கல்வியை மேம்படுத்தினால் எல்லாம் சரியாகிவிடும்! – சொல்கிறார் டாக்டர் றிஷான் ஜெமீல்
(பிரபலமான ஜெமீல் ஞாபகார்த்த வைத்தியசாலை முதல்வரும், இளம் தொழில் முயற்சியாளருமான விசேட பொது குடும்பநல வைத்திய நிபுணர் டாக்டர் றிஷான் ஜெமீல் (MBBS DCH DFSRH DPD (Cardiff) MRCGP) தமிழன் நாளிதழுக்கு வழங்கிய விசேட செவ்வி)
உங்களை பற்றி அறிமுகம் செய்யுங்கள்?
நான் கல்முனை பிரதேசத்தைச் சேர்ந்தவன். என்னுடைய தந்தை பிரபலமான விசேட மகப்பேற்று வைத்திய நிபுணராக இருந்த டாக்டர் ஜெமீல். 40 வருடங்களுக்கு மேலாக இந்தப் பிரதேசத்தில் வைத்திய சேவை செய்தவர் என்ற அடிப்படையில் மக்களிடம் நல்ல மதிப்பை பெற்றவராக இருக்கிறார்.
கார்மேல் பற்றிமா கல்லூரி, சென். தோமஸ் கல்லூரி மற்றும் கல்முனை ஸாஹிரா கல்லூரி ஆகிய பாடசாலைகளின் பழைய மாணவனான நான் ருஹ{னு பல்கலைக்கழகத்தில் மருத்துவ படிப்பை முடித்துக்கொண்ட நான், கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும், காசல் வீதி வைத்தியசாலையிலும், லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையிலும் பணியாற்றிவிட்டு மேற்படிப்புக்காக இங்கிலாந்து சென்று அங்கு என்னுடைய படிப்பு முடிந்த பின்னர் ஏறக்குறைய 15 வருடங்கள் எனது சொந்த வைத்தியசாலையை லண்டனில் நடத்தி வந்தேன்.
அதன்பின்னர் கட்டார் ஹமாட் தேசிய வைத்தியசாலையில் விசேட மருத்துவ நிபுணர் வாய்ப்பொன்று கிட்டியது. ஏறக்குறைய 4, 5 வருடங்களாக இப்போதும் அங்கு பணியாற்றி வருகிறேன். எனது மகளும் இப்போது மருத்துவத்துறைக்கு தன்னை அடையாளப்படுத்திக்கொள்ள தயாராகி வருகிறார்.
ஜெமீல் ஞாபகார்த்த வைத்தியசாலையை உருவாக்கக் காரணம் என்ன?
1984 ஆம் ஆண்டு ~சென்ரல் நேர்சிங் ஹோம்| எனும் பெயரில் உருவாக்கப்பட்ட மருத்துவ நிலையம் பின்னர் கிரஸண்ட் வைத்தியசாலை எனும் பெயரில் இயங்கி வந்ததுடன்அ 2018ஆம் ஆண்டில் புதிய தொழில்நுட்பத்துடன் டாக்டர் ஜெமீல் ஞாபகார்த்த வைத்தியசாலை எனும் பெயர்மாற்றத்துடன் இன்று சிறப்பாக இயங்கி வருகிறது. அம்பாறை மாவட்டத்தின் முதல் தனியார் வைத்தியசாலையாக உருவாக்கப்பட்ட இந்த வைத்தியசாலையில் இதுவரை பல்லாயிரக்கணக்கானவர்கள் சிகிச்சை பெற்றுள்ளனர்.
37 வருடங்களாக கல்முனையில் இயங்கிவந்த இந்த வைத்தியசாலை இப்போது நாட்டின் நிலை கருதியும், நோயாளர்களின் நன்மை கருதியும் அம்பாறை மாவட்டத்தின் பல இடங்களில் சேவை நிலையங்களை விஸ்தரித்துள்ளதுடன், மாளிகைக்காடு சந்தியில் தன்னுடைய இரண்டாவது வைத்தியசாலையை அண்மையில் திறந்துவைத்துள்ளது.
வைத்தியர்கள் பல்வேறு துறைகளில் முதலீடுகளை செய்து கொண்டிருக்கிறார்கள். நீங்கள் ஏன் தனியார் மருத்துவத்துறையை தெரிவுசெய்தீர்கள்? அதிக இலாபம் உழைக்கும் நோக்கமா?
