IMFக்கு செல்வதைத் தவிர வேறு வழியில்லை – நீதி அமைச்சர் அலி சப்ரி விசேட செவ்வி
சர்வதேசத்தின் நம்பிக்கையை பெற்றுக்கொள்ளவும் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீளவும் நாங்கள் ஐ.எம்.எப்.பிடம் செல்லவதைத் தவிர வேறு வழியில்லை என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.
ஒரே நாடு ஒரே சட்டம் தொடர்பான செயலணிக்கு ஞானசார தேரர் நியமிக்கப்பட்டதையடுத்து, நாங்கள் முஸ்லிம்களுக்கு எதிராக சூழ்ச்சி செய்வதாக அம்மக்கள் நினைத்துகொண்டிருப்பதாக ஜனாதிபதியிடம் தான் அறிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
~தமிழன்| வார இதழுக்கு வழங்கிய விசேட செவ்வியின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
முழுமையான செவ்வி வருமாறு,
கே:-நாட்டை மீட்பதாகக் கூறி ஆட்சி பீடம் ஏறிய தற்போதைய அரசாங்கம் அரசியல், பொருளாதாரம் என அனைத்திலும் தடுமாறிக்கொண்டிருக்கின்றது. இது குறித்து உங்களுடைய நிலைப்பாடு என்ன?
இந்த நிலைமை நாங்கள் உருவாக்கியதல்ல. கொரோனா தொற்றால் ஏற்பட்டதாகும். அந்நிய செலாவணியின் இருப்பு மிகவும் வீழ்ச்சியடைந்துள்ளது. நாங்கள் ஓர் ஒழுக்கத்தை கடைபிடிப்பதால், எவ்வித கடன்களையும் பெற்றுக்கொள்ளவில்லை. எனினும், நாட்டுக்கு தேவையான அந்நிய செலாவணி கிடைக்க வேண்டும். அதன்படி, சுற்றுலாத்துறை பாதிப்பால் சுற்றுலாப் பயணிகளால் கிடைக்கும் வருமானம் கடந்த இரு வருடங்களில் 8 பில்லியன் நட்டத்தை சந்தித்தது.
ஏற்றுமதியின்போது டொலர் பற்றாக்குறையால் நாட்டுக்கு கிடைக்கும் வருமானத்திலும் பாதிப்புள்ளது. இந்த கொரோனா தொற்றினால் பாரிய நெருக்கடிக்கு முகம் கொடுத்தாலும் முடிந்தவரை நாங்கள் பொருளாதாரத்தையும் கட்டியெழுப்பி வருகின்றோம். நாங்கள் உருவாக்கிய நிலைமை இல்லையென்றாலும் தற்போதும் ஓர் இக்கட்டான நிலையில் இருக்கின்றோம் என்பதை ஏற்றுக்கொள்கின்றோம்.
கே:-பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்கு சர்வதேச நாணய நிதியத்திடம் (ஐ.எம்.எப்) செல்லலாம் என பலரும் கூறுகின்றனர். இது தொடர்பாக அமைச்சரவையில் பேசப்பட்டதா?
ஆம். இரண்டு மூன்று முறை இது தொடர்பாக அமைச்சரவையில் பேசப்பட்டது. எனினும், இரு கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன. சர்வதேச நாணய நிதியத்திடம் சென்றால் கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்படுவதால், எங்களுடைய பொருளாதாரத்துக்கு பாதிப்பாக அமையும் என ஒரு தரப்பும், இல்லை நாங்கள் அங்குச் சென்றாலே சர்வதேசத்தின் நம்பிக்கையை பெற்றுக்கொள்ள முடியும் என மற்றொரு தரப்பும் கூறுகின்றன.
ஆனால், சர்வதேசத்திடம் செல்வதே சிறந்தது என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்தாகும். சர்வதேசத்தின் நம்பிக்கையை பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் நாங்கள் ஐ.எம்.எப்.பிடம் செல்ல வேண்டும். சர்வதேச நாணய நிதியம் எமக்கு உதவினால் அவர்களின் பின்னால் உலக வங்கி வரும். அதன் பின்னர் ஆசிய அபிவிருத்தி வங்கியும் வரக்கூடும். இதனால், இலங்கை மீதான நம்பிக்கை அதிகரித்து, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வரக்கூடிய சூழ்நிலையும் உருவாகும். எனவே, நாங்கள் சர்வதேச நாணய நிதியத்திடம் செல்வதே நல்ல தீர்மானமாக இருக்கும்.
