செழிப்பிழந்து கடக்கும் புனித நோன்பு காலம்:
நோன்பு வந்தால் முஸ்லிம் சமூகத்தின் சகலருக்கும் சந்தோஷம். நோன்பு என்பது முஸ்லிம்களுக்கு பெரும் கொண்டாட்டம். இஸ்லாமிய மார்க்கத்தில் ஐம்பெரும் தூண்களான கலிமா, தொழுகை, ஸகாத், நோன்பு, ஹஜ் வரிசையில் இடத்தை பிடித்திருந்தாலும் இறைவனுடன் நேரடியாக நட்பு பாராட்டுவதில் முதன்மையானது நோன்பு. எப்படி என்றால் ஒருவர் நோன்பாளியா இல்லையா என்பதை அந்த தனிப்பட்ட நபருக்கும் இறைவனுக்கும் மட்டுமே தான் தெரியும். ஒருவர் நான் நோன்பாளி எனக் கூறிவிட்டு மறைமுகமாக உண்ணலாம், பருகலாம். ஆனால், இறைவனுக்கு பயந்து நடக்கும் எந்த முஸ்லிமும் அப்படி செய்வதில்லை. இப்படியான நோன்பில் இலங்கையில் வாழும் முஸ்லிம்கள் சுமார் 12 14 மணித்தியாலயங்கள் உண்ணாமல், பருகாமல், பட்டினியுடன் இறை கட்டளையை ஏற்று நடப்பார்கள். ஆனாலும் முஸ்லிம்களுக்கு நோன்பு வந்தால் நோன்பு நோற்பது மகிழ்ச்சியை தரும் கொண்டாட்டமாகவே இருந்து வருகிறது.
ரமழான் மாதம் அருள் நிறைந்த மாதம், நன்மைகளை அதிகம் செய்யும் மாதம், பிழைப் பொறுப்புத் தேடும் மாதம், அல்லாஹ்வை அதிகம் நெருங்கும் வாய்ப்பைப் பெறும் மாதம், சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்பட்டு நரகத்தின் வாசல்கள் மூடப்படும் மாதம், சாத்தான்கள் விலங்கிடப்படும் மாதம், ஆயிரம் மாதங்களை விட சிறப்புமிக்க ஒரு இரவைக் கொண்ட மாதம், நரகவாதிகள் நரகத்திலிருந்து விடுதலை பெறும் மாதம், குர்ஆனை இப்பூவுலகத்தில் இறக்குவதற்கு அல்லாஹ் தேர்ந்தெடுத்த மாதம், துஆக்கள் அங்கீகரிக்கப்படும் மாதம் என்று இந்த மாதத்திற்கு பல சிறப்புகள் இருக்கின்றன. இம்மாதத்திலும் நன்மைகள் செய்யாதவர் எல்லா நன்மைகளையும் இழந்தவர் என்றும் இந்த மாதத்தில் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கேட்காதவர் அல்லாஹ்வின் அருளை விட்டுத் தொலைவில் இருப்பார்கள் என்றும் நபி(ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்.
இதற்காகவே சில வருடங்களுக்கு முன்னர் ஒவ்வொரு வருடமும் அந்த பிராந்திய இளைஞர் கழகங்கள், விளையாட்டுக் கழகங்கள், சமூகசேவை அமைப்புகள் என்பன தலைப்பிறை தென்பட முன்னர் ஒவ்வொரு பிராந்தியத்திலும் உள்ள வெறும் வளவுகளை சுத்தப்படுத்தி அந்த வளவில் தற்காலிக கொட்டில்களை அமைத்து அந்த கொட்டில்களுக்கு பெண்களின் உடுபுடவைகளை கொண்டு அலங்காரமும் செய்து தனிப் பிரிப்புகளை செய்து ஹதீஸ் மஜ்லிஸை தயார்படுத்திக் கொள்வார்கள். அதன் பின்னர், ஒலிபெருக்கி வசதிகளை செய்து இவ்விடத்தில் ஹதீஸ் மஜ்லிஸ் உள்ளதாகவும் ஆண்களுக்கு வேறாகவும், பெண்களுக்கு வேறாகவும் தொழுகை வசதிகள் உள்ளதாக அறிவிக்கப்படும். அந்த மஜ்லிஸில் பெண்கள் சாரைசாரையாக வந்து தொழுவார்கள். வயது முதிர்ந்த பாட்டி முதல் கன்னிப்பெண்கள் வரை இறைவனை ஸ{ஜூது செய்ய வருவார்கள். நள்ளிரவை அண்மிக்கும் வரை நடைபெறும் தராவிஹ் (இரவுநேர தொழுகை) தொழுகைக்கு வரும் பெண்கள் மற்றும் அப்பிரதேச தனவந்தர்கள் நார்ஸா என்று அழைக்கப்படும் சிற்றுணவுகளை இந்த மஜ்லிஸ{க்கு அனுப்புவார்கள். இறைவனை தொழுது, எல்லோரும் ஒன்றுகூடி அமர்ந்து உண்டு திக்ருடன் வீடு திரும்பும் பெண்களுக்கு அந்த இளைஞர் கழகங்கள், விளையாட்டுக் கழகங்கள், சமூகசேவை அமைப்புகளின் இளைஞர்களே வீடு வரை பாதுகாப்பாகவும் சென்று அவர்களை வீட்டில் சேர்த்துவிட்டு வருவார்கள்.