என்னைப் பொறுத்தமட்டில் எனது வைத்தியசாலையை கட்டியெழுப்ப வேண்டும் எனும் எண்ணம் இருந்தது. அதனை செய்வதற்காக நிறைய முதலீடுகளை நான் முதலிட வேண்டியிருந்தது. நிறைய பேர் பணம் கிடைத்தால் வெளிநாட்டில் முதலீடு செய்வார்கள். தலைநகரில் வளவுகள், வீடுகள் வாங்கி விற்பனை செய்வார்கள்.
ஆனால், நான் என்னுடைய வைத்தியசாலையை கட்டியெழுப்பியுள்ளேன். நான் கட்டாரில் வியாபாரம் செய்யவில்லை. மாதாந்த சம்பளத்திற்கே பணியாற்றி வருகிறேன். என்னுடைய தாய்நாட்டுக்கு சேவையாற்றும் எண்ணம் எனக்கிருக்கிறது. இன்னும் சில மாதங்களில் நான் இங்குவந்து நிரந்தரமாக சேவையாற்ற எண்ணியுள்ளேன். வளவுகள், சொத்துகளை வாங்கிப்போட்டால் சில காலங்களில் அதன் மதிப்பு பல மடங்காக உயர்ந்திருக்கும்.
ஆனால், மருத்துவத்துறை முதலீடுகள் அப்படியல்ல. மருத்துவத்துறைக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களின் தேய்மானங்கள், பழுதடையும் தன்மைகளினால் பாரியளவு செலவுகள் பராமரிப்புக்கு மட்டுமே செலவாகும். தனியார் மருத்துவத்துறை பாரியளவிலான இலாபமீட்டும் தொழிலாக இருந்திருந்தால் இலங்கையில் எத்தனை ஆயிரம் டாக்டர்கள் இருக்கிறார்கள்.
அவர்களெல்லாம் இந்நேரம் தனியார் மருத்துவமனைகளை கட்டியெழுப்பியிருப்பார்கள். மக்கள் வெளியிலிருந்து தமிழ்த் திரைப்படங்களை பார்த்துவிட்டு கருத்துக் கூறுவதுபோன்று மிகப்பெரிய இலாபமீட்டும் தொழிலாக தனியார் வைத்தியசாலைகள் இல்லை. அதற்கான மனித உழைப்புக்கேற்ற வருமானம் கிடைப்பதில்லை. அதனால்தான் நிறையபேர் (மருத்துவத்துறை சார்ந்தவர்கள்) அதை விரும்பாமல் சொத்துகள், வளவுகள், காணிகளை கொள்வனவு செய்வதில் ஆர்வம் காட்டுகிறார்கள்.
அதில் கிடைக்கும் வருமானத்தில் சில வீதங்கள்தான் தனியார் மருத்துவத்துறையில் கிட்டுகின்றன. ஆத்ம திருப்திக்காக நாங்கள் கற்ற கல்வியை கொண்டு சேவையாற்றும் மனவியல்புடனையே இந்த பணியை முன்னெடுத்து வருகின்றோம். இந்த வைத்தியசாலைகளை முன்னெடுத்துச் செல்வதில் எனது மனைவிக்கு கூட உடன்பாடு இல்லை. இந்த முதலீடுகளை வேறு ஏதாவது துறையில் முதலீடு செய்யலாம் என்பதே என்னுடைய குடும்பத்தினரின் ஆலோசனையாக அமைந்துள்ளது.
மருத்துவ உபகரணங்கள் கொள்வனவு செய்யப்பட்டு ஒரு தடவை மட்டும் பாவித்தாலே அதன் சந்தை பெறுமானம் வெகுவாக குறைந்துவிடும். சில நேரங்களில் ஒரு இயந்திரத்தினால் வரும் வருமானத்தை விட பல மடங்கு அதன் பராமரிப்புக்கும், தேய்மானத்திற்கும் செலவாகி விடுகிறது. ஒரு சிறிய பாகத்தின் விலை ஆக உச்சமாக இருக்கும்.
