திருமலை 5 மாணவர் கொலை வழக்கில் சந்தேகநபர்கள் அனைவரும் விடுதலை!
திருகோணமலை ஐந்து மாணவர் கொலை வழங்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த பாதுகாப்பு தரப்பினர் அனைவரும் நிரபராதிகள் என திருகோணமலை நீதவான் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
வழக்கு விசாரணையை எதிர்கொண்டிருந்த 12 விஷேட அதிரடிப்படையினரும் 1 பொலிஸ் அதிகாரியும் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
2006.01.02 ஆம் திகதி மாலை 7 மணி அளவில் திருகோணமலை கடற்கரை பிரதேசத்தில் காந்தி சிலை அருகில் கைக்குண்டு தாக்குதல் மற்றும் துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றது. இதில் 5 மாணவர்கள் உயிரிழந்ததுடன் 2 மாணவர்கள் காயமடைந்தனர். இந்த தாக்குதலை பாதுகாப்பு தரப்பினரே நடத்தியதாக குற்றம்சுமத்தப்பட்டிருந்தது.
உயிரிழந்த மாணவர்களின் பெற்றோர் நீண்ட சட்டப்போராட்டம் நடத்தினர். ஒரு மாணவனின் தந்தை ஐ.நா மனித உரிமைகள் பேரவையிலும் சாட்சியமளித்திருந்தார்.
இலங்கையின் நீதிப்பொறிமுறை குறித்து சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்த விவகாரமாக இந்த வழக்கு விளங்கியது.
இன்று இது தொடர்பான வழக்கு திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது, நீதிமன்றத்தில் சாட்சிகள் தொடர்ந்து வருகை தராததன் காரணத்தால் சந்தேக நபர்களை விடுதலை செய்யுமாறு நீதிவான் முகம்மது ஹம்சா உத்தரவிட்டார்.