அந்த ஹதீஸ் மஜ்லிஸில் தினம் ஒரு உலமா கலந்து கொண்டு மார்க்க உபநியாசம் நிகழ்த்துவார். அப்போது அவர்களின் உரைகளில் நரகம் கண்முன்னே வந்து செல்லும். வட்டி, சமூக கொடுமைகள், சீதனம், குடும்ப உறவுகள், போதைவஸ்து பாவனையால் ஏற்படும் பக்கவிளைவுகள், நன்மை தீமைகள், திருமணம் என எல்லா தலைப்புகளிலும் உரை நிகழ்த்தப்படும். காலை 09.00 மணிக்கு ஆரம்பிக்கும் இந்த மஜ்லிஸ், நண்பகல் லுஹர் தொழுகை வரை நீடிக்கும். இதை செவிமடுக்க நிறையபேர் அந்த ஹதீஸ் மஜ்லிஸில் வந்து அமர்ந்துகொண்டு பயபக்தியுடன் இருப்பார்கள். வீட்டில் சிலர் தமது வேலைகளை செய்துகொண்டே இந்த உரைக்கு தமது காதை கொடுத்திருப்பார்கள். அதுபோலவே பெண்கள் இனிமையான அக்குரலில் ஸலவாத் மாலை படிப்பார்கள். அப்போதெல்லாம் இறைவன் மீதான பயமும் சமூகத்தின் மீதான பார்வையும் தனிமனித ஒழுக்கமும் அதிகமாகவே இருந்தது. இந்த உரைகளின்போது சில உலமாக்கள் மிக ஆக்ரோஷமாக நரகத்தை பற்றி அலசி ஆராய்ந்து மறுமை பற்றிய பயத்தை உண்டாக்குவார். சில உலமாக்கள் ஜனரஞ்சகமாக நகைச்சுவை கலந்து மனித மாண்புகளை மனதில் பதித்துவிட்டு செல்வார்கள்.
இரவு நேரங்களில் தொழுகை ஆரம்பிக்க முன்னர் வீட்டுல ஒது செய்துகொண்டு அவசரமாக தொழுகைக்கு வாருங்கள், மௌலவி வந்துவிட்டார்கள் அவசரமாக தொழுபவர்கள் வாருங்கள் என அடிக்கடி ஒலிவாங்கி கத்திக்கொண்டே இருக்கும். காலையில் எட்டரைக்கு ஆரம்பிக்கும் ஒலிபெருக்கி சத்தம் இரவு 11மணிவரை கேட்டுக்கொண்டே இருக்கும். இடையில் சிறிய இடைவேளை மட்டுமே எடுத்திருக்கும். ஹதீஸ், ஹஸீதா, தொழுகை என ஒவ்வொரு நாளும் நோன்பு களைகட்டும். இப்போதெல்லாம் நோன்பு வருவதும் தெரிவதில்லை போவதும் தெரிவதில்லை. இங்குதான் எல்லா வீட்டு அரிசிகளும் பித்ரா எனும் பெயரில் வந்து சேர்ந்து கடைசியில் தொழுகை நடத்திய மௌலவி, அவருக்கு உதவி புரிந்த உதவி மௌலவி என எல்லோருக்கும் விகிதாசார அடிப்படையில் பிரித்துக் கொடுக்கப்படும்.