பிறந்த ஊருக்கும் கற்ற கல்விக்கும் ஏதாவது ஒன்றை செய்யவேண்டும் என்ற நோக்கில் இதனை முன்னெடுத்து வருகிறேன். இதனை பார்க்கும் ஏனைய சகோதரர்களும் என்னை விட மேன்மையான சேவையை வழங்க முன்வருவார்கள். இதனால் மக்களுக்கு சிறந்த சிகிச்சைகள் கிடைக்கும் என்று நம்புகிறேன். எங்களது வைத்தியசாலையில் அஹ்ரகாரா எனும் காப்புறுதித் திட்டம் அடங்கலாக இன்னும் பல திட்டங்கள் இருக்கின்றன. அதன்மூலம் தகுதியானவர்கள் காப்புறுதியை பெற முடியும்.
உங்கள் வைத்தியசாலையின் விசேட தன்மையாக எதனை கருதுகிறீர்கள்?
தலைநகரில் அமைந்துள்ள வைத்தியசாலைகளுக்கு நிகராக சொகுசான இடமாக இந்த வைத்தியசாலையை உருவாக்கியுள்ளேன். எங்களிடமுள்ள விசேட உபகரணங்களைக்கொண்டு நெருக்கமான முறையில் நோயாளர்களை கவனிக்கும் தன்மையை உருவாக்கியுள்ளோம். இதற்காக திறமையும், அனுபவமும் வாய்ந்த தாதியர்களை நாங்கள் நியமித்துள்ளோம்.
மறைந்த டாக்டர் ஏ.எல்.எம்.ஜெமீலால் தொடங்கப்பட்டு கடந்த 37 ஆண்டுகளுக்கு முன்னர் செவிலியராக ஆரம்பித்து, 10,000இற்கும் மேற்பட்ட குழந்தைகளைப் பெற்றெடுத்தது, புதிய அமைப்புகள் மற்றும் சேவைகளுடன் புதுப்பிக்கப்பட்டு, 35இற்கும் மேற்பட்ட சிறப்புகளுடன் செனலிங் சேவைகள், லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சைகள், கண் மருத்துவ அறுவை சிகிச்சைகள், பொது அறுவை சிகிச்சைகள், எலும்பியல், சிறுநீரகம், மகளிர் மற்றும் மகப்பேறு அறுவை சிகிச்சைகள் போன்றவையுடன் எண்டோஸ்கோபி, டிரெட்மில் அழுத்த சோதனை, எக்கோ, அல்ட்ராசவுண்ட் ஸ்கேன், எக்ஸ்ரே வசதிகள் உள்ள அம்பாறை மாவட்டத்தின் முதல் தனியார் வைத்தியசாலையான டாக்டர் ஜெமீல் ஞாபகார்த்த வைத்தியசாலையின் கிளை வைத்தியசாலையான சாய்ந்தமருது ஜெமீல் ஞாபகார்த்த வைத்தியசாலை மற்றும் பிரதேச சேவை வழங்கும் நிலையங்கள் என்பன சிறப்பாக இயங்கி வருகின்றன.
நாங்கள் வசதிகுறைந்த மக்கள் வாழும் பிரதேசத்தில் சேவையாற்றி வருவதனால் குறைந்த செலவில் உயர்தர சேவைகளை வழங்குவதை இலக்காகக்கொண்டுள்ளோம், தற்போது எங்களின் டுளுஊளு செலவு மூலதன விலையில் கிட்டத்தட்ட 13 ஆகும். நமது எதிர்காலத்தில் ஆர்த்ரோஸ்கோபிக் அறுவை சிகிச்சைகள், நுNவு அறுவை சிகிச்சைகள், கேத் லேப், ஊவு ஸ்கேன் வசதிகள் போன்றவற்றை நிறுவ தயாராகி வருகின்றோம். தலைநகருக்கு சென்று செய்யவேண்டிய சத்திர சிகிச்சைகளை எங்களின் வைத்தியசாலையிலேயே செய்வதற்கான வசதிகள் எங்களிடம் இருக்கின்றன. பல கோடி பெறுமதியான
நவீன மருத்துவ உபகரணங்கள் எங்களிடம் இருக்கிறது. இதனைக்கொண்டு நாங்கள் மக்களுக்கு திருப்திகரமான சேவைகளை வழங்கி வருகிறோம்.
நீங்கள் பயணித்திருக்கும் நாடுகளுக்கும், இலங்கைக்கும் இடையிலான மருத்துவ ரீதியான வேறுபாடுகள் பற்றி கூறுங்கள்.
