திருமண நிகழ்வில் கலந்துகொண்ட 26 பேருக்கு கொரோனா
மினுவாங்கொடை, கமராகொட பிரதேசத்தைச் சேர்ந்த சகோதரர்கள் இருவரின் திருமண நிகழ்வின் பின்னர், மூத்த சகோதரர் உள்ளிட்ட 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அண்ணா மற்றும் தம்பி இருவரும் ஒரே தினத்தில் திருமணம் செய்துள்ளனர்.
சந்தலங்காவ பிரதேசத்திலுள்ள தேவாலயமொன்றில் இவ்விரு திருமண நிகழ்வுகளும் இடம்பெற்றுள்ளதுடன், திவுலம்பிட்டிய பிரதேசத்திலுள்ள ஹோட்டலொன்றில் தங்கியிருந்து இந்த திருமண நிகழ்வை முன்னெடுத்துள்ளமை சுகாதார பிரிவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த திருமண நிகழ்வில் இரு தரப்புகளிலுமிருந்து 350 பேர் பங்குப்பற்றியுள்ளனர்.
அவர்களில் ஒரு மணமகன் உள்ளிட்ட மேலும் ஐவர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். அதனை தொடர்ந்து கமராகொட ரோமன் கத்தோலிக்க தேவாலயத்தில் இடம்பெற்ற இந்த திருமண நிகழ்வில் பங்குற்றிய 28 பேருக்கு மினுவாங்கொடை சுகாதார வைத்திய அதிகாரிகள் காரியாலயத்தினூடாக ரெபிட் அன்ரிஜன் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது. அவர்களில் 26 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கமராகொட பிரதேசத்தைச் சேர்ந்த அநேகமானவர்கள் அவர்களின் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தனிமைப்படுத்தப்பட்டுள்ள அநேகமானவர்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றாமல் செயற்படுவதாகவும், திருமண நிகழ்வில் கலந்துகொண்ட அநேகமானவர்கள் ரெபிட் அன்ரிஜன் பரிசோதனை முன்னெடுக்காமல் அவர்களுக்கு சொந்தமான கடைகளை திறந்து வைத்துள்ளதாகவும் சுகாதார பிரிவினர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர்.