தேர்தல் இப்போதைக்கு கிடையாது- அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க
தேர்தல் விவகாரங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருப்பதற்கான நேரம் இதுவல்ல அதற்கான சந்தர்ப்பமும் தற்போது இல்லை. பாரிய பொருளாதார நெருக்கடிக்குள்ளேயே நாம் தற்போது சிக்கியுள்ளோம். ஆகவே, இந்தப் பிரச்சினையிலிருந்து முன்னோக்கி செல்ல வேண்டியதே தற்போதுள்ள கட்டாயத் தேவை – என கைத்தொழில் அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க தெரிவித்தார்.
தமிழன் வார இதழுக்கு வழங்கிய செவ்வியின் போதே இதனைக் குறிப்பிட்டார். அவருடனான நேர்காணலின் முழு விபரம் வருமாறு,
புதிய அமைச்சுப் பதவியொன்று உங்களுக்கு கையளிக்கப்பட்டுள்ளது. அமைச்சின் நடவடிக்கைகள் முறையாக முன்னெடுக்கப்படுகின்றனவா?
வெற்றிகரமாக எனது கடமைகளை ஆரம்பித்துள்ளேன். தொழிற்றுறையில் புதிய மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கையிலேயே இந்த அமைச்சை பொறுப்பேற்றுள்ளேன். எனது அiமைச்சின் கீழுள்ள நிறுவனங்கள் தொடர்பான தகவல்களை திரட்டி வருகிறோம்.
அமைச்சின் கீழுள்ள நிறுவனங்கள் தொடர்பில் சரியான தகவல்களை திரட்டிக்கொள்ள வேண்டியதே தற்போதைய நிலைமையில் முக்கிய தேவையாகவுள்ளது. அதனைத் தொடர்ந்து அமைச்சின் நடவடிக்கைகளை எதிர்வரும் காலங்களில் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல எதிர்பார்த்துள்ளேன்.
உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அமைச்சினூடாக எவ்வாறான கடமைகளை முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளீர்கள்?
கைத்தொழில் அமைச்சே எனக்கு கையளிக்கப்பட்டுள்ளது. நாட்டை அபிவிருத்தியடையச் செய்யக்கூடிய பல்வேறு தொழிற்சாலைகள் இருக்கின்றன. இவ்வாறு அபிவிருத்திச் செய்யக்கூடிய தொழிற்சாலைகளை ஊக்குவிப்பதனூடாக எமது உற்பத்தித்துறையை மேலும் ஊக்குவிக்கக்கூடியதாக இருக்கும்.
அதேபோன்று நாடளாவிய ரீதியில் அநேகமான சிறியளவிலான தொழிற்சாலை உரிமையாளர்கள் இருக்கிறார்கள். அவர்களை பொருளாதார ரீதியாகவும், நிவாரணங்களினூடாகவும் ஊக்குவித்தால் அவர்களினூடாக நாட்டுக்கு பெரும் பங்களிப்பை பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும்.
மறுபுறம் தற்போதுள்ளதைவிட புதிய பாரியளவிலான தொழிற்சாலைகளை உருவாக்கக்கூடிய வளங்களும், வாய்ப்புகளும் எம்மிடம் இருக்கின்றன. அதேபோன்று பெரும்பாலான தொழிற்சாலைகள் பல்வேறு காரணங்களுக்காக மூடப்பட்டுள்ளன. நாட்டுக்கு வருவாய் சேர்க்கும் வகையில் இயங்கிவந்த தொழிற்சாலைகள் மூடப்பட்டமையினால் அது மேலும் எமது உற்பத்தி பொருளாதாரத்தை சிக்கலுக்குள்ளாக்கியுள்ளது.
சீனி தொழிற்சாலை, கடதாசி தொழிற்சாலை, டயர் உற்பத்தி தொழிற்சாலை, சீமெந்து உற்பத்தி தொழிற்சாலைகள் என பல்வேறு தொழிற்சாலைகள் வெவ்வேறு காரணங்களுக்காக மூடப்பட்டு தற்போது இயங்காமலிருக்கின்றன. அவற்றை மீண்டும் ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளோம்.
மூடப்பட்டுள்ள தொழிற்சாலைகள் மீண்டும் திறப்பது தொடர்பில் ஏதேனும் திட்டங்கள் இருக்கின்றனவா?
