தெரிவு செய்யப்பட்ட மூன்று இலங்கை தூதரகங்களுக்கு பூட்டு
தெரிவு செய்யப்பட்ட பிரதான மூன்று நாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்கள் / பணிமனைகள் 31ஆந் திகதி தற்காலிகமாக மூடப்படவுள்ளதாக வெளிநாட்டு அமைச்சு தீர்மானித்துள்ளது.
அதற்கமைய, அபுஜா / நைஜீரியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம், பிராங்பேர்ட் / ஜேர்மனியில் உள்ள இலங்கையின் துணைத் தூதரகம், நிக்கோசியா / சைப்ரஸில் உள்ள இலங்கையின் துணைத் தூதரகம் ஆகியன எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் மூடப்படவுள்ளதாக அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பில் அந்த அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
அமைச்சரவையின் அங்கீகாரத்தைப் பெற்ற இந்தத் தீர்மானமானது, வெளிநாட்டு அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டு வரும் வெளிநாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்கள் மற்றும் பணிமனைகளின் வலையமைப்பின் மறுசீரமைப்புச் செயன்முறையின் ஒரு பகுதியாகும். உலகளாவிய தொற்றுநோயால் முன்வைக்கப்படும் கடுமையான பொருளாதார சவால்களின் பின்னணியில் இருதரப்பு உறவுகளை திறம்பட முன்னெடுப்பதனை உறுதி செய்யும் அதே வேளையில், நாட்டிற்குத் தேவையான வெளிநாட்டு இருப்புக்களைப் பாதுகாத்தல் மற்றும் வெளிநாடுகளில் உள்ள இலங்கையின் தூதரகங்கள் / பணிமனைகளைப் பராமரித்தல் தொடர்பான செலவீனங்களைக் குறைத்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இந்த மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படுகின்றது.
தெரிவு செய்யப்பட்ட மூன்று தூதரகங்கள் / பணிமனைகள் மூடப்பட்டவுடன், இருதரப்பு அரசியல், பொருளாதாரம், கலாச்சார உறவுகள் மற்றும் தூதரக செயற்பாடுகளைப் பராமரித்தல் உள்ளிட்ட அவற்றின் செயற்பாடுகள் அங்கீகாரம் பெற்ற தூதரகங்களின் கீழ் வரும் அதே வேளையில், அபுஜா மற்றும் நிக்கோசியா ஆகியவற்றின் விடங்கள் இலங்கையின் வதிவிடமல்லாத உயர்ஸ்தானிகராலயங்கள் / தூதரகங்களால் மேற்கொள்ளப்படும்.
இது சம்பந்தமாக, கென்யாவின் நைரோபியில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் ஊடாக நைஜீரியாவுக்கு ஒரே நேரத்தில் அங்கீகாரம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், ஆபிரிக்காவில் உள்ள ஏனைய நாடுகள் முறையே அபுஜாவில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் ஊடாகவும், கெய்ரோவில் உள்ள இலங்கைத் தூதரகம், எகிப்து மற்றும் நைரோபியில் உள்ள உயர்ஸ்தானிகராலயத்தின் ஊடாகவும் ஒரே நேரத்தில் அங்கீகாரம் பெற்றுள்ளன.
பிராங்பேர்ட்டில் உள்ள இலங்கையின் துணைத்தூதரகத்தின் செயற்பாடுகள், வர்த்தகம், முதலீடு மற்றும் சுற்றுலா ஊக்குவிப்பு, அத்துடன் பிராங்பேர்ட் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மற்றும் பணிபுரியும் இலங்கைப் பிரஜைகளின் கொன்சியூலர் விவகாரங்கள் ஆகியன ஜேர்மனியின் பேர்லினில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் கீழ் கொண்டுவரப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.