இணைய வன்முறைகளால் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள்!
இணையப் பாவனையின்போது பெண்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளும் துன்புறுத்தல்களும் நாளாந்தம் அதிகரித்து வருகின்றமையை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. Sri Lanka Computer Emergency Readiness (SL Cert) தரவுகளின்படி ஹெக்கிங், சைபர் புலிங், போலியான கணக்குகள் ஆகிய செயற்பாடுகளினூடாக இணைய வன்முறைகளை மேற்கொள்ளும் சம்பவங்கள் பெருமளவில் அதிகரித்துச் செல்கின்றன. குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் 2019ஆம் ஆண்டு தரவுகளில் 2017ஆம் ஆண்டு பெறப்பட்ட முறைப்பாடுகளில் 70 சதவீதமானவை பெண்களுக்கு எதிரான ஆபாசமான படங்கள், வீடியோக்கள் பதிவேற்றம் தொடர்பானதாக இருந்துள்ளதுடன், இதற்கு பிரதான காரணமாக காதல் உறவுகளில் ஏற்பட்ட முரண்பாடுகள் அமைந்திருந்தன. இணையத்தினூடாக ஒருவர் கேலி செய்யப்பட்டாலோ, மிரட்டப்பட்டாலோ, பாரபட்சத்திற்குள்ளாக்கப்பட்டாலோ அல்லது கட்டாயப்படுத்தப்பட்டாலோ அது இணையத்தினூடான வன்முறை என்று அழைக்கப்படும். தனிப்பட்ட புகைப்படங்களை அல்லது வீடியோக்களை அனுமதியின்றி இணையத்தில் பகிர்வதையும் பதிவேற்றுவதனையும் இது உள்ளடக்குகின்றது.
இணையத்தினைப் பயன்படுத்தும் பெண்களின் உரிமையை முற்று முழுதாக மீறும் விடயமாக இவை அமைவதுடன், இணையத்தினை பயன்படுத்துவதற்கு இருக்கும் மகத்தான சுதந்திரத்தையும் கட்டுப்படுத்தும் விடயமாக உள்ளது. இனம், மதம், கல்வி அறிவு, அந்தஸ்து ஆகிய வேறுபாடுகள் பாராது பெண்களாக இருக்கும் என்ற ஒரே காரணத்திற்காக மட்டும் இணைய வெளியில் பெண்கள் இவ்வாறு பல்வேறு துன்புறுத்தல்களுக்கும் வன்முறைகளுக்கும் உள்ளாகி வருகின்றனர்.
இந்த துயர்மிகுந்த நிலையிலிருந்து பெண்களை பாதுகாப்பதற்காகவும் பாதுகாப்பு மிக்க இணையப் பாவனையை உறுதிப்படுத்துவதற்காகவும் பெண்கள் அமைப்புகளும் பல்வேறு மனித உரிமை அமைப்புகளும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இதன் அடிப்படையில் இன்டர்நியூஸ் நிறுவனம், டிபென்ட் டிபென்டர்ஸ் மற்றும் 2017- 2018 பாதுகாப்பான சகோதரிகள் தோழமை திட்டத்தின் கூட்டு முயற்சியினால் இணையப் பாவனையை எவ்வாறு பெண்களுக்கான மிக பாதுகாப்பான செயற்பாடாக மாற்றிக் கொள்வது என்பது தொடர்பில் வழிகாட்டும் நோக்கத்துடன், ~பாதுகாப்பான சகோதரிகள் என்ற நிகழ்ச்சித் திட்டம்| (Safe Sisters project) 2017ஆம் ஆண்டு முதல் முன்னெடுக்கப்படுகின்றது. டிஜிட்டல் பாதுகாப்பினை இலகுபடுத்தல், உண்மையான பயனாளிகளுக்கு ஏற்றவாறு அதனைப் பொருத்தப்பாடு மிக்கதாக மாற்றுதல், அனைத்து பெண்களும் சிறுமிகளும் இணையப் பாதுகாப்பினை தங்கள் கரங்களில் எடுத்துக் கொள்வதனை ஊக்குவித்தல் ஆகியன இந்த திட்டத்தின் நோக்கங்களாகும். இந்த நோக்கத்தினை நிறைவேற்றிக் கொள்ளும் முகமாகவும் விழிப்புணர்வினை ஏற்படுத்துவதற்காகவும் ~பாதுகாப்பான சகோதரிகள் என்ற கையேடும்|(Safe Sisters booklet) இந்த நிகழ்ச்சித் திட்டத்தின்கீழ் உருவாக்கப்பட்டுள்ளது.
