற்றும் குடும்பத்தினர் சகிதம் அரசினால் சுனாமியால் பாதிக்கப்பட்டோர் குடியமர்த்தப்பட்ட சாய்ந்தமருதின் வொலிவேரியன் கிராமத்துக்கு மேற்குப் பகுதியில் 2005ஆம் ஆண்டு காலப்பகுதியில் எங்களது பிள்ளைகளின் எதிர்காலத்தைக் கருத்திற்கொண்டு காணித்துண்டுகளை கொள்வனவுசெய்ய விரும்பினோம். குறித்த கரைவாகுப்பற்று குடாக்கரைக்கிழல்க் கண்டத்தில் விவசாயம் செய்ய பொருத்தமற்றதென செய்கைபண்ணப்படாது காணப்பட்ட 200 ஏக்கர் காணியை அரசு சுனாமியால் பாதிக்கப்பட்டோரை மீளக்குடியமர்த்தும் நோக்கில் நில அளவை செய்தது. இருப்பினும், கடற்கரையிலிருந்து 65 மீற்றர் பரப்புக்குள் வாழ்ந்த மக்கள் மாத்திரம் நிலஅளவை செய்யப்பட்ட 200 ஏக்கரில் 50 ஏக்கர் காணிக்குள் குடியமர்த்தப்பட்டனர் . இதுவே இன்று வொலிவேரியன் கிராமம் என அழைக்கப்படுகின்றது .
மீதியாக காணப்பட்ட காணிகளின் உரிமையாளர்கள் குறித்த காணிகளை விற்பனைசெய்ய முற்பட்ட வேளையில் குறித்த காணிகளை சுனாமியால் பாதிக்கப்
பட்ட என் போன்றவர்கள் எங்கள் பிள்ளைகளின் எதிர்கால வாழிடத் தேவைகளை பூர்த்திசெய்யும் நம்பிக்கையோடும் எதிர்பார்ப்புடனும் கொள்வனவுசெய்து குடியேற்றத்துக்காக அரசின் முழுமை யானதும் முறையானதுமான அனுமதியை பெறுவதற்காக விவசாய அமைச்சு மற்றும் கமநல அபிவிருத்தித் திணைக்களம் ஆகியவற்றினூடாக கடந்த 16 வருடங்களாக முயற்சித்து வருகின்றோம்.
தாருஸ்ஸலாம் சிட்டி என்பது சாய்ந்தமருது பொலிவேரியன் பிரதேசத்தில் 35 ஏக்கர் பரப்பளவை கொண்டது. சாய்ந்தமருது 14ஆம் கிராம நிலதாரி பிரிவிலும், மாளிகைக்காடு மேற்கு பிரதேசத்திலும் அதன் எல்லைகள் அமைந்துள்ளன. பல மில்லியன் ரூபாவை செலவழித்து சுனாமியினால் இடங்களை இழந்தவர்களுக்காகவும், சனத்தொகை பரம்பலினால் காணிகள், இல்லிடங்கள், வதிவிடங்கள் இல்லாதோருக்கவும் உருவாக்கியுள்ளோம். நாங்கள் இந்தப் பணியை ஆரம்பிக்க முன்னர் விரல்விட்டு எண்ணக்கூடியவர்களே காணி வாங்கி விற்பனை செய்வதை தொழிலாகச் செய்தார்கள். இப்போது நான் தேவையுடைய பலரையும் என்னுடன் இணைத்து அவர்களுக்கு நன்றாக இந்த தொழிலை கற்றுக் கொடுத்துள்ளேன். பலரும் இப்போது இதனால் முன்னேறி வருகிறார்கள். அது எனக்கு திருப்தியாக இருக்கிறது.
உண்மையை கூறப்போனால், சமூக சேவையாக ஆரம்பித்த பணியே இது. சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களின் ஒன்றியம் என்றே நாங்கள் இந்த செயற்
பாட்டை ஆரம்பித்தோம். 800 – 900 குடும்பங்களைக்கொண்ட அந்த ஒன்றியத்தில் தெரிவுசெய்யப்பட்ட நிர்வாகத்தின்படி நானே அந்த ஒன்றியத்தை தலைமை தாங்கினேன். அப்போது என்னுடைய குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் பக்கபலமாக இருந்தார்கள். அதுவே இப்போது விரிவடைந்து பெரிய வரலாறாக உருப்பெற்றுள்ளது.
