ஒரே நாடு ஒரே சட்டம்| எங்கிருந்து எப்போது ஆரம்பமானது – முடிவு எங்கே?
இலங்கையில் ~ஒரே நாடு ஒரே சட்டம்| என்ற நிலையை உறுதிப்படுத்துவதற்காக தேவையான சிபாரிசுகளை செய்வதற்காக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரரின் தலைமையில் 15 பேரைக் கொண்ட ஒரு ஜனாதிபதி செயலணி குழுவை விசேட அரசாங்க வர்த்தமானி அறிவித்தல் மூலம் ஜனாதிபதி நியமனம் செய்துள்ளார். 13 அங்கத்தவர்களைக் கொண்ட அந்தக் குழுவின் அறிக்கையை 2022 பெப்ரவரி 28ஆம் திகதி சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டிருக்கின்றது.
ஆனாலும், இந்தக் குழுவுக்கு ஞானசார தேரரை தலைவராக நியமித்தமை தொடர்பாக நாடளாவிய ரீதியில் பல மட்டங்களிலும் வாத விவாதங்கள் நடைபெற்று வந்ததையும் அவதானிக்க முடிந்தது. அவை எவ்வாறாக இருந்தாலும், இந்தக் குழுவால் தயாரிக்கப்படுகின்ற அறிக்கை இந்நாட்டின் வரலாற்றில் ஒரு சமூகம் அனுபவித்து வருகின்ற உரிமைகளை பூண்டோடு குழிதோண்டி புதைப்பதற்கு காரணமாக அமையுமா என்பது இலங்கை வாழ் முஸ்லிம்களது கேள்விக்குறியாகும்.
எவ்வாறாயினும், இந்தக் குழுவுக்கு பொதுமக்களின் அபிப்பிராயங்களும் ஆலோசனைகளும் கோரப்பட்டதோடு அதற்கான கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ~ஒரே நாடு ஒரே சட்டம்| என்ற சிந்தனை எப்போது ஆரம்பித்தது, எங்கிருந்து, யாரால் ஆரம்பிக்கப்பட்டது? ~ஒரே நாடு ஒரே சட்டம்| என்பது எவ்வாறு அமைய வேண்டும்? என்பது தொடர்பாக கவனம் செலுத்துவதே இந்த கட்டுரையின் நோக்கமாகும்.
சட்டம் பற்றிய தத்துவத்தின் அடிப்படையாக சொல்கின்றபோது அனைவரும் சட்டத்தின் முன் சமம் என்ற கோட்பாட்டை முன்வைத்தே இந்நாட்டில் சட்டம், நீதி நிலை நாட்டப்படுகின்றது. எவருக்கும் எந்த அடிப்படையிலும் வேறுபாடோ, பாரபட்சமே, ஒதுக்கல்களோ காட்டக் கூடாது என்பது அரசியல் அமைப்பின் வலியுறுத்தலாகும். அவ்வாறு இன, மத, பால், சமய, மொழி அடிப்படையிலான பாரபட்சம் காட்டப்படுமானால் அது அரசியலமைப்பால் உறுதிப்படுத்தப்பட்ட அடிப்படை உரிமையை மீறுவதாக அமைகின்றது. உலகில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள ஜனநாயக விழுமியங்களுக்கு முரணானதாகவும் அமைகின்றது.
ஆனாலும், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற தத்துவம் முன்வைக்கப்பட்டாலும் காலத்திற்கு காலம் நீதித்துறை தொடர்பாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வந்திருப்பதோடு நீதியை நிலைநாட்டுவதில் பாரபட்சங்கள் இடம்பெறுவதாக சாதாரண மக்கள் முதல் அரசியல்வாதிகள் வரையில் குற்றம் சாட்டப்படுகின்றது. வரவு – செலவுத் திட்ட விவாதத்தில் உரையாற்றிய கொழும்பு மாவட்ட எதிர்க்கட்சி உறுப்பினரான முஜீபுர் ரஹ்மான் நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போது இன்றைய ஆட்சியில் செல்வாக்கு செலுத்துபவர்கள் தொடர்பாக கடந்த நல்லாட்சி அரசாங்க காலத்தில் ஊழல், மோசடிகள், பொதுச் சொத்து சூறையாடல் உட்பட பல குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் தொடுக்கப்பட்டிருந்த 45 வழக்குகள் வாபஸ் பெறப்பட்டிருப்பதாக நாடாளுமன்றத்தில் குற்றம் சுமத்தினார்.