பெண் செயற்பாட்டாளர்களும்
இணையப் பாதுகாப்பும்
இந்த நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் பெண் செயற்பாட்டாளர்கள் எதிர்கொள்கின்ற இணைய வன்முறைகள், துன்புறுத்தல்கள் மற்றும் அவர்களின் டிஜிட்டல் பாதுகாப்பு தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டது. அதன் ஒரு பகுதியாக இலங்கையில் நுண் கடன் பிரச்சினை தொடர்பில் முன்னின்று போராடிவரும் பெண் செயற்பாட்டாளர்கள் சிலர் தெரிவுசெய்யப்பட்டு அவர்கள் எதிர்கொள்கின்ற இணைய வன்முறைகள், துன்புறுத்தல்கள், டிஜிட்டல் பாதுகாப்பு பற்றிய தகவல்கள் பெறப்பட்டன.
கடந்த 2021 மார்ச் 8ஆம் திகதி தொடக்கம் பொலன்னறுவை ஹிங்குரங்கொடயில் சுமார் 55 நாட்களாக நாடளாவிய ரீதியில் நுண் கடன் பிரச்சினையினால் பாதிக்கப்பட்டவர்கள் மேற்கொண்ட சத்தியாக்கிரகப் போராட்டத்தில் களத்தில் நின்று தீவிரமாக போராடி பாதிக்கப்பட்ட பெண்களுக்காகக் குரல் கொடுத்த பெண் செயற்பாட்டாளர்கள் சிலரே இவ்வாறு தெரிவுசெய்யப்பட்டனர். இந்த போராட்டம் நாட்டின் கவனத்தினை பெருமளவில் ஈர்த்ததுடன் சமூக ஊடகங்களில் இவ்விடயம் பரவலாக பேசப்பட்டிருந்தது. இன பேதமின்றி நுண் கடனால் பாதிக்கப்பட்ட பெண்கள் அனைவரும் நாட்டின் பல்வேறு பாகங்களிலிருந்தும் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டு அரசாங்கத்திற்கு பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்திருந்தனர்.
ஹிங்குரங்கொடையில் 55 நாட்கள்மேற்குறிப்பிட்ட இந்தப் பெண் செயற்பாட்டாளர்கள் அனைவருமே இலங்கையில் பல பாகங்களிலும் நுண்கடன் பிரச்சினையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியைப்பெற்றுக்கொடுக்கும் முகமாக முன்னின்று போராடி வருகின்றவர்களாவர். அத்துடன், நாடளாவிய ரீதியில் நுண்கடனால் பாதிக்கப்பட்டவர்களை குறிப்பாக பெண்களை ஒன்றிணைக்கும் பணிகளிலும் இவர்கள் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர். இந்தப் போராட்டத்தில் களத்தில் நின்று போராடிய இப்பெண்கள் கள நிலவரங்களையும் கோரிக்கைகளையும் கோஷங்களையும் சமூக ஊடகங்களில் தொடர்ச்சியாக பதிவேற்றிக் கொண்டேயிருந்தனர். அந்தப் பதிவுகளையும் நுண்கடனால் பாதிக்கப்பட்ட பெண்கள், குழந்தைகள் சகிதம் பெருந்திரளாக சத்தியாக்கிரகப் போராட்டத்திற்கு வருகை தந்து ஆதரவளித்த புகைப்படங்களும் சமூக ஊடகங்களில் வெளியாகிக் கொண்டே இருந்தன. அதனைப் பலரும் பகிர்ந்துகொண்டே இருந்தனர்.
