அர்ப்பணிப்பே வெற்றியின் வழி!
உரையாடல்: நா.தினுஷா
எனது வெற்றிக்கு எனது குடும்பமும், சமூகமும், நண்பர்களுமே காரணம். அவர்களின் ஊக்குவிப்பே சாதிக்கும் ஆசையைத் தூண்டியது. நான் மனம் துவண்டாலும் எனது நண்பர்கள் என்னை விட்டுக்கொடுப்பதில்லை. உன்னால் முடியுமென்று எனது தன்னம்பிக்கையை அதிகரிப்பவர்கள் எனது நண்பர்களே. தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும், ஊக்குவிப்புமே எனது வெற்றிக்குக் காரணம்.
இவ்வாறு தெரிவிக்கின்றார் கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தின் MBBS இறுதிப் பரீட்சையில் 13 தங்கப் பதக்கங்களைப் பெற்று சாதனை படைத்த தர்ஷிகா தணிகாசலம்.
தமிழன் வார இதழுக்கு வழங்கிய உரையாடலின்போதே தர்ஷிகா தனது அனுபவங்களை எம்முடன் பகிர்ந்துகொண்டார். அதன்போதே மேற்கண்டவாறு கூறினார்.
உங்களைப் பற்றி?
நான் தர்ஷிகா தணிகாசலம். எனது சொந்த ஊர் அக்கரைப்பற்று. பிறந்து, வளர்ந்து உயர்தரம் வரையில் அக்கரைப்பற்றிலேயே கல்வி கற்றேன். எனது அப்பா தணிகாசலம், ஓய்வுபெற்ற அதிபர். அம்மா குடும்பத் தலைவியாக இருக்கிறார். அண்ணா ஒருவர் இருக்கிறார். தம்பி ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடத்தில் கல்வி கற்று வருகிறார். தங்கை உயர்தரத்தில் கல்வி கற்று வருகிறார்.
எனது முதல்நிலைக் கல்வியை விபுலானந்தா இல்லம் எனும் பாலர் பாடசாலையில் முன்னெடுத்தேன். முதலாம் தரத்திலிருந்து ஐந்தாம் தரம் வரை அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஷ்ண மிஷன் வித்தியால யத்தில் கற்றேன். அதன்பின்னர் ஆறாம் தரத்திலிருந்து உயர்தரம் வரை ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரியில் கற்றேன்.
வைத்தியர் ஒருவர் எவ்வாறு இருக்க வேண்டு மென நீங்கள் கருதுகிறீர்கள்?
வைத்தியர் என்பவரை அனைவரும் கடவுளாகவே நினைக்கிறார்கள். ஆனால், தற்போதைய காலத்தில் அந்த நிலைப்பாட்டில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
வைத்தியருக்கும் நோயாளருக்கும் இடையிலான தொடர்பாடல் குறைவடைந்தது ஒரு காரணமாக இருக்கலாம். மருத்துவத்துறையை எடுத்துக்கொண்டால் முக்கிமாக தொடர்பாடல் என்பது அவசியமாகும். சில நோய்களுக்கு இதுவரைகாலமும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.
மருந்துக்கப்பால் நோயாளர் ஒருவருடன் நாம் மனம்விட்டு கதைப்போமானால் அவர்களின் நோய் நிலையில் குறைந்தது 50 சதவீதத்தை யாவது குறைக்கக்கூடியதாக இருக்கும். நோயாளர்களுடன் பேசுவதனூடாக அவர்களின் உளநிலையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தலாம்.
வைத்தியர்களுக்கும் நோயாளர்களுக்கும் இடையிலான தொடர்பாடலில் பாரிய குறைபாடு இருக்கிறது என்றே நான் கருதுகிறேன். இந்நிலைமையில் மாற்றம் ஏற்படவேண்டும் என்பதே எனது விருப்பம்.