~ஒரே நாடு ஒரே சட்டம்| என்ற தத்துவம் சரியான முறையில் கடைபிடிக்கப்படுகின்ற நிலை இருந்திருந்தால் ஆட்சியாளர்களுக்கு ஒரு சட்டம், ஆளப்படுவோர்களான சிவில் சமூகம் அல்லது பொதுமக்களுக்கு ஒரு சட்டம் என்ற நிலை இருக்கக்கூடாது என்பதை அவர் சுட்டிக்காட்டினார். இவ்வாறான ஒரு நிலையில்தான், 2010ஆம் ஆண்டு பொதுபல சேனா அமைப்பு முஸ்லிம் சமூகத்தால் நடைமுறைப்படுத்தி வந்த ஹலால் விவகாரங்களை ஒரு பிரச்சினையாக மாற்றி தேசிய பிரச்சினையாகும் மட்டத்திற்கு கொண்டு போனது.
நாடளாவிய ரீதியில் ஹலால் எதிர்ப்பை தோற்றுவித்து முஸ்லிம்களுக்கு மட்டும் எதற்காக வேறான ஒரு நடைமுறை என்ற அடிப்படையில் பிரச்சினை உருவாக்கப்பட்டது. அதன் பின்னர் இந்த பொதுபல சேனா அமைப்புடன் இன்னும் பல பௌத்த தீவிரவாத அமைப்புகள் ஒன்றிணைந்து முஸ்லிம்கள் இந்நாட்டில் சுமார் 200 வருடங்களுக்கு மேலாக அனுபவித்து வரும் ஒவ்வொரு உரிமையையும் குறிப்பிட்டு அவை முஸ்லிம்களுக்கு பிரத்தியேகமான சலுகைகள், சட்டங்கள் என்று கூறி அவற்றை நீக்க வேண்டும் என்ற அடிப்படையில் அப்பாவி பொதுமக்கள் மத்தியில் கருத்துகள் பரப்பப்பட்டு பிரிவினைவாத சிந்தனை உருவாக்கப்பட்டது.
இவ்வாறான கருத்துகள் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் விஞ்ஞாபனங்களை வெளியிட்ட பொதுஜன பெரமுன கட்சி பெரும்பான்மை சிங்கள மக்களது வாக்குகளை பெறுவதற்காக முக்கியமான ஒரு தேர்தல் வாக்குறுதியாகவும் மக்கள் முன்னிலையில் வைத்து ஆட்சி அதிகாரத்தை கோரியது. அதற்கு ஆதரவாக ஒருபுறம் ஞானசார தேரர், அத்துரலியே ரத்ன தேரர் ஆகியோரும் மறுபுறமாக டான் பிரியசாத், அமித் போன்றோரும் சிங்கள மக்களது வாக்குகளை திரட்ட ~ஒரே நாடு ஒரே சட்டம்| என்ற கோஷங்களை முன்வைத்து நாட்டு மக்களை தவறான வழிக்கு இட்டுச் செல்லலாயினர்.
இதில் குறிப்பாக முஸ்லிம் சமூகம் இதுவரையில் அனுபவித்து வந்த திருமணச் சட்டம், விவாக இரத்துச் சட்டம், மஸ்ஜித் (பள்ளிவாசல்களை) பராமரிப்பு தொடர்பான வக்ப் சட்டம், காதி நீதிமன்ற நடைமுறை போன்ற இஸ்லாமிய போதனைகளின் அடிப்படையிலான (தனியார்) சட்டங்களை நடைமுறையில் இருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வந்தது. அதன் பிரதிபலிப்பே இந்த ஒரே நாடு ஒரே சட்டம் என்ற ஜனாதிபதியின் விசேட அரசாங்க வர்த்தமானி அறிவித்தல் மற்றும் ஜனாதிபதி செயலணி குழு நியமனம் என்ற நடவடிக்கை வரையில் நிலைமை சென்றிருக்கின்றது.