அதேசமயம், சமூக ஊடகங்களில் இப்போராட்டத்திற்கு ஆதரவான கருத்துகளும் எதிரான கருத்துகளும் முன்வைக்கப் பட்டிருந்தமையைக் காணக் கூடியதாகவும் இருந்தது. இந்தப் போராட்டத்தை இணையத்தில் பலப்படுத்தும் நோக்குடன், ~நுண்கடன்களை ஒழிப்பதற்கான கூட்டிணைவு| என்ற முகநூல் குழுவொன்றும் உருவாக்கப்பட்டு தற்போதும் இயங்கி வருகின்றது.
இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களுக்கு எதிராக பல்வேறு விதமான அழுத்தங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்ததுடன், சிலர் திட்டமிட்டு இடையூறுகளையும் விளைவித்திருந்தனர். குறிப்பாக நுண் கடன் வழங்கிய பெரும் நிறுவனங்கள் இந்த போராட்டத்திற்கு எதிராக பல செயற்பாடுகளை முன்னெடுத்திருந்திருந்தனர்.
ஹிங்குரங்கொட அனுபவங்களைப் பகிர்ந்துகொண்ட வட பகுதியை சேர்ந்த செயற்பாட்டாளர், ‘இந்த சத்தியாக்கிரகப் போராட்டம் எங்களுக்கு பெரும் உற்சாகத்தினை அளித்த போராட்டமாக இருந்தபோதிலும், பலவிதமான அச்சுறுத்தல்களையும் நாங்கள் எதிர்கொண்டோம். சத்தியாக்கிரகப் போராட்டம் நடைபெற்ற இடத்தில் பாதுகாப்புத் தரப்பினரின் பிரசன்னம் அதிகமாக இருந்ததுடன், அவர்கள் எப்பொழுதும் எங்களை சூழநின்று கொண்டு கண்காணிப்பது, தொலைபேசிகளில் புகைப்படம் எடுப்பது, எங்களின் கையடக்க தொலைபேசிகளை தருமாறு கேட்பது போன்ற செயற்பாடுகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டிருந்தனர்| என்றார்.
போராட்டத்திற்கு அரசியல் சாயம் பூசி இது அரச சார்பற்ற நிறுவனங்களின் கூட்டு சதி என்று பிரசாரம் செய்ய ஒரு சில தரப்புகள் முயற்சித்ததாகவும், இரவு நேரங்களில் பட்டாசுகளைக் கொளுத்திப் போட்டு மறைமுக அச்சுறுத்தல் விடுத்தமை, சுலோகங்கள் தாங்கிய அட்டைகள் எரிப்பு, வீடு செல்லும் பெண் செயற்பாட்டாளர்களை லொறி ஒன்று பின்தொடர்ந்து சென்று அச்சுறுத்தியமை, நுண்கடன் வழங்கிய நிறுவனங்கள் போராட்டத்தில் பங்குபற்றியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாக அச்சுறுத்தல் விடுத்தமை போன்ற சவால்களை எதிர்நோக்கியதாகவும் மற்றொரு செயற்பாட்டாளர் குறிப்பிட்டார்.
இணையத்திலும் பெரும் சவால்கள் இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் பல்வேறு பௌதீக ரீதியில் சவால்களை எதிர்கொண்ட நிலையில், இவற்றுக்கு சற்றேனும் சளைக்காத வகையில் சமூக ஊடகங்கள் பயன்பாட்டின் போதும் இணைய வெளியில் பல சவால்களை எதிர்கொள்ள நேர்ந்ததாக தெரிவித்தனர்.