சமூக சேவைகளில் நீங்கள் முந்தியடித்துக் கொண்டு முன்வரக் காரணம் என்ன ?
நான் என்னுடைய 20 வயது முதலே சமூக சேவைகளில் ஈடுபட ஆரம்பித்துவிட்டேன். என்னுடைய தொழிலில் கிடைக்கும் சிறிய வருமானமாக இருந்தாலும் அதிலிருந்து ஒரு பகுதியை தர்மம் செய்ய பழக்கப்பட்டவன் நான். இறைவனின் பள்ளிவாசல்கள், குர்ஆன் கற்கும் மதரஸாக்களுக்கு உதவிசெய்வது என்பதை வழமையாக பழக்கத்தில் கொண்டுள்ளேன். விதவை பெண்களின் வாழ்வாதாரத்திற்கு உதவி செய்வது, ஏழை மற்றும் அனாதைகளுக்கு உதவுவதில் எப்போதும் முன்னுரிமை கொடுத்து வருகிறேன். அல்-அமானா நற்பணி மன்றம் என்ற அமைப்பை நிறுவி இப்போது அதனூடாக நிறைய உதவிகளை செய்து வருகிறேன்.
பாரிய நோய்வாய்ப்பட்டவர்கள், கல்வி, பிரதேச விளையாட்டுத்துறை அபிவிருத்தி, சமூக, கலை, கலாசார மேம்பாடுகளுக்கும் நாங்கள் உதவி வருகிறோம்.
இதன்மூலம் இறைவனின் கருணையும் மனத்திருப்தியும் கிடைப்பதே எனது சமூக சேவைகளுக்கான பிரதான காரணமாக அமைந்துள்ளது. அதனால் என்னை பல அமைப்புகளும், அரச உயர் அதிகாரிகளும் கடந்த காலங்களில் பாராட்டி கௌரவித்துள்ளமை மகிழ்ச்சியளிக்கிறது.
என்னுடைய குழந்தைகளை இறைவன் கல்வியறிவைக்கொண்டு கௌரவப்படுத்தியதைபோன்று சாய்ந்தமருது மேற்கில் அமைந்துள்ள எங்களின் கனவு நகரமான பொலிவேரியன், தாருஸ்ஸலாம் கிராமத்திலிருந்து எங்களின் உச்சகட்ட முயற்சியை செலுத்தி நிறைய நல்ல மனிதர்களையும், சிறந்த கல்விமான்களையும் உருவாக்க வேண்டும் எனும் கனவை கொண்டுள்ளோம். எங்களுக்கு இறைவன் தந்த – தரப்போகின்ற பொருளாதார வசதிகளைக்கொண்டு நிறைய உதவிகளை எமது நாட்டுக்கும், எங்களின் பிரதேசங்களுக்கும் செய்ய தயாராக இருக்கிறோம். தேவையேற்பட்டால் உள்ள_ர் அரசியலிலும் களமிறங்க தயங்கப்போவதில்லை. அப்படி களமிறங்கினால் மக்கள் எங்களை வெல்லவைப்பார்கள்.
என்னுடைய சகல முன்னெடுப்பு களுக்கும் எனது தொழில் பங்காளிகள், நண்பர்கள், குடும்பத்தினர் பக்கபலமாக இருந்துவருகிறார்கள். அவர்களின் உதவிகளையும் ஆலோசனைகளையும் கொண்டே வரலாற்றின் முக்கிய நிகழ்வு
களை தடம்பதித்துள்ளோம். ஏனையோரும் எங்களை பார்த்து எங்களின் வாழ்க்கையை முன்னுதாரணமாகக்கொண்டு தங்களின் வாழ்க்கையை மேம்படுத்த வேண்டும் என்பதே எங்களின் விருப்பமாக இருக்கிறது.