மாறாக, நாட்டில் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற தத்துவத்திற்கு மாறாக அரசியல்வாதிகள் ஜனாதிபதி முதல் அமைச்சர்கள், ஆட்சியாளர்கள், அதிகாரிகளால் மீறப்பட்டும், பக்கச்சார்பாகவும் பயன்படுத்தி வருகின்ற சட்ட மீறல்களை தடுத்து ஆட்சியாளரானாலும் அதிகாரிகளானாலும் எல்லோருக்கும் ஒரே சட்டம் என்ற நிலையை உருவாக்குவதற்காக அல்ல என்பதை நாம் நினைவில் வைத்திருக்க வேண்டும்.
குறிப்பாக, இந்நாட்டை 450 வருடங்களுக்கு மேலாக ஆதிக்கம் செலுத்திய போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் மற்றும் ஆங்கிலேயர் ஆட்சி காலம் முதல் முஸ்லிம் சமூகம் அனுபவித்து வருகின்ற சிறப்பு சலுகைகளாக இருந்து வரும் இஸ்லாமிய தனியார் சட்டங்களை முற்றாக ஒழித்து முஸ்லிம்களது உரிமைகளை ஒழிப்பதற்காகவாகும் என்ற அடிப்படையில் விமர்சனங்கள் வலுவடைந்து கொண்டி ருக்கின்றன.
ஆனாலும், அரசாங்கம் இவ்வாறான ஒரு ஜனாதிபதி செயலணியையும் ஞானசாரவையும் மூலமாக வைத்து முஸ்லிம்களுக்கு பாரபட்சம் காட்டுமானால் அது இந்நாட்டில் அரசியலமைப்பை மீறும் ஜனநாயக விரோத செயலாகும். எந்தவொரு இனத்திற்கும் மதம், நிறம், சாதி என்றோ அல்லது பால் அடிப்படையிலோ பாரபட்சம் காட்டக்கூடாது என்பது இலங்கையில் அரசியலமைப்பு, ஐ.நா. மனித உரிமைகள் சாசனம், அரசியல் மற்றும் சிவில் உரிமைகளுக்கான சாசனம் உட்பட அனைத்து சட்டங்களுக்கும் முரணான அடிப்படை உரிமை மீறலாகவும் அமைகின்றது.
முஸ்லிம்கள் மத விவகாரங்களில் இவ்வாறாக அனுபவித்து வரும் திருமணம், விவாகரத்து, மஸ்ஜித் நிர்வாகம் உட்பட குறிப்பிட்ட சில விடயங்களில் மாத்திரம் இவ்வாறாக தனியான சட்டங்களை அனுபவித்து வருவதானது இலங்கையை ஆண்ட வெளிநாட்டவர்களான ஒல்லாந்தர், ஆங்கிலேயர் ஆகியோர்களால் காலத்திற்கு காலம் வழங்கப்பட்டு வந்த சிறப்புரிமைகளாக அமைவதோடு இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் பதவிக்கு வந்த ஒவ்வொரு அரசாங்கமும் இத்தகைய இஸ்லாமிய தனியார் சட்டங்களுக்கு மேலும் வலுசேர்த்து வந்ததாயினும் அவற்றை பறிக்க அல்லது சப்பாத்து காலால் மிதித்து நசுக்க வேண்டும் என்ற குறிக்கோளில் செயற்பட வில்லை.
அதுமட்டுமல்லாமல், ஏனைய விடயங்களில் முஸ்லிம் சமூகம் ஒருபோதும் நாட்டில் நடைமுறையில் இருந்து வருகின்ற அரசாங்கம் அமுல்படுத்தி வருகின்ற ஆங்கிலேய சட்டங்களை மீறுவதாக செயல்பட்டதில்லை. நாட்டு சட்டங்களுக்கு கட்டுப்பட்டவர்களாகவே உள்ளனர். நடைமுறையில் உள்ள நீதிமன்றங்கள் வழங்குகின்ற தீர்ப்புகளை மீறாத ஒரு சமூகமாகவே இருந்து வருகின்றனர். நாட்டில் பொதுவான சட்டம், ஒழுங்கை பாதுகாக்க தம்மாலான அனைத்தையும் செய்பவர்களாக உள்ளனர்.