நோயாளர் ஒருவர் மருத்துவர் ஒருவரிடம் நம்பிக்கையுடன் வரும்போது அவரின் புன்னகையே நோயை குணமாக்கிவிடும் என்று கூறுபவர்கள் இருக்கிறார்கள். அவ்வாறான வைத்தியரொருவர் அவசியம். பின்தங்கிய நிலையில் இருப்பவர்கள் வைத்தியர்களை நாடுவதும் பாரிய கேள்விக்குறியாகவே இருக்கிறது. இந்த நிலை மாற்றமடைந்து அனைவருக்கும் ஏற்றவகையில் வைத்தியர் ஒருவர் இருக்கவேண்டும என்பதே எனது விருப்பம்.
அவ்வாறான கல்வி முறை எமது மருத்துவத்துறையில் இருக்கிறதா?
நிச்சயமாக அவ்வாறான கற்றல் நடவடிக்கை பின்பற்றப்படுகின்றது. அரச மருத்துவமனைகளில் வழங்கும் சிகிச்சை முறையில் குறைபாடு காணப்படுகிறது என்பதும் தனியார் மருத்துவமனைகளில் வழங்கும் சிகிச்சை சிறந்த முறையில் இருக்கிறது என்பதும் அநேகமானவர்களின் ஒரு நிலைப்பாடாக இருக்கிறது.
இந்த நிலைப்பாடு தவறானதாகும். நான் தற்போது தேசிய வைத்தியசாலையில் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். எனவே, தனியார் மருத்துவமனைகளில் வழங்கப்படும் சிகிச்சையையும் பார்க்க அரச மருத்துவமனையில் வழங்கப்படும் சிகிச்சை சிறப்பாக இருக்கிறது என்றே நான் கருதுகிறேன்.
அது மக்களுக்குப் புரிவதில்லை. அரச மருத்துவமனைகளில் நோயாளர்களின் தேவைக்கேற்பவே சிகிச்சை வழங்கப்படுகின்றது.
அரச மருத்துவமனை களில் கவனிப்பது குறைவு என்றும் தனியார் மருத்துவமனைகளிலேயே முறையாக கவனிக்கிறார்கள் என்றும் சிலநேரம் நோயாளர்கள் தவறாக புரிந்துகொள்கிறார்கள். இந்தப் பிரச்சினைக்கு மேற்குறிப்பிட்டதுபோன்று தொடர்பாடல் சிக்கலே முக்கிய பிரச்சினையாக காணப்படுகின்றது.
உண்மையில் கூறுவதானால் அரச மருத்துவமனைகளில் வைத்தியர்களின் எண்ணிக்கை குறைவாக காணப்படுகிறது. இவ்வாறிருக்கையில், நாளொன்றுக்கு
50 அல்லது 100 வரையிலான நோயாளர்கள் வைத்தியசாலைக்கு வருவார்கள். சிகிச்சைக்காக வரும் சகல நோயாளர்களுக்கும் விளக்கமளித்து அவர்களுடன் சுமுகமாக பேசும் சூழ்நிலை அரச மருத்துவமனைகளில் வைத்தியர்களுக்கு இருக்காது.
இருந்தாலும், முடிந்தளவு தொடர்பாடலை பேணும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. இன்னும் அதிகளவான வைத்தியர்கள் மருத்துவத்துறையில் இணைந்துகொள்ளவேண்டும். அவ்வாறு மருத்துவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது நோயாளர்களுக்கு ஒதுக்கும் நேரம் அதிகரிப்பதுடன், அவர்களுடன் உரையாடும் நேரமும் அதிகரிக்கும்.
உங்களின் தூண்டுதல் (ரோல் மொடல்) யார்? அல்லது மருத்துவத்துறை என்பது உங்களின் இலட்சியமா?
இரண்டாவது கேள்வியே எனக்குப் பொருத்தமானது. எனது குடும்பத்தைப் பொறுத்தவரையில் சகலரும் கல்விப் புலமையுள்ளவர்கள். முக்கியமாக எனது குடும்பத்தைச் சேர்ந்த சகலரும் விஞ்ஞானத்துறையில் ஆர்வமுடையவர்கள். அந்தத் துறையை தெரிவுசெய்து கற்றிருக்கிறார்கள்.