இலங்கையில் மிகவும் தேர்ச்சிபெற்ற, திறமையான வைத்தியர்கள், விசேட வைத்திய நிபுணர்கள் இலங்கையில் இருக்கிறார்கள். நான் பார்த்தவகையில் அம்பாறை மாவட்டத்திலுள்ள வைத்தியசாலைகளில் வளப்பற்றாக்குறை காரணமாக செய்வதற்கு முடியாத நிலையிலுள்ள சத்திரசிகிச்சைகளை கூட மிக சாதாரணமாக செய்யும் திறமையுள்ள வைத்தியர்கள் இங்கிருக்கிறார்கள். அது மாத்திரமன்றி நன்கு தேர்ச்சிபெற்ற விசேட மகப்பேற்று வைத்திய நிபுணர்களும் இருக்கிறார்கள். பொதுநல வைத்திய நிபுணர்கள் இவையெல்லாவற்றையும் இலங்கையின் மருத்துவத்துறையின் பலமாக பார்க்கிறேன்.
அதுபோன்று மேற்கத்தைய நாடுகளில் கட்டுப்பாடுகள் நிறைய இருக்கின்றன. 15 வருடங்களுக்கு மேல் லண்டனில் பணியாற்றிய அனுபவத்தினூடாக நான் கண்டது என்னவெனில், நவீன தொழில்நுட்பங்களைக்கொண்டு அவர்கள் எங்களை கண்காணித்துக்கொண்டிருப்பார்கள். நாம் பயன்படுத்தும் மருந்துகள் தொடர்பில் ஒரு தகவல் பேணப்படும்.
ஆனால், எமது நாட்டில் பயன்படுத்தும் மருந்துகள் உடனடியாக நோய்க்கு நிவாரணியாக இருக்கவேண்டும் என்று விரும்புவதனால் பக்கவிளைவுகள் பற்றி நாம் சிந்திப்பதில்லை. சில வைத்தியர்கள், நான் நல்ல வைத்தியர். என்னிடம் வரும் நோயாளர்களுக்கு நான் திருப்தியான சிகிச்சையை வழங்கக்கூடியவன் என்ற பெயரை எடுக்கவேண்டும் என்பதற்காக பக்க விளைவுகள் கூடிய மருந்துகள் பரிந்துரை செய்யப்படுகின்றனர். அதனால் சிறுநீரகம், ஈரல் போன்ற பல பாகங்கள் பாதிப்படைகின்றன. இதனைக் கட்டுப்படுத்தவே மேற்கத்தைய நாடுகளில் கட்டுப்பாடுகள் நிறைய இருக்கின்றன.
மேற்கத்தைய நாடுகளில் தொற்றாநோய்களான குருதியழுத்தம், நீரிழிவு, ஆஸ்துமா போன்ற நோயாளர்களையும் பதிவொன்றினூடாக கண்காணித்துக்கொண்டிருக்கிறார்கள். அதனால் தொடர்ச்சியான சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. எல்லாவற்றுக்கும் வைத்தியர்களைத்தான் பயன்படுத்தவேண்டும் என்றில்லை. தாதிய உத்தியோகத்தர்களே போதுமானவர்கள்.
இப்படியான செயற்பாடுகளினால் உடலுறுப்புகளுக்கு ஏதாவது பாதிப்பு வரப்போவதை அறிந்து ஆரம்ப நிலையிலேயே அதற்கான சிகிச்சைகள் நடைபெறுகின்றன. ஆனால், நமது நாட்டில் அப்படியான தொடர்ச்சியான கண்காணிப்பு நடைபெறுவதில்லை. நோயாளர்களும் தனது நோய்களை அவசரமாக குணமாக்கவே விரும்புகிறார்கள். மேற்கத்தைய நாடுகளில் உள்ள மருத்துவர்கள் தங்களுக்கிடையிலான அறிவு பரிமாற்றலை சிறப்பாக செய்கிறார்கள். எமது நாட்டில் அது சாத்தியமானதாக தெரியவில்லை.
மேற்கத்தைய நாடுகளில் அறிவை விருத்திசெய்வதற்கான கலந்துரையாடல்கள், பயிற்சிநெறிகள் நடைபெறுகின்றன. ஆனால், இலங்கையில் அது மிகக் குறைவாக இருக்கிறது. எமது நாட்டிலுள்ள வைத்தியர்களும் நேரத்தை ஒதுக்கி அறிவு பகிர்தலை மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் சிறந்த சேவையை மக்களுக்கு வழங்க முடியும்.
