தமிழ்க் கட்சிகளின் சந்திப்புகளும் கூட்டமைப்பில் ஏற்படப்போகும் பிளவும்
இலங்கையில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை எட்டுவதற்காக நகல் ஒன்றை தயாரித்து இந்தியப் பிரதமர் மோடியிடம் கையளிக்கவென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான ரெலோ எடுத்துவரும் முயற்சிகள் வெற்றிபெறும் என்ற நம்பிக்கை வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ் மக்களிடம் காணப்படுகிறதென சொல்ல முடியாது. அதில் அவர்கள் அக்கறைப்படுவதாகவும் தெரியவில்லை.
ரெலோ எடுத்துவரும் முயற்சிகள் வெற்றிபெறுமா? தமிழ்க் கட்சிகளின் கூட்டு முயற்சியின் அரசியல் நோக்கம் என்ன என்பதை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
இந்த தமிழ்க் கட்சிகள் கூடி கதைப்பது, அறிக்கை விடுவது, பேசுவது, தங்களுக்குள் குடும்பிச்சண்டை போடுவது இதைப்பற்றி எல்லாம் அரசியல் சாராத சமூக ஆர்வலர்கள் தூர நின்று வேடிக்கை பார்ப்பவர்களாகவே உள்ளனர். இவர்கள் மோடியிடம் கையளித்தவுடன் அவர் தங்கத் தாம்பாளத்தில் தீர்வை தந்துவிடுவார் என்று நம்புவதற்கு தமிழ் மக்கள் பேதிலிகளும் கிடையாது.
ஏனெனில், அகிம்சை வழியில் செயற்பட்ட தமிழ்க் கட்சிகளில் நம்பிக்கை இழந்து 108 ஆயுதக்குழுக்கள் தோன்றி அதன் பின் தங்களுக்குள்ளேயே மோதி கந்தறுந்த காவடிகளாக மீண்டும் ஜனநாயக வழிக்கு வந்த இயக்கங்களின் வரலாறுகளை தமிழ் மக்கள் மறக்கவில்லை.
அகிம்சை வழியில் நம்பிக்கை இழந்து ஆயுதம் தூக்கிய இயக்கங்களும் மீண்டும் 1987ஆம் ஆண்டு இலங்கை – இந்திய ஒப்பந்தத்திற்கு பின் தமிழர் விடுதலைக் கூட்டணி பின்னர் தமிழரசுக் கட்சி போன்ற கட்சிகளின் கீழேயே அரசியல் செய்யவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்கள்.
1989ஆம் ஆண்டு இந்திய இராணுவத்தின் துணையுடன் பொதுத் தேர்தலில் களமிறங்கிய ஈ.பி.ஆர்.எல்.எவ், ரெலோ போன்ற இயக்கங்களும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைமையில் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட்டன.
யாழ்ப்பாணத்தில் ஈ.பி.டி.பியும் மட்டக்களப்பில் ரி.எம்.வி.பியும் தனியாக தேர்தலை சந்தித்ததைபோல் ஆயுதக்குழுக்களாக இருந்து அரசியல் கட்சியாக மாறிய ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட், ரெலோ போன்ற கட்சிகளால் தனித்துப் போட்டியிடும் பலம் இன்று உண்டா என்பது கேள்விக்குறியே.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பிரிந்துசென்ற ஈ.பி.ஆர்.எல்.எவ். உள்ள_ராட்சித் தேர்தலில் ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணியின்கீழ் போட்டியிட்ட போதிலும் ஒரு சபைகளைக்கூட அவர்களால் கைப்பற்ற முடியாமல் போய்விட்டது.
அதன்பின்னர் ஆனந்தசங்கரியின் தமிழர் விடுதலைக் கூட்டணியிலிருந்து பிரிந்து வந்து விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணியுடன் சேர்ந்து 2020ஆம் ஆண்டு பொதுத் தேர்தலை சந்தித்தபோதும் அவர்களால் வெற்றிபெற முடியாமல் போய்விட்டது.
இந்த படிப்பினையை ரெலோ, புளொட் போன்ற கட்சிகள் வெளிப்படையாக ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் தனித்துநின்று வெற்றிபெற முடியாதென்பது மனதளவில் அவர்களுக்குத் தெரியும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் தமிழரசுக் கட்சி, ரெலோ, புளொட் ஆகிய கட்சிகள் இருந்தாலும் தமிழரசுக் கட்சியே தன்னிச்சையாக செயற்பட்டு முடிவுகளை எடுப்பதாகவும், தம்மை ஒரு பங்காளிக்கட்சியாக மதிப்பு தந்து கணக்கெடுப்பதில்லை என்ற ஆதங்கத்தையும் ரெலோ வெளிப்படையாக சொல்லி வந்திருக்கிறது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைக் கட்சியாக இருக்கும் தமிழரசுக் கட்சிக்கும் ஏனைய பங்காளிக்கட்சிகளான ரெலோ, புளொட் போன்ற கட்சிகளுக்கும் இடையில் பாரிய விரிசல் ஏற்பட்டிருக்கிறதென்பது வெளிப்படையாகத் தெரிகிறது.