தொடர்ச்சியாக இணைய வெளியில் பின்தொடரப்படல், ஆபாசமான கருத்துக்கள் பகிரப்படல், வெறுப்பு பேச்சுக்கள் என்பனவற்றை பல்வேறு வடிவங்களில் எதிர்கொண்டதாக அவர்கள் சுட்டிக்காட்டினர். போராட்டத்தில் பங்குபற்றிய பெண்களில் பெரும்பாலானவர்கள் இவ்வாறான பிரச்சினைகளை எதிர்கொண்டமை தொடர்பில் தங்களுடன் பகிர்ந்துகொண்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர். போராட்டம் தொடர்பான கருத்துருவாக்கங்களை சமூக ஊடகங்களில் பதிவேற்றும்போது எண்ணற்ற தொந்தரவுகளை எதிர்கொண்டதாகவும், இதன்போது சில பெண்கள் பல நாட்கள் சமூக ஊடகங்களைத் தவிர்த்துக்கொண்டதாகவும் இவர்கள் குறிப்பிட்டனர்.
நிலைமை இவ்வாறு இருக்கையில், சமூக அவலங்களுக்காக குரல் கொடுக்கின்ற அதேவேளை சமூகத்தில் நிகழும் அநீதிகளுக்கு எதிராக களத்தில் போராடுகின்ற பெண் செயற்பாட்டாளர்களை இலக்கு வைத்து இணைய பாவனையின்போது மேற்கொள்ளப்படும் துன்புறுத்தல்கள் அவர்களின் செயற்பாடுகளைப் பெரிதும் பாதிக்கும் விடயமாக அமைந்துவிடுகின்றது. இணையத்தில் எதுவும் உண்மையில் முற்று முழுதாக அகன்று விடாது என்பதற்கு ஏற்ப தற்பொழுது சத்தியாக்கிரகப் போராட்டம் நடைபெறாவிடினும், அப்போராட்டம் தொடர்பாக சமூக ஊடகங்களில் தொடர்ச்சியாகப் பேசப்பட்டுக் கொண்டிருப்பதனால் இவர்களின் இணைய பாதுகாப்பு என்பது சவால் மிக்கதாகவே உள்ளது.
சமூகத்தில் பரவலாகப் பேசப்படும் ஏதேனும் ஒரு விடயம் தொடர்பில் பால்நிலை கூருணர்வுடன் கருத்துக்களை சமூக ஊடகங்களில் வெளியிடும்போதும், ஒரு விடயத்தினை பால்நிலை கூருணர்வுடன் அணுகி கருத்துருவாக்கங்களை மேற்கொள்ளும்போதும் பெண் செயற்பாட்டாளர்கள் இணைய வெளியில் மோசமான சொல்லாடல்களையும், சொற்போர்களையும் எதிர்கொள்கின்றனர். திட்டமிட்ட வகையில் கூட்டாக இணைந்து பலரால் விமர்சிக்கப்படுதல், அவதூறுக்குள்ளாக்கப்படுதல், வெறுப்புப் பேச்சுகளுக்கு உள்ளாக்கப்படுதல், தனிப்பட்ட வாழ்க்கையினை பொது வாழ்க்கையுடன் தொடர்புறுத்தி கடுமையான சொற் தாக்குதல்களை மேற்கொள்வது ஆகிய நிகழ்வுகள் பொதுவாகவே இணைய வெளியில் இடம்பெறுவதனைக் காணக்கூடியதாக இருக்கின்றது.
