இசை கருவிகளை எரித்து தலிபான்கள் அட்டூழியம்
ஆப்கானிஸ்தானில் கல்யாண வீட்டில் புகுந்து, இசைக் கலைஞரின் இசைக் கருவியை தலிபான்கள் தீயிட்டு எரிக்கும் ‘வீடியோ’ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய பின், பல பிற்போக்கான விதிமுறைகள் மீண்டும் அமுலுக்கு வந்தன.’தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் பெண்கள் பங்கேற்கக் கூடாது’ என ஆப்கானிஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது.மேலும், ஆடைகள் விற்பனை நிலையங்களில் வைக்கப்படும் ஆண், பெண் பொம்மைகள் தலையின்றி வைக்கப்பட வேண்டும் என்பது போன்ற பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
திருமணங்களில் இசை நிகழ்ச்சிகளை நேரடியாக நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பாக்தியா மாகாணத்தில் உள்ள ஸஸாய் அருப் மாவட்டத்தில், திருமண நிகழ்ச்சி நடந்த அரங்கத்திற்குள் தலிபான்கள் அதிரடியாக புகுந்தனர்.இசை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. இதையடுத்து, இசைக் கலைஞரிடம் இருந்து இசைக் கருவியை பறித்த தலிபான்கள் அதை தீயிட்டு எரித்தனர்.
தன் இசைக்கருவி தீயில் எரிவதைப் பார்த்த இசைக் கலைஞர் கதறி அழுதார். இதைப் பார்த்து தலிபான்கள் கைகொட்டி சிரித்தனர். அந்த திருமண வீட்டில் இருந்த பத்திரிகையாளர் அப்துல்லா ஓமேரி என்பவர், இந்த காட்சிகளை தன் கைபேசியில் பதிவு செய்து, சமூக வலைதளங்களில் வெளியிட்டு உள்ளார். தலிபான்களின் இந்த செயல், உலக அளவில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன், ஆப்கானிஸ்தானை தலிபான்கள் ஆட்சி செய்தபோது கல்வி, வேலை வாய்ப்பு மற்றும் பொது வாழ்வில் பெண்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த முறை தலிபான்கள் மீண்டும் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய பின், பெண்களுக்கான பாடசாலைகள் மூடப்பட்டன. இந்நிலையில், ”ஆப்கன் புத்தாண்டான மார்ச் 21ஆம் திகதிக்கு பின் பெண்களுக்கான பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படும்,” என, அந்நாட்டு துணை அமைச்சர் ஸபிஹுல்லா முஜாகித் தெரிவித்துள்ளார்.