2009ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுத ரீதியாக தோற்கடிக்கப்பட்ட பின்னர் இந்நாட்டில் தேர்தல்களின்போது மக்களிடம் இருந்து வாக்கு கோர பயங்கரமானதாகவும் பூதாகாரமானதாகவும் காட்ட எதுவும் விடயங்கள் இல்லாததால் இஸ்லாமிய விவகாரங்களை பூதாகாரமாக்கி அதற்கே ஏற்றவாறு அரபு நாடுகளில் நடைபெற்று வரும் ஆயுத முரண்பாடுகளை இலங்கையுடன் தொடர்புபடுத்தி மக்கள் மத்தியில் அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்த முற்பட்டு வருவது பொதுவான நடைமுறையாக மாறியிருக்கின்றது. இவ்வாறான போக்குகளின் ஒரு மூலையில் இருந்து உருவாகியதே ~ஒரே நாடு ஒரே சட்டம்| என்ற கோஷமாகும்.
இந்நிலையில், இந்த செயலணிக்குழு அதன் தலைவரின் சிந்தனையின் அடிப்படையில் ஏற்கனவே அவர் கடைபிடித்து வருகின்ற முஸ்லிம் விரோத இஸ்லாமிய வெறியின் அடிப்படையில் முஸ்லிம்களது உரிமைகளை நசுக்க முயற்சி செய்யுமானால், அது ஒரு இனத்திற்கு மதத்திற்கு இழைக்கப்படும் பாரிய அநீதியாகும்.
குறிப்பாக இஸ்லாமிய திருமணம், விவாக இரத்து விடயங்களை சாதாரண நீதிமன்றத்திற்கு செல்லாமல் இஸ்லாமிய மத சட்டவரையறைகளுக்கு உட்பட்டதாக சுமுகமான அடிப்படையில் நல்லிணக்கம் அல்லது மத்தியஸ்த தீர்வு மற்றும் சமாதானப்படுத்தலின் அடிப்படையில் தீர்த்துக் கொள்வதற்காக சுமார் 100 வருடங்களுக்கு மேலாக இருந்து வருகின்ற காதி நீதிமன்ற முறையை ஒழிக்க வேண்டும் என்ற அடிப்படையில் பலமான முறையில் பொதுமக்கள் அபிப்பிராயங்கள் கட்டியெழுப்பப்பட்டு வருகின்றன.
சில சந்தர்ப்பங்களில் முஸ்லிம் சமூகத்தில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய நிலையில் அல்லது ஏதாவதொரு காரணத்தால் பாதிக்கப்பட்ட நிலையில் இருக்கின்ற சில பெண்களை அதற்கென்று பெரியளவில் பணம் கொடுத்து வாடகைக்கு அமர்த்தி செய்தியாளர் மாநாடுகளை நடத்தச் செய்து இவ்வாறான இஸ்லாமிய தனியார் சட்டங்களால் பாதிக்கப்பட்டதாக பூதாகரமாக காட்டி முஸ்லிம்களது உரிமைகளுக்கு ஆப்பு வைக்கும் முயற்சிகள் நடைபெற்று வருவதையும் அவதானிக்க முடிகின்றது. இஸ்லாமியர்கள் என்ற அடையாளத்தில் இஸ்லாமிய நெறிமுறைகளுக்கு மாற்றமான வாழ்க்கை வாழும் ஒரு சிலர் முஸ்லிம்களுக்கு இவ்வாறான உரிமைகள், சலுகைகள் அவசியமில்லை என்று ஞானசார தேரருக்கு விலை போகின்றவர்களாக உள்ளனர்.