அதுமட்டுமன்றி, சமூக ஊடகக் கணக்குகள் ஹெக் செய்யப்படுதல், கடவுச் சொற்களை களவாடுதல், கணினிக்கு பாதிப்பினை ஏற்படுத்தும் மென்பொருட்களை (சொவ்ட்வெயார் ஸ்பைவெயார்) கணக்குகளுக்குள் ஊடுருவச் செய்தல், அனுமதியின்றி தனிப்பட்ட படங்களை வெளியிடுவது, அதனை பிரதியிட்டு ஆபாசப்படமாக்குதல் போன்ற பல்வேறு துன்புறுத்தல்களும் மோசடிகளும் பெண் செயற்பாட்டாளர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படுகின்றது. இந்த வகையில் பெண் செயற்பாட்டாளர்கள் மிகவும் ஆபத்தான இலக்குகளாகவே இணையத்தில் உள்ளனர்.
உண்மையில் இவ்வாறான சம்பவங்கள் ஆழ்ந்த கவலையைத் தரும் விடயங்களாகும். நேர்மையான சிந்தனைகளுடன் சமூக மாற்றத்திற்காக மிகத் தீவிரமாக
அர்ப்பணிப்புத் தன்மையுடன் பொதுவெளியில் செயற்படும் பெண் செயற்பாட்டாளர்களுக்கு உளவியல் ரீதியில் பாதிப்பினை ஏற்படுத்தும் விடயங்களாகவே இவை அமைகின்றன. இவ்வாறான சம்பவங்களினால் பாதிக்கப்படும் பெண்களில் ஒரு சிலர் தங்களது செயற்பாடுகளில் இருந்து பின்வாங்குகின்ற போக்கினையும், நீண்ட காலத்திற்கு சமூக ஊடகங்களிலிருந்து விலகியிருப்பது அல்லது மௌனத்தைக் கடைப்பிடிப்பது போன்ற சில முடிவுகளை விரும்பியோ விரும்பாமலோ எடுக்க வேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
இணைய வெளியில் எனது சுதந்திரமான செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த திட்டமிட்டு செயற்படுபவர்களினால் நான் ஒரு காலகட்டத்தில் மோசமான மன உளைச்சலுக்குள்ளானேன். சமூக ஊடகங்களிலிருந்து முற்றாகவே ஒதுங்கியிருந்தேன். அவ்வாறான சந்தர்ப்பங்களில் நான் என்ன செய்ய வேண்டும்? யார் உதவியை நாடவேண்டும்? என்ற சிந்தனை எனக்கு இருக்கவில்லை. நானே சுயமாக அதிலிருந்து மீண்டு வந்து இப்பொழுது எது வேண்டும் என்றாலும் நடக்கட்டும்.
நான் என் வழியில் தான் செல்வேன் என்ற அடிப்படையில் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி வருகின்றேன். எனது சுதந்திரத்தைக் கட்டுப்படுத்த எவருக்கும் உரிமையில்லை. அது இணைய வெளியைப் பயன்படுத்த எனக்குள்ள சுதந்திரத்திற்கும் பொருந்தும் என்று மற்றுமொரு செயற்பாட்டாளர் குறிப்பிட்டார்.
டிஜிட்டல் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு
இந்த ஆய்வில் கலந்துகொண்ட நுண்கடன் சம்பந்தமாக போராடும் பெண் செயற்பாட்டாளர்கள் அனைவருமே பெண்கள் மத்தியில் டிஜிட்டல் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வினை ஏற்படுத்துவதன் அவசியத்தை பெருமளவில் வலியுறுத்தியிருந்தனர். பெருமளவான பெண்கள் இணைய வெளியினைப் பயன்படுத்துகின்ற போதிலும் பாதுகாப்பான முறையில் அதனைப் பயன்படுத்துவது தொடர்பான இலகுவான தொழில்நுட்ப நுணுக்கங்கள் பற்றியும் அறியாதவர்களாகவே உள்ளனர்.
