உலக சுகாதார ஸ்தாபனத்துக்கு 30 நாட்கள் காலக்கெடு விதித்தார் ட்ரம்ப் !
‘சீனாவின் பிடியிலிருந்து உலக சுகாதார ஸ்தாபனம் இன்னும் 30 நாள்களுக்குள் விடுபடாவிட்டால், அந்த அமைப்புக்கான நிதியுதவி நிரந்தரமாக நிறுத்தப்படும்’ என்று அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
மேலும், ஐ.நா.வின் அந்த அமைப்பிலிருந்து வெளியேறுவது குறித்தும் பரிசீலித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து, உலக சுகாதார ஸ்தாபன இயக்குனர் , டெட்ரோஸ் அதனோமுக்கு எழுதியுள்ள 4 பக்க கடிதத்தில் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளதாவது:
கொரோனா நோய்த்தொற்று பரவல் விவகாரத்தில் நீங்களும் உங்கள் தலைமையிலான அமைப்பும் தொடர்ந்து பல தவறுகளை செய்து வந்தீர்கள். அதற்கு உலகம் மிகப் பெரிய விலையைக் கொடுக்க நேர்ந்துள்ளது.
இனி, சீனாவின் பிடியிலிருந்து விடுபட்டு சுதந்திரமாகச் செயல்படுவதே உலக சுகாதார ஸ்தாபனத்தின் முன் உள்ள ஒரே வழியாகும்.
உங்களது அமைப்பை சீரமைப்பது குறித்து எனது அரசு ஏற்கெனவே ஆலோசனையைத் தொடங்கியுள்ளது. இந்த விவகாரத்தில் உடனடியாக செயல்பட வேண்டியது அவசியமாகியுள்ளது.
எனவே, இன்னும் 30 நாள்களுக்கும் உங்களது அமைப்பு தனது போக்கை மாற்றிக் கொள்ளாவிட்டால் அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தங்களுக்குத் தெரியப்படுத்திக் கொள்கிறேன்.
அதன் ஒரு பகுதியாக, தற்போது தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள உங்களது அமைப்புக்கான நிதியுதவி, நிரந்தரமாக நிறுத்தப்படும். மேலும், உங்கள் அமைப்பின் அமெரிக்கா தொடர்ந்து இடம் பெறுவது குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் என்று அந்தக் கடிதத்தில் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா நோய்த்தொற்று விவகாரத்தில் சீனாவுக்கு ஆதரவாக உலக சுகாதார ஸ்தாபனம் செயல்பட்டு வருவதாக டிரம்ப் குற்றம்சாட்டி வருகிறார். அந்த தீநுண்மி தொடர்பான பல உண்மைகள் தெரிந்திருந்தும், அவற்றை அமெரிக்காவிடமிருந்து அந்த அமைப்பு மறைத்ததாக அவர் கூறிவருகிறார்.
ஏற்கனவே உலக சுகாதார அமைப்புக்கு அமெரிக்கா வழங்கி வந்த நிதியுதவியை தற்காலிகமாக நிறுத்திவைக்க ட்ரம்ப் கடந்த மாதம் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.