தம்புத்தேகமவில் 100 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 38 பேருக்கு தொற்று
தம்புத்தேகம ஆசிரியர் கலாசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர்களென 100 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட ரெபிட் அன்ரிஜன் பரிசோதனையில் 38 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது,
நேற்று காலை மேற்கொள்ளப்பட்ட எழுமாற்று பரிசோதனையிலேயே இவர்களுக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவர்களில் 09 மாணவர்கள் உள்ளடங்குவதாக அநுராதபுரம் தொற்று நோய் தொடர்பான விஞ்ஞான பிரிவு அறிவித்துள்ளது.
இவர்களுடன் நேரடி தொடர்பு பேணியவர்கள் என்ற அடிப்படையில் அவர்களின் குடும்ப அங்கத்தவர்கள் 46 போ் உள்ளிட்ட 100 போ் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா்.
அநுராதபுரம் மாவட்ட ஹொரவபொத்தான, பதவி , தம்புத்தேகம ஆகிய பிரதேசங்களில் கடந்த ஐந்து நாட்களில் மேற்கொள்ளப்பட்ட எழுமாற்று ரெபிட் அன்ரிஜன் பரிசோதனையில் பாடசாலை மாணவர்கள் 44 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அநுராபுரம் தொற்று நோய் விஞ்ஞான பிரிவின் தொற்று நோய் விஞ்ஞான மருத்துவா் ஆர்.எஸ்.பீ. ரத்நாயக்க தெரிவித்துள்ளாா்.
இவர்கள் 5 – 10 வயதுக்கிடைப்பட்ட சிறுவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளாா்.
இதேவேளை, மெனராகலை படல்கும்புர மற்றும் பிபில ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த ஆசிரியை உள்ளிட்ட நால்வா் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனா். இவர் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக சுகாதார பிரிவினா் தெரிவித்துள்ளனா். இதேவேளை, மத்துகம ஆனந்த சாஸ்த்ராலிய தேசிய பாடசாலையின் ஆரம்ப பிரிவின் ஆசிரியர்கள் மூவர் மற்றும் மேலும் இருவருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.