சர்வதேச நாணய நிதியத்துடன் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தாலும் செல்வது குறித்த இறுதி தீர்மானம் இதுவரை எடுக்கப்படவில்லை. இந்த நிலையில், நாளை 3ஆம் திகதி இடம்பெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் இது குறித்து பேசுவதற்கான கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளோம்.
கே:-அமைச்சரவையிலுள்ள அமைச்சர்கள் சிலர் கூட்டுப்பொறுப்புகளை மீறுவதாக ஜனாதிபதி குற்றம் சுமத்தியுள்ளார். உண்மையில் அமைச்சரவைக்குள் அமைச்சர்களிடையே ஒற்றுமை இல்லையா?
இந்த அரசாங்கத்தில் மாத்திரமல்ல, எந்த அரசாங்கத்திலும் அவ்வாறு இருப்பதில்லை. ஓர் அமைச்சரவைப் பத்திரம் வந்தால் பல கருத்து வேறுபாடுகள் இருக்கும். அவ்வாறு பல கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் இறுதியில் அனைவரும் இணைந்து கூட்டுப்பொறுப்பை பாதுகாத்துள்ளனர். சில அமைச்சரவைப் பத்திரம் தொடர்பாக என்னுடைய நிலைப்பாட்டை நானும் தெரிவித்துள்ளேன். சில நேரங்களில் அவற்றை ஏற்றுக்கொள்வார்கள். சில நேரத்தில் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். இதனை வெளியில் கூறுவதில்லை. அதுவே கூட்டுப்பொறுப்பாகும்.
பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் இறுதியில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு இணக்கமாக இருப்பதே கூட்டுப்பொறுப்பாகும். அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆனால், அமைச்சரவையில் கருத்துவேறுபாடுகள் இருப்பது ஜனநாயகமாகும்.
கே:-அமைச்சர்களான உதய கம்மன்பில, விமல் வீரவங்ச மற்றும் வாசுதேவ நாணயக்கார ஆகியோர் யுகதனவி ஒப்பந்தம் தொடர்பாக எதிர்ப்பை தெரிவிப்பதால் அவர்கள் பதவி விலகலாம் என ஜனாதிபதி கூறிய கருத்து குறித்து என்ன நினைக்கின்றீர்கள்?
ஜனாதிபதி கூறியதை நானும் ஏற்றுக்கொள்கின்றேன். இவ்வாறானதொரு அமைச்சரவை பத்திரமொன்றுக்கு நான் எதிர்ப்பை தெரிவிப்பதாக இருந்தால் பதவி விலகிய பின்னரே எதிர்ப்பை தெரிவித்திருப்பேன். பதவியிலிருந்துக்கொண்டு அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவுக்கு எதிராக நான் செயற்படமாட்டேன். கூட்டுப்பொறுப்பை மீறும் பட்சத்தில் முன்னோக்கிச் செல்வதற்கு நம்பிக்கையிருக்காது.
கே:-அமைச்சரவையில் எந்தவொரு விடயங்களும் முழுமையாக விவாதிக்கப்படுவதில்லை. ஒரு நாளில் அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டு அன்றைய தினமே அனுமதியும் பெறப்படுவதாகக் குற்றம் சுமத்தப்படுவது குறித்து?
அவ்வாறில்லை. அமைச்சரவையில் நாங்கள் அனைத்தையும் விவாதிப்போம். ஒரு சில அமைச்சரவை பத்திரங்கள் தொடர்பாக நிதி அமைச்சர், நீதி அமைச்சர் மற்றும் ஏனைய அமைச்சுகளின் நிலைப்பாடுகளும் முன்வைக்கப்படும்.