தற்போது அதுதொடர்பில் ஆராய்ந்து வருகிறோம். தற்போதுள்ள நிலையில் அவற்றை அவசரமாக மீண்டும் ஆரம்பிக்க முடியாது. மூடப்பட்ட தொழிற்சாலைகளை விரைவாக மீண்டும் ஆரம்பிக்கவேண்டுமானால் தேவையான முதலீகள் அவசியமாகும். அவற்றை மீள ஆரம்பிப்பதற்கான முதலீடுகளை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற சர்வகட்சி மாநாடு தொடர்பில் உங்களின் நிலைப்பாடு என்ன? அந்த மாநாடு சாதகமாக அமைந்தது எனக் கருதுகிறீர்களா?
அரசாங்கத்தரப்பு உள்ளிட்ட ஏனைய கட்சி தலைவர்களுக்கிடையில் இடம்பெற்ற ஆரம்பகட்ட பேச்சுவார்த்தை என்று பார்க்கும்போது அது சாதகத்தன்மையையே வெளிப்படுத்தியுள்ளது. ஒவ்வொரு கட்சியும் அவற்றின் நிலைப்பாடு களையும், எதிர்பார்ப்புகளையும் அறிவித்திருந்தன.
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியானது தேசிய பிரச்சினையாகும். ஆகவே, வடக்கு தமிழ்க் கட்சிகளுக்கும் இந்த தேசிய பிரச்சினைக்குத் தீர்வொன்றை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது என்பது இந்த சர்வகட்சி மாநாட்டினூடாக சகலரும் புரிந்துகொள்ளக் கூடியதாக இருந்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட தரப்பினரும் சர்வகட்சி மாநாட்டில் கலந்துகொண்டிருந்தார்கள். அவர்களின் நிலைப்பாடுகளையும் தெரிவித்திருந்ததோடு, வடக்கு பிரதேசங்களிலுள்ள பிரச்சினைகள் தொடர்பிலும் கலந்துரையாடி இருந்தார்கள். இதனை சிறந்த முன்னேற்றமாகவே நாங்கள் கருதுகிறோம்.
சர்வகட்சி மாநாட்டின் பின்னரான அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்ன?
நடந்துமுடிந்த சர்வகட்சி மாநாட்டில் பங்காளிக் கட்சிகளினால் முன்வைக்கப்பட்ட சகல கருத்துகளையும் திரட்டி, ஜனாதிபதியினால் தொழில்நுட்பக் குழுவொன்று நியமிக்கப்பட வுள்ளது. அந்தக் குழுவினூடாக அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்ந்து கிடைக்கும் பரிந்துரைக்கமைய அடுத்த சர்வகட்சி மாநாட்டை நடத்துவது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும். அதற்காமைய அடுத்த மாநாட்டுக்கு சகல கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்படும்.
சர்வக்கட்சி மாநாட்டில் அரசியல் கட்சி தலைவர்களினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான திட்டங்களை வகுக்கவேண்டும். அதன்பின்னர் மீண்டும் சகல அரசியல் கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்படும்.
எது எவ்வாறிருப்பினும், அரசாங்கத்தின் வேலைத்திட்டங்கள் முறையாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எதிர்வரும் ஒருசில தினங்களில் எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். அதன்பின்னர் நாட்டை கட்டியெழுப்பும் வேலைத்திட்டங்கள் முறையாக முன்னெடுக்கப்படும்.
ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய கட்சிகள் சர்வகட்சி மாநாட்டில் பங்குபற்றியிருந்தாலும், ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட பிரதான எதிர்க்கட்சிகள் இந்த மாநாட்டை புறக்கணித்திருந்தன. இதுதொடர்பில் உங்களின் நிலைப்பாடு?
நாட்டின் மீது பற்றும், அக்கறையும் இல்லாதவர்களே சர்வகட்சி மாநாட்டில் பங்குபற்றவில்லை. மாறாக, நாட்டை தற்போதுள்ள நிலைமையிலிருந்து கட்டியெழுப்ப வேண்டும், அபிவிருத்தியின் பாதையில் செல்ல வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களே இந்த மாநாட்டில் பங்குபற்றியிருந்தார்கள் என நான் நினைக்கிறேன்.
