கேள்வியால் கோபமடைந்த நடால்
திருமணத்திற்கு பின்னர், டென்னிஸ் வாழ்க்கையில் உந்துதலை இழந்துவிட்டதாக ஊடகவியலாளர் ஒருவர் தெரிவித்த விடயம் தொடர்பில் உலகின் முதற்தர டென்னிஸ் வீரர் ரபெயல் நடால் தனது விசனத்தை பதிவு செய்துள்ளார்.
அலெக்சாண்டர் ஸ்வெரெவுக்கு எதிராக நேற்றைய தினம் இடம்பெற்ற ஏ.டி.பி டென்னிஸ் தொடரின் போட்டியொன்றில்; நடால் தோல்வியடைந்தார்.
பரிஸ் மாஸ்டர்ஸ் அரையிறுதியில் வயிற்றுப் பகுதியில் காயத்துடன் வெளியேறிய பின்னர் இந்த போட்டி அவரது முதல் போட்டியாகும்.
நேற்றைய போட்டியானது, நடாலின் நீண்டகால காதலியான, ஜிஸ்கா பெரெல்லோவை மணந்த சில வாரங்களிலேயே இடம்பெற்ற போட்டியாகவும் அமைந்திருந்தது.
போட்டியின் பின்னர், ஊடகவியலாளர் ஒருவர், திருமணத்தின் பின்னர் உங்கள் விளையாட்டில் கவனச்சிதறல் காணப்படுவதை அவதானிக்க முடிகின்றது எனத் தெரவித்தார்.
எனினும் நடால், இந்தக் கேள்வியை, நீங்கள், நேர்மையாக என்னிடம் கேட்கிறீர்களா? அல்லது நகைச்சுவையாக கேட்கின்றீர்களா என பதில் கேள்வி எழுப்பினார்.
இதற்கு குறித்த ஊடகவியலாளர், இந்த கேள்வியை தான் நேர்மையாகவே கேட்பதாக தெரிவித்தார்.
இந்தக் கேள்வியால் கோபமடைந்த நடால், “எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது, நான் 15 வருடங்களாக ஒரே பெண்ணுடன் நிலையான மற்றும் இயல்பான ஒரு வாழ்க்கையை வாழ்கின்ற போதிலும், ஒரு மோதிரத்தை வைத்து திறமையை மதிப்பிடுவது அச்சரியமளிக்கிறது’ எனத் தெரிவித்துள்ளார்.