அவசரமான சில அமைச்சரவைப் பத்திரங்கள் அன்றே சமர்ப்பிக்கப்பட்டு அன்றே அனுமதியும் பெறப்படும். நானும் சில பத்திரங்களை இவ்வாறு சமர்ப்பித்துள்ளேன். குறிப்பாக, எக்ஸ்பிரஸ் பேர்ள்ஸ் கப்பல் தொடர்பாக சில முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளதால் முக்கிய அமைச்சரவைப் பத்திரம் ஒன்றை சமர்ப்பித்து அனுமதி பெற்றுக்கொண்டேன். இது இன்றுமட்டுல்ல, தொடர்ந்து முன்னெடுக்கப்படும் கலாசாரமாகும்.
கே:- இலங்கை அரசாங்கம் வேறு நாடுகளுடன் ஒப்பந்தங்கள் கைச்சாத்திடும்போது, சட்ட ரீதியான செயற்பாடுகளுக்காக நீதி அமைச்சுக்கு பொறுப்பான அமைச்சரிடம் கையளிக்கப்படும். இந் நிலையில், யுகதனவி ஒப்பந்தம் உங்களிடம் கையளிக்கப்பட்டதா?
இல்லை. இதற்கு நீதி அமைச்சரிடம் ஆலோசனை பெற வேண்டிய தேவையில்லை. சட்டமா அதிபரின் ஆலோசனை கிடைத்தால்போதுமானது. அதன்பின்னர் நிதி அமைச்சிடமிருந்து ஆலோசனைகள் கிடைத்தால் போதுமானது. சில சில அமைச்சரவை பத்திரத்துக்கு நீதி அமைச்சரிடம் ஆலோசனை பெற்றுக்கொள்ளப்படும். எனினும், யுகதனவி விடயத்தில் என்னிடம் எவ்வித ஆலோசனைகளும் பெற்றுக்கொள்ளப்பட வில்லை.
கே:-எதிர்ப்புகளுக்கு மத்தியில் யுகதனவி ஒப்பந்தம் நீக்கப்படவுள்ளதாக அறிய முடிகின்றதே உண்மையா?
அதுபற்றி எனக்கு தெரியாது. அதற்கும் எனக்கும் சம்மதம் இல்லை. நிதி அமைச்சரும் ஜனாதிபதியுமே இதனை தீர்மானிப்பார்கள். ஆனால், யுகதனவி வரவேற்கக் கூடிய முதலீடாக இருக்கின்றதே தவிர, தடை செய்ய வேண்டியதில்லை என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்தாகும்.
கே:-நீதி அமைச்சிலிருந்து நீங்கள் விலக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி செயலணியின் தலைவர் ஞானசார தேரர் தொடர்ந்து வலியுறுத்துவது தொடர்பாக என்ன கூற விரும்புகின்றீர்கள்?
இது பற்றி பேசுவதற்கு நான் விரும்பவில்லை. முக்கியமான விடயங்களை மாத்திரம் பேசுவோம். எங்களுக்கு பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அதனை நாங்கள் செய்துகொண்டிருக்கின்றோம். அடுத்தவர்கள் செய்வது மற்றும் கூறுவது குறித்து நான் கருத்துக் கூறிக்கொண்டிருக்க முடியாது.
கே:-ஒரே நாடு ஒரே சட்டம் தொடர்பான செயலணி நீதி அமைச்சரான உங்களுடனும் இணைந்து செயற்பட வேண்டும். அந்த வகையில் இச்செயலணியின் பரிந்துரைகளை ஏற்றுக்கொள்வீர்களா?
பொருத்திருந்தே பார்க்க வேண்டும். முழுமையாக ஆராய்ந்து ஒரு வரைபை சமர்ப்பிப்பதற்கே முதலில் வர்த்தமானி வெளியிடப்பட்டது. ஜனாதிபதி சட்டத்தரணியாகவும் நீதி அமைச்சராகவும் இதனை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என அறிவித்தேன். இதனால், நான் பதவி விலகுவதாக அறிவித்த பின்னர், அச் செயலணிக்கான அதிகாரங்களில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
அதன்படி, இச்செயலணியானது அனைத்து பகுதிகளுக்கும் சென்று மக்களின் கருத்துக்களைக் கேட்டு, ஒரே நாடு ஒரே சட்டம் தொடர்பாக பரிந்துரைகளை முன்வைப்பார்கள். இதுபோன்று, அனைத்து சட்டங்கள் தொடர்பாகவும் எனக்கு பரிந்துரைகள் முன்வைக்கப்படும். அதன் பின்னர் இதனை சட்டமாக்க முடியுமா என கலந்துரையாடி, அமைச்சரவை அனுமதிப் பெற்றுக்கொள்ளப்படும்.
