சிறந்த அரசியல் கலாசாரமொன்றிற்கான பரிந்துரைகளை கையளிக்கும் தேசிய நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்….
சிறந்த அரசியல் கலாசாரமொன்றிற்காக முன்மொழியப்பட்டுள்ள பரிந்துரைகள் நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் கையளிக்கும் தேசிய நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இன்று (06) பிற்பகல் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
நாட்டில் சிறந்ததோர் அரசியல் கலாசாரத்தை ஏற்படுத்துவதற்கான பரிந்துரைகள் உள்ளடங்கிய முன்மொழிவொன்றினை அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்களுக்கு முன்வைக்கும் நோக்குடன் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த முன்மொழிவுகள் மூன்று நிக்காயாக்களையும் சேர்ந்த மகாநாயக்க தேரர்கள் உள்ளிட்ட சர்வ மதத் தலைவர்களின் இணக்கப்பாட்டுடன் தயாரிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீ லங்கா அமரபுர மகா நிக்காயவின் மகாநாயக்க தேரர் சங்கைக்குரிய கொட்டுகொட தம்மாவாச தேரர், சங்கைக்குரிய திருக்குணாமலே ஆனந்த தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினரும் ஏனைய மதத் தலைவர்களும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.