இதனை வலியுறுத்தும் முகமாக தனது கருத்தினை தெரிவித்திருந்த ஒரு பெண் செயற்பாட்டாளர் பொதுவாக இணைய துன்புறுத்தல்களை எதிர்கொள்ளும் பெண்களுக்கு உதவிசெய்து அவர்களை அப்பிரச்சினையிலிருந்து மீட்டெடுப்பதற்கு கூட்டான ஒரு செயற்றிட்டம் தேவையாக உள்ளது. இவ்வாறான சகல சம்பவங்களிலும் பெண்களுக்கு பெண்களே உதவிடாத நிலைமையும், சமூக ஊடகங்களில் துன்புறுத்தலுக்குள்ளாகும்போது எதிர்ப்புத் தெரிவிக்கவும் இதர பெண்கள் தயங்குகின்றனர். இதனால் பாதிக்கப்படும் பெண்கள் தனிமைப்பட்டு மன உளைச்சலுக்கு ஆளாகிவிடுகின்றனர். இதற்காக இணைய வெளியில் துன்புறுத்தலுக்குள்ளாக்கும் பெண்களை பாதுகாக்கும் கூட்டு வேலைத்திட்டம் அவசியம் என்று வலியுறுத்தினார்.
சமூக ஊடகங்களில் பெண்கள் மிகவும் மோசமாக இழிவுப்படுத்தப்படுகின்றமை, சுதந்திரமாக செயற்பட முடியாமை போன்ற விடயங்கள் தொடர்பில் தான் பெரும் அதிருப்தியான மன நிலையில் இருப்பதாகக் குறிப்பிட்ட பெருந்தோட்டத்துறையை பிரதிநிதித்துவப்படுத்தும் செயற்பாட்டாளர் ஒருவர், பெருந்தோட்டத்துறையில் இந்நிலைமை மிகவும் மோசமாக உள்ளதாகவும், அனைவரும் இணையத்தினை அணுகும் வசதியினைப் பெற்றிருந்தாலும் அதன் தவறான பயன்பாடுகள், பாதுகாப்பான முறையில் பயன்படுத்த தெரியாமை போன்ற காரணங்களினால் பெரும் பிரச்சினைகளை குறிப்பாக இளம் பெண்களும், சிறுமிகளும் எதிர்கொள்வதாக சுட்டிக்காட்டினார். கையடக்க தொலைபேசியை எவ்வாறு கடவுச்சொல் இட்டு பாதுகாப்பது என்ற அடிப்படை அறிவு
கூட இன்றி பலர் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த சவால்களை பெண் செயற்பாட்டாளர்கள் மட்டுமன்றி, பொதுவாகவே இணையத்தினைப் பயன்படுத்துகின்ற அனைத்து பெண்களுக்கும் சிறுமிகளுக்குமான பொதுப் பிரச்சினையாகவே உள்ளது. பெண்களுக்கும் சிறுமிகளுக்கும் இணையப் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வினை ஏற்படுத்தவேண்டிய கட்டாய நிலையை அதிகரித்து செல்லும் சம்பவங்கள் ஏற்படுத்தியுள்ளன. இணையப் பாவனையின்போது பெண்கள் எதிர்கொள்கின்ற பல்வேறு பிரச்சினைகளான படங்கள் களவாடப்படல், அனுமதியின்றி அவற்றை பதிவிடல், வைரஸ்கள், இணைய மோசடிகள் என்பனவற்றின்போது நாம் அவற்றை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும்? இணையப் பாவனையை எப்படி மிக பாதுகாப்பான செயற்பாடாக மாற்றிக்கொள்ள வேண்டும் என்பது தொடர்பில் வழிகாட்டும் பல்வேறு செயற்பாடுகள் இன்றைய காலகட்டத்தில் மிகவும் அவசியமானதாக உள்ளது. இணையத்தை எப்படி பாதுகாப்பாக பயன்படுத்துவது என்ற விழிப்புணர்வானது இணையத்தினூடான சுரண்டல் மற்றும் வன்முறைகளைத் தடுப்பதற்கு உதவும் எனலாம்.
பிரியதர்ஷினி சிவராஜா