ஒமிக்ரோன் பரவல் காரணமாக தனது திருமணத்தை நிறுத்திய நியூசிலாந்து பிரதமர்
கொரோனாவை சிறப்பாக எதிர்கொண்ட தலைவர் என்ற பெருமையை நியூசிலாந்து நாட்டு பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் பெற்றார். அந்நாட்டில் மொத்தமாக 15,550 பேருக்கு மாத்திரமே கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதுடன், 52 பேர் மட்டுமே பலியாகி உள்ளனர், 1,096 பேர் சிகிச்சை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்னுக்கும் அவரது நீண்ட கால நண்பரான கிளார்க் கேஃபோர்ட்டுக்கும் 2 ஆண்டுகளுக்கு முன்னா் நிச்சயதாா்த்தம் இடம்பெற்றது.
எதிர்வரும் பெப்ரவரி மாதம் இருவரும் திருமணம் செய்ய இருப்பதாக ஜெசிந்தா அறிவித்தார். அதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வந்தன. அந்நாட்டு மக்களும் தங்கள் பிரதமரின் திருமணத்திற்காக காத்திருந்தனர்.
இந்நிலையில் தற்போது ஒமிக்ரோன் வைரஸ் நியூசிலாந்தில் பரவ தொடங்கியுள்ளது. இதனால் தினசரி தொற்று அந்நாட்டில் 70-ஐ தாண்டியுள்ளது.
இதனால் அங்கு மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. பெப்ரவரி இறுதிவரை அங்கு கொரோனா கட்டுப்பாடுகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையடுத்து தன் திருமணத்தை நிறுத்தப்போவதாக ஜெசிந்தா ஆர்டர்ன் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
என் திருமணம் இப்போதைக்கு நடைபெறபோவதில்லை. இது தான் வாழ்க்கை. நாம் எதிர்பார்ப்பது எப்போதும் நடைபெறும் என்று சொல்ல முடியாது. எனக்கும் கொரோனாவால் வாடும் நியூசிலாந்து பொது மக்களுக்கும் வித்தியாசம் இல்லை.
பலர் கொரோனா காரணமாக வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். பலர் தாங்கள் விரும்பும் நபர்களிடம் பக்கத்தில் இருக்கும் வாய்ப்பு கூட இல்லாமல் இருக்கின்றனர். அவர்களிடம் நாம் அன்பு செலுத்த வேண்டும். மீண்டும் நாம் இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும். அதன்பின் திருமணம் பற்றி யோசிப்பேன். என கூறியுள்ளார்.