இவைகள் எல்லாம் இப்படி இருக்க, அமல்களை செய்துவிட்டு அமைதியாக இரவில் உறங்கிக்கொண்டிருக்கும்போது
‘பாபௌஜா… பாபௌஜா…
சஹ…ர் சஹ…ர்
லாஇலாஹ இல்லல்லாஹு
லாஇலாஹ இல்லல்லாஹ்
லாஇலாஹ இல்லல்லாஹ்
முஹம்மதுர் ரஸ_லுல்லாஹ்”
என்ற பாடல் ரமழான் மாதம் முழுக்க விசித்திரமாக ஒலித்துக் கொண்டிருக்கும். அதிகாலை வீதி வீதியாக கணீரென்ற குரல் நெஞ்சை பதறவைக்கும் றபான் ஒலியில் கலவை செய்யப்பட்டு காற்றில் விசிறப்படும். பல தெருக்கள் தள்ளி தூரத்தில் ஒலிக்கும் சஹர் பாவாக்களின் பாட்டு ஒரு காலத்தில் சகல முஸ்லிம் ஊருக்கும் அலாரமாக அதிர்ந்து கொண்டிருக்கும். பின்னிரவில் வாவாவின் பின்னால் சிறுவர்களாக குதூகளித்த அனுபவங்களும், சுவாரஷ்யங்களும் பெரும்பாலான முஸ்லிம் சிறுவர்களுக்கு ஏராளமாக கிடக்கிறது. சஹர் பாவாக்களை இறாணக்கரர் என அழைக்கக் கேட்டிருக்கிறோம். அவர்களின் றபான் ஒலி, கணீரென்ற குரல் பாடல் இப்போதெல்லாம் பெரிதாக ஒலிப்பதில்லை. மின்சார வசதி இல்லாத காலத்திலும் மண்ணெண்ணெய் விளக்குடன் தமது கடமையை செய்துகொண்டு சென்ற இவர்கள் இப்போது இரவும் பகலாக தெரியும் காலத்தில் இல்லாமல் போயிருக்கிறார்கள். இது ஒரு அழகான பாரம்பரியமிக்க கலை. முஸ்லிம்களின் வரலாற்றையும், பாரம்பரியத்தையும், கலாசாரத்தையும் சுவைபட பாட்டாக்கி கவிபாடும் திறன்கொண்ட இவர்களின் கலை இப்போது அழிந்தே போய்விட்டது என்றுதான் சொல்லவேண்டும். இப்போது விரல்விட்டு என்னும் அளவுக்கு மட்டுமே இருக்கும் சில பாபாக்கள் இந்த தொழிலிலிருந்து விடுபட்டு கொண்டார்கள். அல்லது முதுமையினால் செய்யமுடியாது இருக்கிறார்கள் என்பதே ஆராய்ச்சிகளின் முடிவாக கிடைக்கிறது. இந்த கலையை இளம் சமுதாயம் கற்கவும் தயாராக இல்லை என்பது கவலையான விடயம்.
ஈகைக் குணமும் இரக்க மனமும்
நிறைந்த மாதம்
கெட்ட இபிலீசை விலங்கிலிட்டு
தடுக்கும் மாதம்
நோன்பு நோற்ற துஆக்களெல்லாம்
ஏற்கும் மாதம்….”
என்ற இந்த பாடலை பிந்திய 10 நாட்களில் அதிலும் குறிப்பாக ரமழான் 27 பகலில் சஹர் பாவாக்கள் இந்தப் பாடலை முஸ்லிம்களுக்கு விருந்தளிப்பர். பகலில் விழும் வெயிலில் காய்ந்து முறுகி பித்ரா சேகரிக்கும் இவர்கள் தமக்கு இசைவான கலையை இழப்பதில்லை. இப்போதெல்லாம் சஹர் பாவக்களையும் அவர்களது பாடல்களையும், றபான் ஒலியையும் காணவில்லை என்ற ஏக்கம் எல்லோர் மனதிலும் இருக்கிறது. இவர்களின் இந்தப் பாடல்களுக்கு அடிமையாக இல்லாமல் எவரும் இருக்க மாட்டார்கள்.