குடும்பப் பிரச்சினை என்பது இலங்கையில் முஸ்லிம் சமூகத்தில் மாத்திரம் உள்ள பிரச்சினையல்ல. இந்நாட்டில் வாழுகின்ற பௌத்த, இந்து, கிறிஸ்தவ மதங்களைச் சேர்ந்த எல்லாச் சமூகங்களில் இருப்பது போன்றே முஸ்லிம் சமூகத்திலும் பெண்கள் பாதிக்கப்பட்ட நிலை, குடும்ப முரண்பாடுகள் என்று சாதாரண விடயங்கள் இருக்கத்தான் செய்கின்றன. இதுபோன்ற பிரச்சினைகளை ஏனைய சமூகத்தவர்கள் நீதிமன்றம் சென்று சாதாரண சிவில் சட்டங்களின் அடிப்படையிலும் மத்தியஸ்த தீர்வு சபைகள் மூலமும் தீர்த்துக் கொள்கின்றனர்.
ஆனாலும் முஸ்லிம் சமூகம் நீதிமன்றங்கள் அல்லது பொலிஸ் நிலையங்கள் மூலம் அலையாமல் சுமுகமான முறையில் இலவசமாகவும் துரிதமாகவும் இத்தகைய பிரச்சினைகளுக்கு தீர்வுகளை காண்பதற்கான வழிமுறையாக காதி நீதிமன்றம் மற்றும் மஸ்ஜித் நிர்வாக விசாரணை பொறிமுறைகள் என்பவற்றை நாடுகின்றனர்.
இன்றும் கூட முஸ்லிம் சமூகத்தில் ஏற்படுகின்ற பிரச்சினைகள் தொடர்பாக பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகளை செய்து தீர்வை நாடிச் செல்கின்ற போது பொலிஸ் பொறுப்பதிகாரிகள் கூட உங்களது மஸ்ஜித்கள் மூலம் பிரச்சினையை தீர்த்துக் கொள்ளுங்கள் என்று அனுப்பி வைக்கின்ற நிலை இருந்து வருகின்றது. காரணம், சாதாரண சிவில் சமூகத்தில் அந்தளவிற்கு பிரச்சினைகள் மலிந்து காணப்படுவதும், பொலிஸ் நிலையங்களில் மக்கள் அன்றாடம் திரளுகின்றபோது அவர்களாலே சிறிய சிறிய பிரச்சினைகளை தீர்த்து வைக்க நீண்ட காலம் செல்கின்றது.
அவ்வாறே நீதிமன்றங்களிலும் வழக்கு என்ற அடிப்படையில் விசாரணைகளுக்கு வந்த பின்னர் அதற்கான தீர்வு கிடைக்க வருடக்கணக்கில் செல்கின்றன. சிவில் வழக்குகளும் வருடக்கணக்கில் இழுபட்டுச் செல்வதாக உள்ளன. சில சந்தர்ப்பங்களில் மக்கள் நீதிமன்ற செயற்பாடுகள் தொடர்பாக நம்பிக்கை இழக்கும் நிலையும் வெறுப்பும் கொள்கின்றனர். அதன் காரணமாகவே இலங்கையில் சுதந்திரத்திற்கு முன்னரும் பின்னரும் இத்தகைய இலகுவான நடைமுறைகள் ஊக்கப்படுத்தி வந்திருப்பதை குறிப்பிடலாம்.
ஆனாலும் நேற்று முளைத்த காலான்கள் போன்ற பௌத்த சமூகத்திலான அநகாரிக தர்மபால வழியிலான ஒரு சில சீர்திருத்தவாதிகள் போன்றவர்கள் அவர்களது சமூகத்தில் மலிந்து காணப்படுகின்ற பிரச்சினைகளை தீர்த்து அந்த சமூகத்தை நல்வழிப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்காமல் முஸ்லிம் சமூகம் மீது விரல் நீட்டி அந்த சமூகத்தை சீர்திருத்துவது என்ற அடிப்படையில் ஒரு நூற்றாண்டிற்கும் மேலாக இந்நாட்டில் முஸ்லிம் சமூகம் அனுபவிக்கும் பல உரிமைகள், சலுகைகளை இல்லாதொழிக்க முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன. இதனை ஒரு திட்டமிட்ட சதியாகவே பார்க்க வேண்டி இருக்கின்றது.