நாட்டை நேசிப்பவர்களாக இருந்தால், பிரச்சினைகளுக்கு தீர்வுகாணவேண்டுமென்ற அவசியம் இருக்குமாக இருந்தால், மக்கள்படும் கஷ்டம் தொடர்பில் ஏதேனும் கவலை இருந்தால் அனைவரும் பங்குபற்றியிருப்பார்கள். அவ்வாறு அக்கறையுள்ளவர்கள் அனைவரும் கலந்துகொண்டிருந்தமை வரவேற்கத்தக்கதாகும்.
எதிர்க்கட்சிக்கு நாடு தொடர்பிலோ நாட்டிலுள்ள மக்கள் குறித்தே எவ்வித கவலையும் இல்லை. நடப்பது நடக்கட்டும். இறுதியில் தம்மால் ஆட்சிக்கு வர முடியும் என எண்ணும் உருப்படாத எதிர்க்கட்சியே இந்த மாநாட்டில் பங்குபற்றவில்லை.
நாட்டில் ஒவ்வொரு பிரதேசத்திலும் எரிபொருள், சமையல் எரிவாயு உள்ளிட்ட அன்றாட தேவைகளுக்காக பயன்படுத்தும் பொருட்களுக்கு மக்கள் வரிசையில் காத்திருந்து அவதியுறும் நிலையை அவதானிக்கக்கூடியதாகவுள்ளது. இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்குமா?
டொலர் நெருக்கடியே, மக்கள் பொருட்களுக்காக வரிசையில் காத்திருக்கும் நிலை உள்ளிட்ட மக்கள் அனுபவிக்கும் ஒவ்வொரு பிரச்சினைகளுக்கும் காரணமாகும். இந்த டொலர் நெருக்கடிக்கு பிரதானமாக காரணம் கடந்த நல்லாட்சி அரசாங்கம் என்பதை மறுக்க முடியாது.
கடந்த அரசாங்கம் திறந்த சந்தையில் பன்னாட்டு முறியை விநியோகித்து, 13 பில்லியன் ரூபாவை பெற்றுக்கொண்டது. அதனூடாகவே நாட்டில் தற்போது இந்த டொலர் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பாரியளவான கடன்களை பெற்றுக்கொண்டது மாத்திரமல்லாமல், 7 மற்றும் 8 சதவீதமாக இருந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சியை 2 சதவீதமாக வீழ்ச்சியடையச் செய்திருந்தது.
அதன்பின்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் நாடு கையளிக்கப்பட்டது. டொலர் நெருக்கடிக்கும் பொருளாதார வீழ்ச்சிக்கும் கடந்த அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும். அதேபோன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை பொறுப்பேற்றதும் கொரோனா தொற்று நிலை நாட்டை ஆக்கிரமித்தது.
இந்த தொற்று நிலைமை ஏற்பட்ட முதலாவது கட்டத்தில் அதனை எம்மால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரக்கூடியதாக இருந்தது. அதன்போது சீனாவிலேயே கொரோனா பரவல் தீவிரமாக இருந்தது. அதனைத் தொடர்ந்து நாட்டில் இரண்டாம், மூன்றாம் என புதிய கொரோனா அலைகள் உருவாவதற்கான காரணம் எதிர்க்கட்சி யாகும்.
ஆசிரியர்கள், விவசாயிகள், சுகாதார சேவையாளர்கள் அனைவரும் வீதிக்கு இறங்கி போராட்டம் செய்தது மட்டுமல்லாமல் பேரணி சென்றனர். அதனைத் தொடர்ந்து இந்த நோய்நிலைமை தீவிரமாக பரவலடைய ஆரம்பித்தது. இந்தப் போராட்டங்களையும் எதிர்க் கட்சியே ஏற்பாடு செய்திருந்தது. இதனூடாகவே நோய் நிலைமை மேலும் அதிகரித்தது.
தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகளை ஊக்குவிக்குமாறு உலக சுகாதார ஸ்தாபனம் பரிந்துரைத்தது. தடுப்பூசி வேலைத்திட்டங்களினூடாக உலக நாடுகளின் மத்தியில் நான்காம், ஐந்தாம் இடத்தைப் பிடித்துள்ளோம்.