கிராமிய மற்றும் அபிவிருத்தியடைந்த பிரதேச மக்கள் சிகிச்சைகளுக்காக அந்த பிரதேசங்களை விட்டு தலைநகரை நோக்கி செல்வதனால் அவர்களுக்கு ஏற்படும் நஷ்டமாக அல்லது இலாபமாக எதை பார்க்கிறீர்கள்?
அந்த பிரதேச வைத்தியர்கள் மீதும், வைத்தியசாலைகள் மீதும் நம்பிக்கை இழந்தவர்களாக தலைநகருக்கு சென்று சிகிச்சை பெறுகிறார்கள். இதன்மூலம் சாதாரண செலவுகளை விட மூன்று மடங்கு செலவுகள் அந்த நோயாளிகளினால் தலைநகரிலுள்ள வைத்தியசாலைகளுக்கு வீணாக செலுத்தப்படுகிறது.
மக்களின் நிலையறிந்து மிகக்குறைந்த ஆதாயத்தை மட்டுமே இலக்காகக்கொண்டு நாங்கள் செயற்படுகிறோம். அதுதான் மன நீதியும் கூட. மக்களின் அபிமானத்தையும், நம்பிக்கையும் பெற்றதனால் எங்களின் வைத்தியசாலையின் கிளை நிறுவனங்களை மக்களின் காலடிக்கே கொண்டுசென்றுள்ளோம்.
மாகாணங்களுக்கிடையில் ஒரு வைத்திய நிபுணர் சென்று சேவையாற்றுவதாக இருந்தால் அதில் பல பிரச்சினைகள் இருக்கிறது. அந்த மாகாணத்தில் வசிக்கும் வைத்திய நிபுணர்களின் ஒப்புதல்களும் பெற வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளதாக அறிகிறேன்.
இலங்கையின் இலவசக் கல்வியை பயின்ற வைத்தியரான நீங்கள் தனது பட்டத்தை பெற்றபின்னர் தாய்நாட்டுக்கு முழுமையாக சேவையாற்றாமல் வெளிநாட்டுக்கு சென்றது ஏன்? அதுபற்றி உங்கள் கருத்து என்ன?
மருத்துவப் படிப்பை முடித்துக்கொண்ட நான், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நரம்பு சம்பந்தமான பிரிவில் பணியாற்றினேன். எனது பாடசாலை காலத்திலிருந்தே நான் இலங்கைக்கு சேவையாற்றவே விரும்பினேன். இலங்கையின் கல்வி முறையின்படி மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலான வர்களையே விசேடதுறை கல்விக்கு அனுமதிப்பார்கள்.
அந்த வாய்ப்பை நான் பெற தவறிவிட்டேன். பின்னர் காலத்தின் கனதியறிந்து வெளிநாட்டுக்கு உயர்கல்விக்காக சென்றேன். அங்கு அந்த வாய்ப்பு உடனடியாக கிடைப்பதில்லை.
அதற்காக பல்வேறு படிமுறைகள் இருக்கின்றன. அதனை கடந்தே அந்த வாய்ப்பை பெறவேண்டியிருந்தது. அதற்கே 7-8 வருடங்கள் கடந்துவிட்டன. அதன் பின்னர் இலங்கைக்கு திரும்பினாலும் பல்வேறு தடைதாண்டல்கள் இருக்கின்றன. அதன் பின்னரே எமது எண்ணங்களை சாத்தியப்படுத்த முடியும்.
விசேட பொது குடும்பநல வைத்திய நிபுணராக நீங்கள் என்ன கூற விரும்புகிறீர்கள்?
தொற்றாநோய்களான உயர் குருதியமுக்கம், நீரிழிவு, ஆஸ்துமா, சிஓபிடி (நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்) போன்ற துறைகளில் என்னுடைய உயர்கற்கைகளை பூர்த்திசெய்துள்ளேன். அதுமட்டுமின்றி சிறுபிள்ளை மருத்துவத்துறையிலும், தோல்நோய்கள் போன்ற துறைகளிலும் நான் தேர்ச்சி பெற்றுள்ளேன்.
