ஒத்திவைக்கப்பட்டது “வலிமை” திரைப்பட வெளியீடு
குரேஷி, கார்த்திகேயா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் ‛வலிமை‛. கொரோனா பிரச்சினையால் இரு ஆண்டுகளாக தயாராகி வந்த இந்த திரைப்படம் எதிர்வரும் 13ஆம் திகதி வெளிவருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த அறிவிப்பின் பின்னர் அடுத்த சில நாட்களில் கொரோனா பரவல் அதிகமாகியது.திரையரங்குகளில் 50 சதவீத இருக்கை அனுமதி, இரவு நேர ஊரடங்கு, ஞாயிறு முழு ஊரடங்கு என அமல்படுத்த வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.
ஏற்கனவே கொரோனா பரவலை காரணம் காட்டி ‘ஆர்ஆர்ஆர், ராதேஷ்யாம்’ என மற்ற பெரிய பான்- இந்தியா படங்கள் தங்கள் வெளியீட்டைத் தள்ளி வைப்பதாக முன்கூட்டியே அறிவித்துவிட்டார்கள். ஆனால் வலிமை எப்படியும் வந்துவிடும் என்றும், தள்ளிப்போகலாம் என்றும் நேற்று முதலே சமூகவலைதளங்களில் தொடர்ந்து கருத்துக்கள் போய் கொண்டிருந்தன. இந்நிலையில் வலிமை படத்தை தள்ளி வைப்பதாக அறிவித்துள்ளதாக இந்தி திரையுலக செய்திகள் தெரிவிக்கின்றன.
இதுதொடர்பாக படக்குழு சார்பில் வெளியிட்ட அறிக்கை :
பார்வையாளர்களும், ரசிகர்களும் எப்போதும் மகிழ்ச்சிக்கு ஆதாரமாக உள்ளனர். கடினமான காலங்களில் அவர்களின் நிபந்தனையற்ற ஆதரவும், அன்பும் கஷ்டங்களை எதிர்கொள்ளவும், எங்கள் கனவு திட்டத்தை வெற்றிகரமாக முடிக்கவும் எங்களுக்கு முக்கிய நம்பிக்கையை ஏற்படுத்தியது.
ஒவ்வொரு தருணத்திலும் தியேட்டர்களில் ரசிகர்கள் மகிழ்ச்சியாக படத்தை பார்க்க வேண்டும் என்பதேயே நாங்கள் விரும்பினோம். அதே நேரத்தில் ரசிகர்களின் பாதுகாப்பு எப்போதும் முக்கியம். உலகம் முழுவதும் கொரோனா அதிகரித்து வருவதால், அதிகாரிகளின் விதிமுறைகளுக்கு இணங்க, நிலைமை சீராகும் வரை எங்கள் ‛வலிமை’ திரைப்படத்தின் வெளியீட்டை ஒத்திவைக்க முடிவு செய்துள்ளோம்.
அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்ளுங்கள், மாஸ்க் அணியுங்கள், பாதுகாப்பாக இருங்கள். விரைவில் தியேட்டரில் உங்களை சந்திக்கிறோம். என்று குறிப்பிடப்பட்டுள்ளது.