நீதி உருவாக்குவதற்கு விதிமுறைகள் இருக்கின்றன. எனக்கு ஏற்றவாறு சட்ட உருவாக்கத்தை மேற்கொள்ள முடியாது. கருத்துகளை கேட்டு, அமைச்சரவை அனுமதி பெற்றுக்கொண்ட பின்னர், சட்ட வரைஞர்களிடம் சென்று சட்ட வரைபு வரையப்பட வேண்டும். அதன் பின்னர், சட்டமா அதிபரின் அனுமதி பெறப்பட்டு, நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும். இதன் போது, பொது மக்களும் நீதிமன்றத்துக்குச் செல்வதற்கு இடம் வழங்கப்பட வேண்டும். இவ்வாறான முறையிலேயே சட்டம் உருவாக்கப்படும்.
கே:-புதிய அரசியலமைப்பு உருவாக்கும் செயற்பாடுகள் எந்த நிலையிலுள்ளன. பெப்ரவரியில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுமா?
ஆம். அதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. கடந்த இறுதி வாரத்தில் கூட இது தொடர்பாக ஜனாதிபதியுடன் கலந்துரையாடினேன். புதிய அரசியலமைப்பு உருவாக்கமானது இறுதி கட்டத்தில் இருக்கின்றது. இறுதி வரைபும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால், இன்னும் ஒரு சில நாட்களில் அது ஜனாதிபதியிடம் கையளிப்பதற்கு உரிய குழு எதிர்பார்த்துள்ளது. அதன் பின்னர் அமைச்சரவைக்கு சமர்ப்பித்து அனுமதி பெற்றுக்கொண்ட பின்னர் பெப்ரவரி மாதத்தில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க முடியும் என எதிர்பார்க்கின்றோம்.
கே:-புதிய அரசியலமைப்பில் 13ஆவது திருத்தம் மற்றும் பயங்கரவாத தடைச்சட்டங்கள் நீக்கப்பட வாய்ப்புள்ளதா?
13ஆவது திருத்தம் ஒன்று இனி இருக்காது. புதிய அரசியலமைப்பே கொண்டுவரப்படும். ஆனால், அதிலுள்ள விடயதானங்கள் உள்ளடக்கப்பட்டிருக்கும். அதில் பெரிய மாற்றங்கள் வராது என்றே எதிர்பார்க்கின்றோம். ஆனால், பொலிஸ் மற்றும் காணி அதிகாரம் போன்றவற்றில் மாற்றங்கள் வரலாம்.
எனினும், 13ஆவது திருத்தத்திலுள்ள விடயங்கள் அரசியலமைப்பில் இருக்க வேண்டும் என்பதே தற்போதைய அரசாங்கத்தின் நோக்கமாகும். குறிப்பாக, அந்தந்த பகுதியிலுள்ளவர்களுக்கு அப்பகுதியில் வேலை செய்துகொள்வதற்கான அதிகாரத்தை வழங்க வேண்டும் என்றே எதிர்பார்க்கின்றோம்.
கே:-காதி நீதிமன்றத்தை நீக்க வேண்டும் என முஸ்லிம் பெண்களே கோரிக்கை விடுக்கின்ற நிலையில், நீதி அமைச்சர் என்ற வகையில் அந்த கோரிக்கையை ஏற்று காதி நீதிமன்றத்தை நீக்குவீர்களா?
ஆம். வரைபு இறுதி கட்டத்துக்கு வந்துள்ளது. காதி நீதிமன்றத்தை நீக்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம். எனினும், நீதிமன்றம் செல்லாது, நிதி செலவழிக்காது தீர்க்கக் கூடியவற்றை குடும்ப நல ஆலோசனைகள் மூலம் தீர்ப்பதற்கும், தீர்க்க முடியாதவற்றை நீதிமன்றத்திற்கு அனுப்புவதற்கும் நடவடிக்கை எடுத்துவருகின்றோம்.
இதுதொடர்பாக பல கருத்துகள் இருக்கின்றன. அவற்றைச் சேர்த்தே பல மாற்றங்களை கொண்டுவர முடியும். குறிப்பாக, வயது குறைந்த திருமணத்தை தடை செய்து, திருமண வயதை 18 ஆக அதிகரித்துள்ளோம். ஆண் மற்றும் பெண்ணுக்கு சம உரிமையை வழங்கியுள்ளோம். விவாகரத்து பெற்றவர்களுக்கு வருமான வழியை ஏற்படுத்திக் கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுத்து வருகின்றோம். அத்தோடு, குடும்ப நல ஆலோசனை ஒன்றையும் காதிக்காக உருவாக்கியுள்ளோம். இவ்வாறு பல மாற்றங்கள் வரும்.
கே:-நீங்கள் பதவி விலகவுள்ளதாக ஏற்கனவே ஊடகங்களில் வெளிவந்தன. இந்த நிலையில் ஜனவரி மாதம் இடம்பெறவுள்ள அமைச்சரவையில் மாற்றத்தில் உங்களுடைய முடிவுகள் எவ்வாறிருக்கும்?
பதவி வழங்குவதும் நீக்குவதும் ஜனாதிபதியின் விருப்பம். ஆனால், ஞானசார தேரரின் நியமனத்தின்போதே நான் என்னுடைய இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்துவிட்டேன். நான் தற்போது பெரும் நெருக்கடிக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது. நான் முஸ்லிம்களுக்கு எதிராக சூழ்ச்சி செய்வதாக நினைக்கின்றனர். மறுபக்கத்தில் சிங்கள மக்களுக்கு எதிராக நாங்கள் செயற்படுவதாக அவர்கள் நினைத்துக்கொண்டிருப்பதாக ஜனாதிபதியிடம் கூறினேன். எனக்கு சட்டத்தரணியாக மீண்டும் பணியாற்றுவதற்கு முடியும். ஆனால், ஜனாதிபதி அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. சட்டத்துறையில் பல மாற்றங்கள் வந்துள்ளதாக பலரும் ஏற்றுக்கொள்கின்றனர். ஆகவே, உங்களால் மாத்திரமே மாற்றங்களை கொண்டுவர முடியும் என ஜனாதிபதி கூறினார்.
ஆனால், நான் பதவிக்காக வரவுமில்லை. பதவியில் இருந்து மகிழ்வதற்கும் வரவில்லை. சட்டத்தரணியாக என்னுடைய தொழிலை நான் நேசிக்கின்றேன். நான் இருக்கும் வரை சட்டத்துறையில் மாற்றங்கள் வர வேண்டும் என்பதற்காக கஷ்டத்துடன் வேலை செய்துகொண்டிருக்கின்றேன்.
350 சட்டத்தரணிகள் எவ்வித பணமுமின்றி, 98 சட்டங்களை திருத்தம் செய்துள்ளனர். நாங்கள் இருக்கும் வரை இலவச கல்வியை பெற்றவர்கள் என்ற வகையில் நாட்டுக்காக ஏதேனும் செய்ய வேண்டும் என்பதற்காகவே வேலை செய்துக்கொண்டிருக்கின்றோம். மாறாக, பதவியில் இருக்க வேண்டும் என்ற தேவையில்லை.
என்னுடைய வீடு, தொழில் இடம் என்பன அரசியலுக்கு வந்து பெற்றதல்ல. ஆகவே, அரசியலுக்கு வந்தால் எனக்கு பாரிய நட்டமே ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, பண ரீதியில் அதிக நட்டத்தை சந்தித்துள்ளேன். எனவே, பதவி இல்லை என்பதற்காக நான் வீதிக்கு வரப்போவதில்லை. கன்னியமாக வாழ முடியும். ஆனால், நாட்டுக்கு செய்ய வேண்டிய சேவைக்காக அரசியலில் இருக்கின்றேன்.
கே:-நாட்டில் அரசியல் கைதிகள் எத்தனை பேர் உள்ளனர். அவர்கள் எப்போது விடுவிக்கப்படுவார்கள்?
