சுடுகாடுகளில் குவியும் சவப்பெட்டிகள் : ஸ்பெயினில் தொடரும் சோகம்
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, டாக்டர்கள், தாதியர் , அரசு அதிகாரிகள், 24 மணி நேரமும் வேலை பார்க்கும் நிலையில், ஐரோப்பிய நாடான, ஸ்பெயினில், உடல்களை அடக்கம் செய்யும் பணியாளர்கள், இரவு பகலாக வேலை செய்யும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து, சடலங்கள் வந்த வண்ணம் இருப்பதால், இவர்கள் சோர்ந்து போயுள்ளனர்.
கொரோனா வைரஸ், உலகப் பந்தை புரட்டு போட்டு வருகிறது. உலகெங்கும், 193 நாடுகளில் இதன் தாக்கம் உள்ளது.அச்சம்
இந்த வைரஸ் தொற்று, இதுவரை, 21 லட்சத்து, 2,663 பேருக்கு உறுதியாகி உள்ளது. இதுவரை, ஒரு லட்சத்து, 46 ஆயிரத்து, 870 உயிர்களை பறித்துள்ளது.அமெரிக்காவில் இதன் தாக்கம் தீவிரமாக உள்ள நிலையில், ஐரோப்பிய நாடுகளிலும், அதன் வீச்சு அதிகமாக உள்ளது.
பல்வேறு ஐரோப்பிய நாடுகள், சின்னாபின்னமாகி உள்ளன.இத்தாலி, அதிக பலியை சந்தித்துள்ள நிலையில், ஸ்பெயினில், அதிகமானோருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.மொத்தம், 4.69 கோடி மக்கள் தொகை உள்ள ஸ்பெயினில், ஒரு லட்சத்து, 84 ஆயிரத்து, 948 பேருக்கு தொற்று உள்ளது. அங்கு, இதுவரை, 19 ஆயிரத்து,315 பேர் உயிரிழந்துள்ளனர்.உயிரிழந்தவர்களின் உடல்களில் இருந்து, வைரஸ் பரவலாம் என்ற அச்சம் உள்ளதால், ஸ்பெயினில், குறிப்பிட்ட சில இடங்களில் மட்டுமே, உடல்கள் அடக்கம் செய்யப்படுகின்றன.
பணியாளர்கள் மிரட்சி
பணியாளர்கள் முழு பாதுகாப்பு கவச உடை அணிந்து, உடல்களை அடக்கம் செய்து வருகின்றனர். இதனால், பல உடல்கள், வாகன நிறுத்துமிடம் உள்பட பல்வேறு இடங்களில், அடுக்கி வைக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.உடல்களை அடக்கம்செய்ய, நாள் முழுதும், இரவு, பகல் பாராமல் பணியாற்றும் நிலை ஏற்பட்டுள்ளது.’உடல்களை பார்த்து பார்த்து, மரணம் குறித்து அச்சம் இல்லாமல் இருந்தேன். கடந்த பல ஆண்டுகளாக இந்த பணியில் இருந்தபோதும், இதுபோன்ற மோசமான நிலையை பார்த்ததில்லை. எங்களை கதிகலங்க வைத்துள்ளது கொரோனா’ என, பணியாளர்கள் மிரட்சியுடன் கூறுகின்றனர்.
தொடரும் சோகம்
உலகெங்கும், 21 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் தொற்று உள்ள நிலையில், அமெரிக்காவில் மட்டும், ஆறு லட்சத்து, 78 ஆயிரத்து, 144 பேருக்கு தொற்று உள்ளது. அங்கு, 34 ஆயிரத்து,641 பேர் உயிரிழந்துள்ளனர்.ஐரோப்பிய நாடுகளில் மட்டும், 10 லட்சத்து, 47 ஆயிரத்து, 303 பேருக்கு தொற்று; 90 ஆயிரத்து, 181 பலி பதிவாகி உள்ளது.இத்தாலியில், ஒரு லட்சத்து, 68 ஆயிரத்து, 941 பேருக்கு தொற்று உள்ளது. அங்கு, 22 ஆயிரத்து, 170 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஐரோப்பிய நாடுகளில், புதிதாக தொற்றுள்ளோர் எண்ணிக்கை சற்று குறைந்து வந்தாலும், பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.ஆசிய நாடுகளில், சீனாவுக்கு அடுத்தபடியாக, ஈரான் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. அங்கு புதிதாக, 92 பேர் உயிரிழக்க, பலி எண்ணிக்கை, 4,869ஆக உயர்ந்துள்ளது. அங்கு, 77 ஆயிரத்து, 995 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.