இதனைத் தொடர்ந்து மீண்டும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. அது மாத்திரமின்றி எமது நாட்டவர்கள் வேலைவாய்ப்புகளுக்காக வெளிநாடுகளை நோக்கி நகர ஆரம்பித்துள்ளனர். இதேவேளை, ஆடை தயாரிப்புக்கான முதலீடுகளும் தற்போது அதிகரித்துள்ளன. இதனூடாக இந்தப் பிரச்சினைகளுக்கு விரைவாக தீர்வு கிடைக்குமென எதிர்பார்க்கிறோம்.
தொழிற்றுறையை ஊக்குவிக்க பல்வேறு திட்டங்களை முன்வைத்தாலும் தற்போதுள்ள நிலையில் உணவகங்கள் மூடும் நிலை உருவாகியுள்ளதே?
எரிவாயு நெருக்கடியின் காரணமாகவே இந்தச் சூழ்நிலை உருவாகியுள்ளது. எரிவாயு பகிர்ந்தளிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. எரிவாயு விநியோக நடவடிக்கைகள் சீரானதும் இந்த நிலைமை வழமைக்குத் திரும்பும்
இலங்கைக்கு உத்தியாகபூர்வ விஜயம் மேற்கொண்டு வருகை தந்திருந்த அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான பிரதி செயலாளர் விக்டோரியா நுவாண்ட் தலைமையிலான குழுவினர் மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு வலியுறுத்தியிருந்தார். இதுதொடர்பில் என்ன கருதுகிறீர்கள்?
தேர்தல் விவகாரங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருப்பதற்கான நேரம் தற்போது இல்லை. அதற்கான சந்தர்ப்பமும் தற்போது இல்லை. பாரிய பொருளாதார நெருக்கடிக்குள்ளேயே நாம் தற்போது சிக்கியுள்ளோம். அதேபோன்று தேர்தலுக்கான முறைதொடர்பிலான பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டிய அவசியமும் காணப்படுகின்றது. ஆனால், இதுவரையில் அதுதொடர்பில் எவ்வித இறுதித் தீர்மானமும் எடுக்கப்படவில்லை.
ஆகவே தேர்தல் முறை தொடர்பில் சரியான இறுதித் தீர்மானமொன்றை எடுத்ததன் பின்னர் உரிய நேரத்தில் தேர்தலை நடத்த முடியும்.
இராஜாங்க அமைச்சராக கடமையாற்றிய நிமல் லான்சா எம்.பி. தனது அமைச்சுப் பதவியிலிருந்து விலகியிருந்தார். இவ்வாறு அரசாங்கத்துக்குள்ளிருக்கும் அமைச்சர்கள் பதவி விலகக் காரணம் என்ன?
நிமல் லான்சா எம்.பியின் இராஜாங்க அமைச்சுப் பதவிக்குள் ஏற்பட்ட பிரச்சினையின் காரணமாகவே அவர் பதவி விலகியிருந்தார். அதனால், அராங்கத்துக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. அவர் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அரசாங்கத்துடன் இணைந்து தொடர்ந்து கடமையாற்றிக்கொண்டே இருக்கிறார். அமைச்சரவை அமைச்சருக்கும், இராஜாங்க அமைச்சருக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாட்டின் காரணமாகவே அவர் தனது பதவியை இராஜினாமா செய்திருந்தார்.
அரசாங்கத்துடன் இணைந்துள்ள ஏனைய பங்காளிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளில் முரண்பாடு காணப்படுகின்றதல்லவா?
பங்காளிக் கட்சிகளுடனான பேச்சுவார்த்தை களில் எவ்வித குளறுபடிகளும் இல்லை. சுமுகமான முறையில் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன.
இதுபோன்ற நெருக்கடியான சூழ்நிலையில் சகல கட்சிகளும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டியதே அவசியமாகும். அதற்கு மாறாக கட்சிகளுடன் முரண்படுவதால் பிரச்சினைகளுக்கு தீர்வுக் காணமுடியாது. தற்போதுள்ள நிலைமையில் சகலரும் ஒற்றுமையாகவே செயற்பட வேண்டும்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யோசனைக் கமையவே சர்வ கட்சி மாநாடு நடத்தப்பட்டது. அவர்களுடனான பேச்சுவார்த்தைகள் சுமுகமான முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
நேர்காணல்:- நா.தினுஷா