ஹதீஸ் குடில்கள், இறாணக்கரர் என அழைக்கப்படும் பாபாக்கள், முட்டாசிக் கடைகள், மனமும் சுவையும் நிறைந்த பள்ளிக்கஞ்சி, ஈச்சங்கொட்டை விளையாட்டு, குடுடா மட்டை விளையாட்டு என்பவற்றை இப்போதைய காலத்தில் காணமுடியவில்லை. முஸ்லிம் சமூகத்தின் பாரம்பரியம் நூதனமாக இழக்கப்பட்டு போகிறது. இது வெறுமனே கடந்து போகும் ஒன்றல்ல, சமூகமொன்றின் கடந்தகாலம் தொடர்பான வாசிப்புக்கு இது போன்ற பாரம்பரியங்கள் மிகப் பிரதானமும் பாதுகாக்க வேண்டியதும்.
நோன்பு காலங்களில் பின்நேரங்களில் மாலை 3.30 முதல் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தமக்கு தூக்கும் அளவுக்கு அளவுகொண்ட பிளாஸ்டிக் வாளிகள், கோப்பைகள் என பல்வேறு பொருட்களை எடுத்துக்கொண்டு கஞ்சிப்பானையை ஏக்கத்துடன் முறைத்துப்பார்த்துக்கொண்டு நின்ற யாரையும் இப்போது பெரிதாக காணவில்லை. நோன்பு என்பது இஸ்லாமிய நாட்காட்டியின் ஒன்பதாவது மாதமான ரமழான் மாதம் முழுவதும் இஸ்லாமியர்களால் நோற்கப்படும் ஒன்றாகும். இந்நாட்களில் நோன்பு அனுஷ்டிப்பவர்கள் அதிகாலை முதல் மாலை வரையில், உண்ணாமல், நீரருந்தாமல், புகைக்காமல் மற்றும் வேறு தீயப் பழக்கங்களில் ஈடுபடாமல் இருப்பர். இப்படியானவர்கள் நோன்பை திறக்கும் வேளையில், பிரதான இடத்தை பிடிப்பதே இந்த கஞ்சி. இதற்காக பெரும் சிரத்தை எடுத்து பள்ளிவாசல் நிர்வாகங்கள் செயற்படுகின்றன.
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நோன்பு (பாவங்களிலிருந்து காக்கின்ற) கேடயமாகும்; எனவே, நோன்பாளி கெட்ட பேச்சுகளைப் பேசவேண்டாம்! முட்டாள் தனமான செயல்களில் ஈடுபட வேண்டாம்! யாரேனும் அவருடன் சண்டைக்கு வந்தால் அல்லது ஏசினால் நான் நோன்பாளி! என்று இருமுறை கூறட்டும்! என் உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அ(ந்த இறை)வன் மேல் ஆணையாக! நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் வாடை, அல்லாஹ்விடம் கஸ்தூரியின் வாடையை விடச் சிறந்ததாகும்! (மேலும்) எனக்காக நோன்பாளி தம் உணவையும், பானத்தையும், இச்சையையும்விட்டு விடுகிறார்! நோன்பு எனக்கு (மட்டுமே) உரியது; அதற்கு நானே கூலி கொடுப்பேன்! ஒரு நன்மை என்பது அது போன்ற பத்து மடங்குகளாகும்! (என்று அல்லாஹ் கூறினான்) என அபூ ஹ{ரைரா(ரலி) அறிவித்தார். (30 புகாரி) இப்படியான நோன்பு இப்போது நவீன சேர்க்கைகளினால் தனது புனிதத்துவத்தை இழந்து வருகிறது. நவீன சேர்க்கைகளினால் மார்க்கத்தினுள் பல முரண்பாடுகள் தோன்றியுள்ளன.
இந்த நோன்புகாலங்கள் இஸ்லாமியரை நேர்வழிப்படுத்த பல்வேறு படிப்பினைகளை சொல்லித் தருகிறது. நோன்பு காலங்களில் ஸலவாத் ஓதப்படுவதன் மூலம் நன்மைகள் மாத்திரமின்றி இஸ்லாமிய வரலாறுகள் பற்றிய தெளிவும் கிடைக்கிறது. நபிகளாரின் வாழ்க்கை, அவர்களின் மனைவிகள், இஸ்லாமிய வரலாறுகளை அழகாக தொகுத்து எழுதப்பட்ட ஸலவாத் மாலை இப்போதெல்லாம் பாடப்படுவதில்லை. சீறாப்புராணம் கூட இந்த காலத்தில் வெகுவாக பாடப்படும். இதன் மூலம் மிருக காருண்யம், சகோதரத்துவம், விட்டுக்கொடுப்பு, உதவி செய்யும் மனப்பான்மை என பல்வேறு அறிவுசார் தெளிவுகளை பெற்றுவந்த மக்களுக்கு இப்போது அந்த பாக்கியம் கிடைப்பதில்லை.