பாலியல் நோய்கள் மற்றும் பாலியல் சிக்கல்கள் தொடர்பிலான துறையிலும் கற்கைநெறிகளை பூர்த்தி செய்துள்ளேன். என்னுடைய மருத்துவத்துறை அனுபவத்தில் 17 விசேட பிரிவுகளில் பணியாற்றிய அனுபவம் இருக்கிறது. அந்த அனுபவங்களைக்கொண்டு காது தொடர்பிலான பல்வேறு சத்திரசிகிச்சைகளை மேற்கொள்ளவேண்டியுள்ளதால் ஆர்த்ரோஸ்கோபிக் அறுவை சிகிச்சை இயந்திர வசதிகளை நிறுவ தயாராகி வருகின்றோம்.
எங்களின் பிரதேசத்தில் நிறைய தேவைகளை உடைய நோயாளர்கள் இருக்கிறார்கள். அவர்களை வேறு பிரதேசங்களுக்கு சென்று கஷ்டப்படாமல் திருப்திப்படுத்தும் விதமாக சேவைகளை வழங்க தயாராகவுள்ளோம்.
உங்களின் எதிர்கால இலக்குகள் அல்லது நோக்கங்கள் என்ன?
கேத் லேப், ஊவு ஸ்கேன், டயாலிசிஸ் இயந்திரங்களைக்கொண்ட வைத்தியசாலையாக எங்களின் வைத்தியசாலையை உருவாக்கி தலைநகரில் உள்ள பிரபல வைத்தியசாலைகளை ஒத்ததாக எங்களின் வைத்தியசாலையை உருவாக்க வேண்டும் எனும் தூரநோக்கைக்கொண்டு பணியாற்றி வருகிறோம். எதிர்காலத்தில் மக்கள் நோயாளர்களாக வைத்தியசாலைக்கு வருவதை குறைக்க வேண்டும். அதற்கான விழிப்புணர்வு கருத்தரங்குகளை பாடசாலை மட்டத்திலிருந்து ஆரம்பித்துள்ளோம். அதன் ஓர் அங்கமாக குருதியழுத்தம், நீரிழிவு தொடர்பில் மாணவர்களுக்கு தெளிவுபடுத்தி வந்துள்ளோம்.
இதன்மூலம் உருவாகும் எதிர்கால ஆபத்துகள் கிட்னி, கண் போன்ற அங்கங்கள் பழுதாகும் தன்மையிலிருந்து மக்களை பாதுகாக்கலாம். உடம்பையும், சுகாதாரத்தையும் கவனத்திற்கொள்ளாமல் சொத்துகளைத் தேடி அலைந்து பின்னர் நோயுற்று இறக்கும் நிலையே இப்போது அதிகமாக இருக்கிறது. ஆரோக்கியமான வாழ்க்கை எல்லா மனிதர்களுக்கும் அவசியமாகிறது. உணவுப் பழக்கவழக்கங்கள், உடற்பயிற்சி போன்றவை தொடர்பில் மாணவர்களுக்கு அறிவூட்டி வருகிறோம்.
இலங்கை கல்வி முறை பற்றிய உங்களின் பார்வை என்ன?
அபிவிருத்தி அடைந்த சமூகத்திற்கு வீதிகள், கட்டடங்கள் தேவைதான். அதையும் தாண்டி எமது நிலையான அபிவிருத்தியானது கல்வி மட்டத்தில் இருந்துதான் நமது மாற்றம் உருவாக வேண்டும். இது தொடர்பில் பிரபல கல்லூரிகள் மற்றும் தேசிய பாடசாலை அதிபர்களிடம் கலந்துரையாடியுள்ளோம்.
05 வயது முதலே மாணவர்களை சிறந்த நன்னடத்தை, ஒழுக்கம் உள்ளவர்களாக, நேர்மையானவர்களாக மாற்றியமைத்து உருவாக்க வேண்டும். கல்முனை பிரதேசத்தில் உள்ள சில முக்கிய பாடசாலைகளை நான் நோக்கியதில் நிறைய கட்டடங்கள் வந்துள்ளன.
ஆனால், தலைநகரிலுள்ள பாடசாலைகளை போன்று நீச்சல் தடாகம், உள்ளக விளையாட் டரங்கு, உடற்பயிற்சிக்கூடம் போன்ற எதுவுமில்லை. இதனால் உடல், உள ரீதியான ஆறுதல்கள் இல்லாமல் போகின்றது. இவற்றை ஏன் எங்களின் பிரதேச பாடசாலைகளில் உருவாக்க முடியாமல் உள்ளது என்று நான் சிந்தித்துள்ளேன். இதற்கு நிறைய முதலீடுகள் தேவையில்லை. ஒரு மைல் வீதி அபிவிருத்திக்கு செலவாகும் பணத்தை விட குறைவாகவே இந்தத் தேவைகளை நிவர்த்தி செய்ய பணம் செலவாகும்.