அதனால் சிறிய வயதிலிருந்தே விஞ்ஞானத்துறையில் எனக்கொரு ஈடுபாடு இருந்தது. பாலர் பாடசாலையிலிருந்தே எனது ஆர்வம் ஆரம்பித்துவிட்டது. மேடை நிகழ்ச்சிகளுக்காக மருத்துவராக வேடம் தரிப்பதும் உண்டு. அவ்வாறு ஒப்பனை செய்துகொண்டு மேடைக்கு செல்லும் போதெல்லாம், உண்மையாகவே நானும் கோட் சூட் எல்லாம் அணிந்து கொண்டு மருத்துவராக வேண்டும் என்ற ஆர்வம் உருவாகிவிட்டது. அதுவே மருத்துவத்துறைக்கு வரக் காரணம்.
அதேபோன்று சாதிக்க வேண்டும், சகல செயற்பாடுகளிலும் சிறந்த ஆளுமையை வெளிப்படுத்த வேண்டும். அனைத்திலும் முதலிடத்துக்கு வர வேண்டும் என்ற எண்ணம் எப்போதுமே இருக்கும். அது கற்றலில் ஈடுபாடுடன் இருப்பதற்கு முக்கிய காரணமாக இருந்தது.
இலக்கை அடையவேண்டுமாயின் பல்வேறு சவால்களை சந்திக்க நேர்ந்திருக்கும். அதேபோன்று அநேகமான விடயங்களை இழந்திருப்பீர்கள்? அவ்வாறான அனுவங்களைப் பகிர்ந்துகொள்வீர்களா?
நாம் நினைத்ததை அடையவேண்டுமானால் சில விடயங்களை கட்டாயம் இழந்தேயாக வேண்டும். ஆனால், நாம் அடையும் இலக்கு, எமது இழப்புகளை ஈடுசெய்யக் கூடியதாக இருந்தால் அது குறித்து துளியளவும் கவலையடைய வேண்டியதில்லை.
கற்று ஓர் இலக்கை அடைந்தவர்கள் எல்லாம் வாழ்க்கையில் மகிழ்ச்சியான தருணங்களை அனுபவத்திருக்கமாட்டார்கள். முக்கியமாக தொலைக்காட்சி பார்க்கமாட்டார்கள் என்ற நிலைப்பாடு அநேமானவர்கள் மத்தியில் இருந்துவருகின்றது. எனது உயர்தர பெறுபேறுகள் வெளியானபோது அநேகமானவர்கள் என்னிடம் ‘தொலைக்காட்சி பார்ப்பீர்களா அக்கா?” என்று கேட்டார்கள்.
உயர்தரப் பரீட்சை நேரத்தில், ஒரு பாடத்துக்கு முன்னர் திரைப்படம் பார்த்த அனுபவம் கூட எனக்கிருக்கிறது. இதனை நம்புவீர்களா என்பது எனக்குத் தெரியாது. ஆனால், நான் திரைப்படம் பார்த்தேன். அதற்காக திரைப்படம் பார்க்கவேண்டுமென நான் கூறவில்லை.
அதற்கான காரணம் என்னவென்றால், அமைதியாக படித்தேன். தினந்தோறும் கற்கும் விடயங்களை அன்றைய தினத்திலேயே படித்து முடித்துவிடுவேன். பரீட்சை வரும்போது அனைத்தையும் குவியலாக படித்து, அழுத்தத்தை அதிகரித்துக்கொள்ளும் நிலைக்கு சென்ற வீதம் குறைவு.