உங்கள் ஊர் பள்ளி பெரியதா அல்லது எங்கள் ஊர் பள்ளி பெரியதா எனும் சண்டையில் பள்ளிகளை பெரிதாக கட்டிக்கொண்ட மக்கள் அதை அலங்கரிக்க கரிசனை செலுத்தினார்களே தவிர, பள்ளிவாசல்களில் எதைக்கொண்டு அலங்கரிக்க வேண்டுமே அதை அவர்கள் தவறவிட்டு விட்டார்கள். நோன்பு நோற்றவர்கள் நேரத்தை கடத்த வேண்டும் எனும் நோக்கில் ஈச்சம்கொட்டை தெரித்தல் (பேரீச்சம் விதைகளை வைத்து விளையாடும் விளையாட்டு), கல் சொட்டுதல், தேத்திவிளையாடுதல் என பல்வேறு விளையாட்டுகளை விளையாடுவார்கள். அதன் மூலம் உடலும், உள்ளமும் நன்றாக ஆரோக்கியம் பெற்றது. ஆனால் இப்போது முகப்புத்தகம், வட்ஸ்அப், யூடியூப் என காலம் கடத்துவதனால் உடலும் உள்ளமும் வெகுவாக பாதிக்கிறது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். அதையும் விட நோன்பின் மாண்பும் சமூக வலைத்தளங்களினால் கெட்டுப்போகிறது.
ஃபஜ்ருக்கு சற்று முன்பு ஸஹர் உணவு உண்பதும் சூரியன் மறைந்த உடனே தாமதப்படுத்தாது நோன்பு திறப்பதும் சுன்னத்தாகும். இது விஞ்ஞான ரீதியாகவும் பல்வேறு நன்மைகளை கொண்டுள்ளதை விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர். அத்துடன் பேரீத்தம் பழத்தை கொண்டு நோன்பு திறப்பது, அது கிடைக்கவில்லையெனில் தண்ணீரைக்கொண்டு நோன்பு திறப்பது சுன்னத்தாகும். சுகாதார நன்மைகளும் நிறைந்துள்ளன. ஹலால் என்னும் இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்ட உணவையே உட்கொள்ள வேண்டும் எனும் நிபந்தனை எத்தனையோ குற்றச்செயல்களை தடுக்கும் ஒரு நிபந்தனையாக அமைந்துள்ளது. ஒரு நோன்பாளி அதிகமான வணக்க வழிபாடுகளில் ஈடுபடவேண்டும், அல்லாஹ் தடுத்தவைகளை விட்டும் முழுமையாக தவிர்ந்து கொள்ள வேண்டும். பொய், புறம், கோள் சொல்லுதல், ஏமாற்றுதல், ஹராமான வழியில் பொருளீட்டல் போன்ற தவறான அனைத்து சொல், செயல்களை விட்டும் தவிர்ந்திருத்தல் கட்டாயக் கடமையாகும். ரமழான் கடைசிப் பத்து நாட்களில் அதிலும் குறிப்பாக ஒற்றைப்படை இரவுகள் அனைத்திலும் இரவு முழுவதும் வணக்க வழிபாட்டில் ஈடுபட்டு லைலத்துல் கத்ர் இரவை தேடிக்கொள்ள வேண்டும். பெருநாள் தொழுகைக்கு முன்பு ஸதகத்துல் ஃபித்ர் எனும் பெருநாள் தர்மத்தை முறையாகக் கொடுக்க வேண்டும் எனும் எத்தனையோ சட்டத்திட்டங்கள், மரபுகள் இருந்தும் அது இப்போது சில காலங்களாக புதுமைகள் புகுத்தப்பட்டு சில முரண்பாடுகள் கொண்டதாக மாறிவருகின்றன. இவைகளெல்லாம் களையப்பட்டு குரானும் ஹதீஸ{ம் கூறும் இஸ்லாமிய சடங்கு சம்பிரதாயங்களுடன் மீண்டும் ஒரு நோன்பை நோற்கும் வாய்ப்பை இறைவன் எல்லோருக்கும் வழங்க பிரார்த்திப்போம்.
நூருல் ஹுதா உமர்