அமேசன் காட்டில் சிறுவனுக்கு கொரோனா ; அதிர்ச்சியில் பிரேசில்
அமேசன் காட்டில் 15 வயது சிறுவனுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. சிகிச்சை பலனின்றி சிறுவன் இறந்தது அதிர்ச்சியை தந்துள்ளது.
உலகை அச்சுறுத்திய கொரோனா உலகின் பிரபல்யமிக்க அமேசன் காடுகளையும் விட்டுவைக்கவில்லை. இந்த காடுகளின் பெரும்பாலான பகுதி பிரேசில் நாட்டில் தான் உள்ளது. இ்நத காடுகளில் பழங்குடியினராக ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர்.
அமேசன் காடுகளில் எவ்வித வெளியுலக தொடர்புமின்றி பல பழங்குடியினர் வாழ்ந்து வருகின்றனர். அதில் சிலர் மட்டும் காடுகளை விட்டு வெளியே சென்று வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது. அதில் கோகமா பழங்குடியை சேர்ந்த பெண் ஒருவர் சுகாதார பணியாளராக இருக்கிறார். இவருக்கு தான் முதலாவதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
அமேசனில் கொரோனா பாதிப்பு இருப்பது தெரிந்ததும் பிரேசிலில் டாக்டர்கள் குழு பரிசோதித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென அரசை கேட்டுக்கொண்டது.
இந்நிலையில் யானோமாமி சமூகத்தை சேர்ந்த 15 வயது சிறுவன் பாதிக்கப்பட்டு ரொராரிமா மாநிலத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின் சிகிச்சை பலனின்றி சிறுவன் பலியானதாக தகவல்கள் வெளியாகின.
பூர்வகுடிகளில் இதுவரைக்கும் 7 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ள நிலையில் சிறுவனின் உயிரிழப்பு மேலும் அச்சத்தை உண்டாக்கியுள்ளது. பல குக்கிராமங்களில் வாழ்ந்து வரும் இவர்களால் கொரோனா அதிகரித்தால் சிகிச்சை அளிக்க மருத்துவ வசதிகள் கூட இல்லை என்பதும் கூடுதல் கவலையாக உள்ளது. எனினும் சிறுவனின் உயிரிழப்பை தொடர்ந்து யானோமாமி பழங்குடியின மக்களை பாதுகாக்கும் முயற்சியில் பிரேசில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது