எங்களுக்குள் எந்த மோதலும் இல்லை; ரோகித் பற்றி விராட் கோலி பேட்டி
தங்களுக்குள் எந்த மோதலும் இல்லை என ரோகித் சர்மா பற்றி விராட் கோலி பேட்டியளித்து உள்ளார்.
உலக கோப்பை கிரிக்கெட் தொடரில், நியூசிலாந்து அணியிடம் இந்திய அணி அரையிறுதியில் தோற்ற பின், அணிக்குள் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ரோகித்தின் ஆலோசனையை விராட் கோலி ஏற்கவில்லை என்றும் இதனால்தான் பிரச்சினை என்றும் தெரிகிறது.
ரோகித் சர்மாவுக்கு ஆதரவாக சில வீரர்களும் கேப்டன் விராட் கோலிக்கு ஆதரவாக சில வீரர்களும் தனித்தனியாக செயல்படுவதாகவும் கூறப்பட்டது. விராட்-ரோகித் விரிசல் இப்போது அதிகரித்து இருப்பதாகவும் இருவருக்குமான பனிப்போர் முற்றி வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் துணைகேப்டன் ரோகித் சர்மா, கேப்டன் விராட் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மாவை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பின்தொடர்ந்து வந்தார். இந்நிலையில் திடீரென்று அவரை பின் தொடர்வதில் இருந்து ரோகித் வெளியேறி இருக்கிறார். விராட் கோலியின் பக்கத்தை பின் தொடர்வதில் இருந்து முன்பே விலகி விட்டார். ரோகித்தின் மனைவி ரித்திகாவும் அனுஷ்காவை பின் தொடர்வதில் இருந்து விலகியுள்ளார். இதையடுத்து இவர்கள் பிரச்சினை முற்றியுள்ளதாக தெரிகிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோலி – துணை கேப்டன் ரோஹித் சர்மா மோதல், இந்திய அணியில் கோஷ்டி இருப்பதாக கூறப்பட்ட நிலையில், அதை உறுதிப்படுத்தும் வகையில் மற்றொரு சம்பவம் நடந்துள்ளது.
இந்திய வீரர்கள் ராகுல் மற்றும் சாஹல், அதே அனுஷ்கா சர்மாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை ரோஹித் அன்பாலோ செய்த பின் புதிதாக பாலோ செய்து வருகின்றனர். இது தொடர்பான செய்திகளும் வேகமாக பரவி வருகிறது.
இதனிடையே இதுபற்றி செய்தியாளர்களிடம் விராட் கோலி கூறும்பொழுது, நான் கூட இந்த விசயம் பற்றி கேள்விப்பட்டேன். இது உண்மையெனில் நாங்கள் விளையாட்டில் சிறப்புடன் செயல்பட்டிருக்க முடியாது.
எனக்கு ஒருவரை பிடிக்கவில்லை என்றால் அதனை எனது முகத்தில் அல்லது எனது நடவடிக்கைகளில் நீங்கள் காண முடியும். நான் ரோகித் பற்றி எப்பொழுதும் புகழ்ந்தே பேசி வந்துள்ளேன். ஏனெனில் அவருக்கு அந்த தகுதி உள்ளது என நான் நம்புகிறேன். எங்களுக்குள் எந்த விவகாரமும் இல்லை.
இதுபோன்று பரப்பப்படும் அனைத்து செய்திகளாலும் யார் பலன் பெறுகிறார்கள் என்பதும் எனக்கு தெரியவில்லை என அவர் கூறியுள்ளார்.