நாட்டின் தலைவர் என்ற முறையில் ஜனாதிபதி, அமைச்சர்கள், அதிகாரிகள் முதல் அனைத்து தரப்பினர்களிலும் குறைபாடுகள் உள்ளன. தவறிழைக்கின்றனர். நாட்டின் தலைவர் என்ற முறையில் சில விடயங்களில் ஜனாதிபதியால் கையொப்பமிட்டு வெளியிடப்பட்ட அரசாங்க வர்த்தமானி அறிவித்தல்கள் கூட பின்னர் தவறு என்று கண்ட பின்னர் வாபஸ் பெறப்பட்டுள்ளன. நடைமுறைக்கு கொண்டு வரப்பட்ட திட்டங்கள் தவறானவை என்று கண்ட பின்னர் கைவிடப்பட்டுள்ளன. அத்தகைய செயற்பாடுகளை விமர்சித்த ஒருவர் என்ற முறையில் அண்மையில் இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அவரது அமைச்சர் பதவியில் இருந்து தூக்கி எரியப்பட்டார். அவ்வாறிருக்க, காதி நீதிமன்ற நடைமுறைகளில் தவறுகள் நிகழ்ந்திருப்பின் அதனை சரி செய்வதற்கான தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்வதற்கு பதிலாக அதனை ஒழித்துக் கட்டுவதானது தவறான அணுகுமுறையாகும்.
சைக்கோ நிலையில் அல்லது மனநலக் கோளாறு உள்ளவர்கள் போன்று செயற்படக்கூடியவர்கள், தனிப்பட்ட பிரசித்தத்திற்காக ஊடக நாடகம் நடத்தக் கூடியவர்கள் செய்யும் பிரசாரங்களை சரிகாணும் அளவிற்கு பொறுப்புவாய்ந்த அரசாங்கம் தரக்குறைவான நிலைக்கு தள்ளப்படக்கூடாது. அரசாங்கத்திற்கு நல்லதை கூறுவதாக நினைத்து பின்புலத்தில் இருந்து சில அரச ஆதரவு வல்லுனர்கள் வழங்கிய ஆலோசனைகளை ஏற்று அரசாங்கம் முன்நகர்வுகளை மேற்கொண்டதால் ஏற்பட்டதே விவசாயிகள் முகம் கொடுக்கும் பிரச்சினை, இன்றைய பொருளாதார நெருக்கடி, நாட்டில் பால்மா, எரிவாயு, மண்ணெண்ணெய் பற்றாக்குறை, அத்தியாவசிய பொருட்களின் விலைகள் உயர்வு என்று பல பிரச்சினைகள் உருவாகி மக்கள் அரசாங்கத்தை வசைபாடும் நிலை ஏற்பட்டிருக்கின்றது.
அதனால், ~ஒரே நாடு ஒரே சட்டம்| என்ற விடயத்திலும் அரசாங்கம் ஞானசார தேரரை நம்பி குழியில் விழாமல் இருக்க வேண்டியதும் அவசியமானதாகும். எல்லா இனங்களையும் அரவணைத்துப்போகும் ஒரு அரசாங்கமாக அமைய வேண்டும். மக்களை ஒருசிலரின் தேவைகளுக்காக தண்டிக்கும் போக்கு இடம்பெறக்கூடாது. ~ஒரே நாடு ஒரே சட்டம்| என்ற ஜனாதிபதி செயலணிக் குழு பாரபட்சம் இல்லாத முறையில் முஸ்லிம் சமூகத்திற்கு அநீதி இழைக்கும் போக்கை கொண்டதாக ஒருபக்கம் சார்பாக செயற்படக்கூடாது. 1956ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சிங்களம் மட்டும் சட்டம், பண்டா – செல்வா ஒப்பந்தம் கிழித்தெரியப்பட்டமை, தொடர்ச்சியாக தமிழருக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் என்பவற்றால் நாடு 04 தசாப்தங்களுக்கு மேலாக மிக மோசமான விளைவுகளை சந்தித்த அனுபவத்தை கொண்டிருப்பதால் மீண்டும் ஒருமுறை அதே தவறை செய்வதாக இருக்கக் கூடாது என்பது மக்களது எதிர்பார்ப்பாகும்.
எம்.எஸ்.அமீர் ஹுசைன்