வியாபாரம், சமூக சேவைகள் தாண்டி நீங்கள் ஆத்மீக பயணங்கள் செய்பவராக இருக்கிறீர்கள் அது உங்களுக்கு எவ்வகையில் அமைந்துள்ளது ?
இளமையிலிருந்தே பள்ளிவாசல் களுடன் நான் தொடர்பை பேணிக்கொண்டவன். குர்ஆனை முழுமையாக ஓதி முடித்துள்ளேன். ஹதீஸ்களை நான் நிறைய மனனமிட் டுள்ளேன். அதனால் இஸ்லாத்தை ஏனையோருக்கும் எத்திவைக்க விரும்பி இஸ்லாமிய பிரசாரங்களை முன்வைத்து வருகிறேன். அதனூடாக பல்லாயிரக்கணக்கான மக்களை சந்தித்துப் பேசியுள்ளேன். அந்த பணிக்காக இலங்கையிலும், இலங்கைக்கு வெளியேயும் நூற்றுக்கணக்கான பள்ளிவாசல்களில் தங்கியிருந்துள்ளேன். இதுவே பொதுமக்கள் என்னுடன் எவ்வித அச்சமுமில்லாது வியாபார நடவடிக்கை களில் ஈடுபடக் காரணம். என்னுடைய ஆத்மீக வாழ்க்கை முறைகளும் பல்லாயிரக்கணக்கான மக்களுடன் வியாபாரம் செய்யும் எனக்கு இறைபாதையே அடை
யாளமாக இருக்கிறது. மார்க்கப்பற்றுடன் இறைவனுக்கு பயந்தவராக நான் வாழ்ந்து கொண்டிருப்பதனால் மக்கள் தைரியமாக என்னுடன் வியாபாரம் செய்கிறார்கள்.
அதுமட்டுமன்றி அதிக பெண்பிள்ளைகளை பெற்றவருடன் வியாபாரம் செய் தால் பரக்கத் (இலாபம்) கிடைக்கும் என்று நம்புகிறார்கள். மக்களின் நம்பிக்கையே என்னுடைய வெற்றியாக இருக்கிறது. நான் ஆத்மீக பயணங்களை மேற்கொண்டு மூன்று நாட்கள், நாற்பது நாட்கள் என இறைவனின் பாதையில் மக்களை நேர்வழிப்படுத்தவும், இஸ்லாத்தின் தத்துவங்களை பொதுமக்களுக்கு எடுத்துரைக்கவும் நாட்டினுள்ளும், நாட்டுக்கு வெளியேயும் பயணித்து கொண்டிருப்பவன். அப்போதெல்லாம் எனக்கு உறுதுணையாக என்னுடைய மனைவி இருந்துள்ளார். பிள்ளைகளையும் சிறப்பாக வளர்த்துக்கொண்டு என்னுடைய வியாபார நடவடிக்கைகளையும் கவனித்து கொள்பவராக இருக்கிறார்.
வியாபாரிகளுக்கு நீங்கள் கூறும் ஆலோசனை என்ன?
வியாபாரிகள் தூய சிந்தனைகொண்டவர்களாக இருப்பதுடன் மக்களுக்கு நாம் விற்னை செய்யும் பொருள் பயனுள்ளதாக அமைந்துள்ளதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். நம்பிக்கை துரோகம் செய்வதும், அதிக இலாபத்திற்கு விற்பனை செய்வதும் கூடாது. மனசாட்சிப்படி வாங்குபவர்கள் திருப்தியடையும் விதமாக வியாபார நடவடிக்கைகள் இடம்பெற வேண்டும். ஏமாற்றுவது கூடாது. என்னுடைய 17 வருட கால அனுபவத்தில் பல்லாயிரக்கணக்கான காணிகள் வாங்கப்பட்டும், விற்கப்பட்டும் உள்ளது. எனது காணி வியாபாரத்தினால் கிடைக்கப்பெற்ற முத்திரை தீர்வை பணத்தினால் கல்முனை மாநகர சபைக்கு பல மில்லியன் வருமானம் கிட்டியுள்ளது.
மாளிகைக்காடு நிருபர்