சில மகிழ்ச்சியளிக்கும் செயற்பாடுகளை கட்டாயமாக கட்டுப்படுத்தியே ஆகவேண்டும். படிக்கும் காலத்தில் படித்தால் மாத்திரமே சாதிக்க முடியும். கற்கும் காலத்தில் திரைப்படம், தொடர்நாடகங்கள் என பார்க்க ஆரம்பித்தால் எதிர்கால இலக்குகளை இழக்க நேரிடும். ஓர் அமைதிக்காக திரைப்படம் பார்த்தல் அல்லது மகிழ்ச்சியான செயற்பாடுகளில் கட்டாயம் ஈடுபட்டேயாகவேண்டும்.
மாறாக தொடர்ச்சியாக திரைப்படம் பார்ப்பதற்கும் கற்றலுக்கு அப்பாலான செயற்பாடுகளிலும் ஈடுபடுவோமாக இருந்தால் தோல்வியையே சந்திப்போம்.
அப்படி என்றால் உங்களின் பிரதான கதாபாத்திரம் நீங்களேதான்?
அப்படியும் கூறலாம். 2009ஆம் ஆண்டு சாதாரண தரத்தில் கல்வி கற்றுக் கொண்டிருந்தேன். அதன்போது, மைதிலி சிவபாதசுந்தரம் அக்காவின் உயர்தரப் பரீட்சை பெறுபேறு வெளியாகியிருந்தது. உயர்தரத்தில் அகில இலங்கை ரீதியில் முதலிடத்தை பெற்றுக்கொண்டார்.
அவரின் பேட்டியொன்றும் ரூபவாஹினி தொலைக்காட்சியில் வெளியாகியிருந்தது. அனைவருக்கும் தெரியும் 2009ஆம் ஆண்டு எவ்வாறான இக்கட்டான சூழ்நிலைமிக்க காலப்பகுதி என்று. அவ்வாறானவொரு சூழ்நிலையிலும், அக்கா தொலைக்காட்சிக்கு பேட்டி வழங்கியிருந்தார்.
அவரின் பேட்டியை பார்த்ததும் எனக்குள் ஒரு புத்துணர்ச்சியும், படித்தால் எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம் என்றவொரு எண்ணமும் வந்துவிட்டது. அந்தச் சந்தர்ப்பத்தில் அக்கா எனக்கொரு ஊக்கமாக இருந்தார். சாதாரண தரம் முடிந்தவுடன் உயர்தரத்தில் 3 ஏ சித்திகளை பெற வேண்டும் என்ற இலக்கில் கற்றேன்.
கல்வியில் ஆர்வமுள்ள மாணவர்கள், கல்வியை பார்த்துக்கொண்டு ஏனைய விடயங்களை சரியாக முன்னெடுத்துச் செல்லும் மாணவர்கள், கல்வியில் ஆர்வம் குறைவான மாணவர்களும் இருக்கிறார்கள். இவர்களுக்கு வைத்தியராக உங்களின் ஆலோசனை என்ன?
உண்மையில் இவ்வாறான மாணவர்கள் இருக்கிறார்கள். சிலர் படிப்பிலேயே ஊறிவிடுவார்கள். இவர்கள் ஒரு கட்டத்தில் நிச்சயமாக தனிமையை உணர்வார்கள். கற்பவர்களுக்கு சிறந்தது இரண்டு பக்கத்தையும் சரிசமமாக முன்னெடுத்துச் செல்வதுதான்.
இவ்வாறு சரிசமமாக கொண்டுசெல்வது சிலருக்கு கடினமான விடயமாக இருக்கும். அது மூன்றாவது ரகம். படிக்கவேண்டும் என ஆசைப்படுவது. ஆனால், படிக்க முடியாது. தெரிவுசெய்யும் பாடங்களே அதற்கான காரணம்.
ஆசைப்படும் துறை ஒன்றாக இருக்கும். ஆனால், எம்மால் முடிந்தது வேறு ஒரு துறையாக இருக்கும். ஆகவே, எம்மால் முடிந்ததொரு துறையில் கற்க வேண்டும். முடிந்ததை செய்தால் நிச்சயம் திருப்திகரமானவொரு இலக்கை அடைய முடியும்.
உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் கற்பவர்கள் எல்லாம் வைத்தியர்களாக முடியாது. உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் கற்றுவிட்டு வேறு வேறு துறையில் சாதிப்பவர்களும் இருக்கிறார்கள். தன்னால் முடிந்த விடயத்தை அதிக ஆளுமையை வெளிப்படுத்தினால் சிறந்ததொரு வெற்றியை அடையமுடியும். முயற்சிக்காமல் என்னால் முடியாது என்று கூறுவதால் எந்த பயனும் கிடைக்கப்போவதில்லை. நம்மால எல்லாம் முடியுமென்ற தன்னம்பிக்கை கட்டாயம் இருக்கவேண்டும்.
கொழும்பு பல்கலைக்கழகத்தில் இதற்கு முன்னரும் இவ்வாறு 13 தங்கப் பதக்கங்கள் பெற்றுக்கொண்ட சந்தர்ப்பங்கள் இருக்கின்றதா?
கொழும்பு பல்கலைக்கழகத்தில் 5 வருட கற்கையை நிறைவுசெய்யும் மாணவர்களுக்கு ஒவ்வொரு வருடமும் 37 தங்கப் பதக்கங்கள் வழங்கப்படுகின்றன. பெட்ச் டொப் எடுக்கும் மாணவர்களுக்கு பொதுவாக 10, 11, 12, 13 என்று தங்கப் பதக்கங்களை எடுத்திருக்கிறார்கள். 20 தங்கப் பதக்கங்களை பெற்ற அக்கா ஒருவரும் இருக்கிறார்.
உங்களின் அடுத்த குறிகோள் என்ன? மருத்துவத்தில் என்ன துறையில் நிபுணத்துவம் பெறவுள்ளீர்கள்?
இருதயம் சார்ந்த (Cardiology) மருத்துவப் பிரிவில் கற்று இருதய நிபுணராக வேண்டும் என்பதே தற்போதைய ஆசை. அதற்கு ஏற்றவரே கற்கவும் ஆரம்பித்துள்ளேன்.
வெளிநாட்டுக்குச் சென்று கற்றல் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் ஆர்வம் இருக்கிறதா?
மருத்துவத்துறையில் வெளிநாட்டுப் பயிற்சி என்பது அவசியம். தற்போது எனக்கு கிடைத்துள்ளது ஆடீடீளு பட்டம். இதற்குப் பின்னர் ஆனு முடிக்க வேண்டும். அதனை முடித்த பின்பு கட்டாயம் வெளிநாட்டில் பயற்சிபெற்று வந்தால் மாத்திரமே ஒரு நிபுணராக தொழில்புரிய முடியும். அது எமது சட்டத்திலேயே இருக்கிறது. அதனூடான எமக்கும் புதிய அனுபவங்களும் கிடைக்கும். நிச்சயமாக வெளிநாடு செல்ல நேரிடும்.
உங்களின் கற்றல் நடவடிக்கைக்கு குடும்பத்தினரதும் சமூகத்தினதும் ஒத்துழைப்புகள் எவ்வாறு அமைந்திருந்தது?
நான் இந்த நிலைக்கு வர எனது பெற்றோர் உள்ளிட்ட குடும்பத்தார் மற்றும் ஒட்டுமொத்த சமூகத்துக்கும் எனது முன்னேற்றத்தில் பங்கு இருக்கிறது. பாடசாலையிலும் சரி, பல்கலையிலும் சரி எல்லா இடங்களிலும் எனக்கு அதிக ஊக்குவிப்பு கிடைத்தது.
எமது முன்னேற்றத்தில் நண்பர்களின் பங்களிப்பும் மிக முக்கியமானது. எனக்கும் அவ்வாறே.
எனது நண்பர்களும் அவ்வாறே. என்னை ஊக்குவித்துக்கொண்டே இருப்பார்கள். நான் மனம் சோர்ந்தாலும் என்னை ஊக்குவிக்கும் நண்பர்களே எனக்கு இருந்தார்கள். அதுவே எனது வெற்றிக்குக் காரணம்.