தமிழ்க் கட்சிகள் அரசியல் கைதிகள் எனக் கூறினாலும் நாங்கள் அரசியல் கைதியாக ஏற்றுக்கொள்வதில்லை. விடுதலைப் புலிகள் பயங்கரவாதத்துடன் தொடர்புடைய பலர் இருக்கின்றனர். அவர்களுக்கு எதிராக பல வழக்குகள் இருக்கின்றன.
மேலும், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். எனினும், தடைச் சட்டத்தில் பல மாற்றங்கள் கொண்டுவரப்படவுள்ளன. 42 வருடங்களுக்கு பின்னர் உருவாக்கப்பட்ட ஆலோசனை குழுவினால் 46 பேர் வரை தடைச் சட்டத்தின்கீழ் தடுத்துவைக்கப்பட்டிருந்த நிலையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
அனைத்தையும் ஒரே தடவையில் முன்னெடுக்க முடியாது. படிப்படியாக சில சில நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. சிங்கள வாக்குகளால் வந்த ஜனாதிபதியாக இருந்தாலும் பயங்கரவாத தடைச் சட்டத்தில் பல மாற்றங்களை முன்னெடுத்துள்ளார். பலர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இந்த பிரச்சினைகளை தீர்ப்பதற்காக நாங்கள் அதிகம் கவனம் செலுத்தி செயற்படுகின்றோம்.இந்நிலையில், ஜனவரி, 27, 28, 29 மற்றும் 30ஆம் திகதிகளில் நாங்கள் யாழ்ப்பாணத்துக்கு நடமாடும் சேவையொன்றை முன்னெடுக்கவுள்ளோம். இதன்போது, நீதிமன்றம் திறப்பு, காணாமலாக்கப்பட்டவர்கள் உள்ளிட்ட பல விடயங்களையும் ஆராய்வதற்கு நடவடிக்கை எடுத்துவருகின்றோம்.
கே:-காணாமலாக்கப்பட்டவர்களுக்கு இறப்புச் சான்றிதழ் வழங்குவதாக அரசாங்கம் அறிவித்திருந்தாலும் அதனை அந்த உறவினர்கள் ஏற்க மறுக்கின்றனரே. இதற்கென்ன தீர்வு?
எந்தவொரு முடிவையும் நாங்கள் பலவந்தமாக வழங்க முடியாது. யுத்தம் இடம்பெற்றால் தொடர்புடையவர்களும் தொடர்பில்லாதவர்களும் உயிரிழப்பார்கள். இதனை தொடர்ந்து பேசிக்கொண்டிருப்பதா என்பதையும் சிந்திக்க வேண்டும்.6 ஆயிரத்து 500 இராணுவ சிப்பாய்களும் காணாமலாக்கப்பட்டுள்ளனர். ஆகவே, காணாமலாக்கப்பட்டவர்களுக்கு உரிய உதவிகளை செய்யலாம், இறப்புச் சான்றிதழை வழங்கலாம். இதனை ஏற்க முடியாவிட்டால், இவர்கள் காணாமலாக்கப்பட்டுள்ளதாக ஒரு சான்றிதழை வழங்க முடியும். இதனால், அவர்கள் இறந்துவிட்டதாக ஏற்றுக்கொள்ள தேவையில்லை. எனினும், இறந்தவர்களுக்கான அனைத்து உதவிகளையும் இதனூடாக வழங்க முடியும். எனினும், இதனை ஏற்றுக்கொள்வதா இல்லையா என்பது அவர்களின் பிரச்சினை. பலவந்தமாக தீர்வுகளை வழங்க முடியாது. யாராக இருந்தாலும் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கு இழப்பை ஏற்க முடியாது. எனினும், இது பற்றி பேசிக் கொண்டிருக்க முடியாது. உரிய உதவிகளை வழங்க நாங்கள் தயாராக இருக்கின்றோம். ஏற்றுக்கொள்வது அவர்களின் விருப்பம். இதற்கு அப்பால் என்ன செய்வது என்று எங்களுக்கு தெரியவில்லை.
நேர்காணல் :- யோ.தர்மராஜ்
படப்பிடிப்பு:- ஆ.அமலேஸ்கர்