உலகின் போற்றுதலுக்கு உரியோர்: பிரதமர் மோடிக்கு 8ஆம் இடம்
லண்டனில் செயல்படும் இணைய அடிப்படையிலான ஆய்வு நிறுவனம் வெளியிட்ட, 2021ஆம் ஆண்டிற்கான உலகின் போற்றுதலுக்கு உரியோர் பட்டியலில், பிரதமர் நரேந்திர மோடி 8ஆம் இடத்தைப் பிடித்துள்ளார்.
ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலைநகர் லண்டனை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இணைய அடிப்படையிலான ஆய்வு நிறுவனம் யுகோவ். ஐரோப்பா மட்டுமின்றி வட அமெரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஆசியாவிலும் இந்நிறுவனம் செயல்பாட்டில் உள்ளது.
இந்நிறுவனம் சார்பில், 2021ம் ஆண்டிற்கான உலகின் மிகவும் போற்றுதலுக்குரிய ஆண்கள் மற்றும் பெண்கள் பட்டியல் நேற்று வெளியானது. இதில் அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா முதலிடத்தில் உள்ளார். ‘மைக்ரோசாப்ட்’ நிறுவன அதிபர் பில் கேட்ஸ், சீன அதிபர் ஷி ஜிங்பிங் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளனர்.
இப்பட்டியலில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் உள்ளிட்டோரை பின்னுக்குத்தள்ளி பிரதமர் நரேந்திர மோடி 8ஆம் இடத்தைப் பிடித்துள்ளார். கிரிக்கெட் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி மற்றும் பாலிவுட் நடிகர்கள் அமிதாப் பச்சன், ஷாருக்கான் ஆகியோர் முதல் 20 இடங்களுக்குள் வந்துள்ளனர்.
அதேபோல் பெருமைக்குரிய பெண்கள் பட்டியலில் மூன்றாம் முறையாக அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவின் மனைவி மிச்செல் முதலிடத்தில் உள்ளார். அமெரிக்க நடிகை ஏஞ்சலினா ஜூலி, பிரிட்டிஷ் மகாராணி இரண்டாம் எலிசபெத் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். பட்டியலில் 10ஆம் இடத்தை இந்தியாவை சேர்ந்த நடிகையும், முன்னாள் உலக அழகியுமான பிரியங்கா சோப்ரா பெற்றுள்ளார்.