மேற்கத்தேய நாடுகளில் மாணவர்களுக்கு பாடசாலைகளிலிருந்தே விளையாட்டு, தொழில் வழிகாட்டல், மொழியாள்கை போன்றன பயிற்றுவிக்கப்படுகின்றன. அதனால் அவர்களினால் பாடசாலை காலம் முடிந்த பின்னர் இலகுவாக நேர்முகப்பரீட்சைகளை எதிர்கொள்ள நேரிடுகிறது. எனது மகள் மேடைகளில் கூச்சமில்லாமல் பேசும் அளவுக்கு என்னால் பேச முடியாது. அதற்குக் காரணம் எமது நாட்டின் கல்வி முறையே. எதிர்கால சந்ததியினரின் நலன்கருதி கற்பித்தல் முறையில் மாற்றம் தேவைப்படுகிறது. ஏனைய நாடுகளில் இல்லாத வளங்கள் எம்மிடம் இருக்கின்றன. அதை நாம் சரியாக பயன்படுத்த வேண்டும்.
பாடசாலைகளுக்கு மாடிக்கட்டடங்கள் தேவைதான். அதனை விட தேவையாக இருப்பது மாணவர்களின் திறமைகளை வெளிக்கொண்டுவர தேவையான விடயங்கள். திறமையான ஆசிரியர்கள், பயிற்றுவிப்பளர்கள் இருக்கிறார்கள். ஆனால், வளங்கள் சரியாக வழங்கப்படவில்லை என்பதே இங்கிருக்கும் பிரச்சினை. நான் ஆரம்பக்கல்வி கற்றபோது இருந்த விடயங்கள் இப்போதும் இருக்கின்றன. அதில் மாற்றங்கள் அவசியமாக உணரப்படுகிறது.
சரியான திட்டமிடல்களுடன் கூடிய செயட்பாட்டை முன்னெடுத்தால் எதிர்கால சந்ததி சுகதேகியாக, ஆரோக்கியமிக்கவர்களாக, நன்னடத்தை கொண்டவர்களாக, சுயகௌரவமிக்கவர்களாக உருவாகுவர்.
மருத்துவத்துறையையும் தாண்டி சமூகநல வேலைத்திட்டங்களிலும் ஈடுபட்டு வருகிறீர்களா?
எங்களின் சமூகநல திட்டத்தினூடாக 100 குடும்பங்களுக்கு மேல் குடிநீர் வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளோம், பிரதேச பாடசாலைகளுக்குத் தேவையான அத்தியாவசிய தேவைகளை சில பாடசாலைகளுக்கு செய்துகொடுத்திருக்கிறோம், தொற்றாநோய்கள், சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு வேலைத்திட்டங்களை செய்து வருகிறோம். சுகதேகியான சந்ததிகளை உருவாக்க விளையாட்டுத்துறைக்கு பங்களிப்பு செய்து வருகிறோம்.
சிலருக்கு வீடமைப்பதற்கான உதவிகளை செய்து கொடுத்துளோம். மாணவர்களை கல்வியில் ஊக்கப்படுத்த அவர்களுக்கான மேம்பாட்டு உதவிகளை செய்து வருகிறோம்.
அரச வைத்தியசாலைகளுக்கு அருகில் நிறைய தனியார் வைத்தியசாலைகள் அல்லது பரிசோதனைக்கூடங்கள் உருவாகக் காரணம் என்ன?
சில பிரதேச வைத்தியசாலைகளில் இல்லாத வளங்கள் அருகில் இருக்கும் தனியார் வைத்தியசாலைகளில் இருக்கும். அதனால் அந்த நோயாளிக்குத் தேவையான சிகிச்சையை இலகுவாக பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும். இல்லாதுபோனால் அந்த நோயாளியை வேறு வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக மாற்றவேண்டிய நிலை வரும்.
அது மட்டுமன்றி, விசேட வைத்திய நிபுணர்கள் வருகை தருவதனால் அரச வைத்தியசாலைகளுக்கும் நன்மை கிடைக்கிறது – என்றார் .
நூருல் ஹுதா உமர்