அடுத்துவரப்போகும் தேர்தல்களில் தமிழரசுக் கட்சி தலைமையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக இணைந்து போட்டியிடுவதா அல்லது தமிழரசுக் கட்சியை விட்டுப் பிரிந்துசென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வெளியில் இருக்கும் தமிழ்க் கட்சிகளை இணைத்துக்கொண்டு புதிய கூட்டை உருவாக்குவதா என்ற முடிவுக்கு ரெலோ, புளொட் போன்ற கட்சிகள் வந்திருக்கின்றன என்பதையே அண்மைய செயற்பாடுகள் காட்டுகின்றன.
இதன் ஒரு கட்டமாக விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி, உட்பட சில தமிழ்க் கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது தொடர்பான இரகசிய பேச்சுகளில் ரெலோ ஈடுபட்டு வந்தது. இதன்பின்னர் தமிழ்க் கட்சிகளுடன் வெளிப்படையான சந்திப்புகளையும் ரெலோ ஏற்பாடுசெய்து நடத்தியது.
அண்மையில் அமெரிக்க இராஜாங்க திணைக்கள உயர் அதிகாரிகளை சந்திப்பதற்காக அமெரிக்கா செல்வதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தனால் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தலைமையில் குழுவொன்று அமைக்கப்பட்டபோது அதுபற்றி தங்களுடன் கலந்தாலோசிக்கவில்லை என ரெலோ வெளிப்படையாக குற்றஞ்சாட்டியிருந்தது.
நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தலைமையிலான குழு அமெரிக்காவில் சந்திப்புகளை நடத்திக்கொண்டிருந்த சமகாலத்தில் ரெலோ கொழும்பிலுள்ள தூதரக அதிகாரிகளுடன் சந்திப்புகளை நடத்தியது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சந்தித்ததாகவே ரெலோ ஊடக அறிக்கைகளை வெளியிட்டது.
எங்கள் கையை மீறி ரெலோ தனியாக செயற்பட ஆரம்பித்துவிட்டது என்ற கோபத்தை வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் தமிழரசுக் கட்சி காட்ட ஆரம்பித்தது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு கட்சியாக தேர்தல் திணைக்களத்தில் பதிவுசெய்யப்பட வேண்டும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைமைப் பதவிக்கு மூன்று கட்சிகளின் தலைவர்களும் சம அதிகாரத்துடன் கூட்டாக தலைமை தாங்கவேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யாப்பு எழுதப்பட வேண்டும், இதற்கு தமிழரசுக் கட்சி சம்மதிக்கவில்லை என்றால் ரெலோவும் புளொட்டும் ஏனைய கட்சிகளும் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஓர் அரசியல் கட்சியாக தேர்தல் திணைக்களத்தில் பதிவுசெய்யப்போவதாகவும் ரெலோ அண்மையில் அறிவித்திருந்தது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உரிமை தமக்கே உள்ளதாக ரெலோவின் வாதம்.
தமிழரசுக் கட்சிக்கும் ரெலோவுக்கும் இடையில் விரிசல்கள் அதிகரித்துவந்த நிலையிலேயே 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தக் கோரி தமிழ்க் கட்சிகள் இணைந்து கையொப்பமிட்ட ஆவணமொன்றை இந்தியப் பிரதமர் மோடியிடம் கையளிப்பது என்ற முடிவுக்கு ரெலோ வந்திருந்தது.
இதற்கான ஆரம்ப சந்திப்புகளுக்கு தமிழரசுக் கட்சியை தவிர்ந்த ஏனைய தமிழ், முஸ்லிம் கட்சிகளுக்கு ரெலோ அழைப்பு விடுத்திருந்தது. மனோ கணேசன் தலைமையிலான மலையக கட்சிகள், ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டன.
பின்னர் கொழும்பில் நடந்த கூட்டத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் என்ற ரீதியில் சம்பந்தன் அழைக்கப்பட்டிருந்தார். இந்தக் கூட்டத்திலேயே 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் எனக் கோரி கையொப்பமிட்டு அனுப்புவது என தீர்மானம் எடுக்கப்பட்டது.
இதன்பின்னர் யாழ்ப்பாணத்தில் நடந்த அரசியல் விவாதக் கூட்டம் ஒன்றில் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் 13ஆவது திருத்த சட்டம் அடிப்படையிலேயே குறைபாடுகளை கொண்டது. இதனை நடைமுறைப்படுத்துமாறு கோருவது தமிழர்களின் பிரச்சினைக்குத் தீர்வாகாது. சமஷ்டியே தீர்வாக கொள்ளமுடியும் எனக் கூறியதுடன் 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் எனக் கோரும் ரெலோவின் நடவடிக்கைகளையும் விமர்சனம் செய்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து நடந்த தமிழரசுக் கட்சி கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதுபோல் சமஷ்டி முறையான தீர்வுத் திட்டத்தையே முன்வைக்க வேண்டும் என்றும் தாம் முன்வைக்கும் திட்டத்தை ஏற்றுக்கொண்டால் மட்டுமே தமிழரசுக் கட்சி அந்த ஆவணத்தில் கையொப்பமிட வேண்டும் என்றும் தீர்மானம் எடுக்கப்பட்டது.
ரெலோ தலைமையில் தமிழ்க் கட்சிகள் எந்தத் தீர்மானத்தை எடுத்தாலும் தாம் எடுக்கும் தீர்மானமே இறுதியானது என்பதுபோல் தமிழரசுக் கட்சியின் முடிவு அமைந்திருந்தது.
கட்சிகளின் தலைவர்களுக்குத்தான் கூட்டத்திற்கான அழைப்பு என ரெலோ போட்ட நிபந்தனையை நிராகரித்த தமிழரசுக் கட்சி அந்தக் கூட்டத்தில் தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராசாவுடன் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனும் கலந்துகொள்ள வேண்டும் என்றும் கையொப்பமிடும் ஆவணத்தை தயாரிக்கும் பொறுப்பை சுமந்திரனிடமே ஒப்படைக்க வேண்டும் என்று தமிழரசுக் கட்சி தீர்மானம் எடுத்தது.
இந்த தீர்மானத்திற்கமைய சமஷ்டியை உள்ளடக்கிய தீர்வையே தமிழர்கள் கோருகிறார்கள், சமஷ்டி தீர்வு கிடைக்கும் வரை 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டுமென முடிவு செய்யப்பட்ட போதிலும் மலையக தமிழ்க் கட்சிகள், முஸ்லிம் கட்சிகள் இதில் கையொப்பமிடுவது சாத்தியம் இல்லை.
சமஷ்டி கோரிக்கையை முன்வைக்கும் கோரிக்கை அடங்கிய ஆவணத்தில் மலையக கட்சிகள், முஸ்லிம் கட்சிகள் கையொப்பம் இடப்போவதில்லை.
தென்னிலங்கை மக்களுடன் சேர்ந்து வாழும் நாம் சிங்கள மக்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தும் சமஷ்டி கோரிக்கை அடங்கிய ஆவணத்தில் கையொப்பம் இடப்போவதில்லை என மலையக கட்சியின் தலைவர்களில் ஒருவரான திகாம்பரம் தெரிவித்திருக்கிறார்.
வடக்கு – கிழக்கு இணைந்த சமஷ்டி தீர்வு கோரிக்கை அடங்கிய ஆவணத்தில் முஸ்லிம் கட்சிகள் கையொப்பமிடக்கூடாதென கிழக்கு மாகாணத்தில் கடும் போக்குவாத முஸ்லிம்களிடமிருந்து அழுத்தம் வந்திருக்கிறது.
சமஸ்டி இல்லை என்றால் தாம் கையொப்பமிடமாட்டோம் என தமிழரசுக் கட்சி அறிவித்துள்ளது. சமஷ்டி உள்ளடக்கப்பட்டால் தாம் கையொப்பமிடமாட்டோம் என்ற முடிவுக்கு மலையக கட்சிகளும் முஸ்லிம் கட்சிகளும் வந்திருக்கின்றன.
இந்தியப் பிரதமர் மோடிக்கு தமிழ்க் கட்சிகள் கூட்டாக கோரிக்கையை முன்வைக்கும் திட்டம் கைகூடாமல் போய்விடுமோ என்ற அச்சம் இப்போது ரெலோவுக்கு ஏற்பட்டிருக்கிறது.
நவக்கிரகங்களாக இருக்கும் தமிழ், முஸ்லிம் கட்சிகளை இணைத்து ஒரே நேர் கோட்டிற்குள் கொண்டுவருவதென்பது இமாலயப் பிரச்சினை என்பது ரெலோவுக்கு தெரியாமல் இல்லை.
அல்லது தமிழ்க் கட்சிகளின் கோரிக்கையை மோடி ஏற்றுக்கொண்டு ஸ்ரீலங்காவை செவியில் பிடித்து இழுத்துவந்து சமஷ்டியை கொடுக்கச் சொல்வார் என்றோ அல்லது 13ஆவது திருத்தத்தினை முழுமையாக அமுல்படுத்தச் சொல்லுவார் என்றோ நம்புவதற்கு தமிழ் மக்கள் முட்டாள்கள் அல்ல.திம்பு தொடக்கம் கொழும்பு வரை நடந்த பேச்சுகளும் அவை காற்றோடு காற்றாக மறைந்த வரலாறுகளையும் தமிழ் மக்கள் மறந்திருக்க மாட்டார்கள்.
மோடிக்கு ஆவணத்தை அனுப்பும் திட்டம் நிறைவேறாவிட்டாலும் தமிழரசுக்கு கட்சியை கழட்டிவிட்டு ஏனைய கட்சிகளுடன் இணைந்து கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கும் திட்டத்தை ரெலோ கைவிடப்போவதில்லை.
ஆனால், தமிழரசுக் கட்சியுடனான உறவை முறித்து விக்னேஸ்வரன் தலைமையிலான கூட்டணியுடன் இணைவதால் கடந்த தேர்தலில் ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சிக்கு ஏற்பட்ட நிலைமை ரெலோவுக்கு ஏற்படாதுஎன எப்படி சொல்ல முடியும்?
இரா.துரைரத்தினம் சுவிஸ்