இலங்கை

(Video) அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டார் பூஜித்த ஜயசுந்தர – பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் பரபரப்பு சாட்சியம் !

2018 ஒக்ரோபர் 23 ஆம் திகதிக்குப் பின்னர் தேசிய பாதுகாப்பு சபைக் கூட்டங்களில் தாம் கலந்துகொள்ளவில்லையென்றும் ஜனாதிபதி அந்த உத்தரவை பிறப்பித்திருந்தாரென்றும் பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தர இன்று அதிரடியாக தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சம்பவங்கள் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.அவர் மேலும் கூறியதாவது ,

தேசிய பாதுகாப்பு சபைக் கூட்டத்தில் இறுதியாக கடந்த வருடம் ஒக்ரோபர் 23 ஆம் திகதியே கலந்துகொண்டேன்.அதற்கு நான் ஏன் அழைக்கப்படவில்லை என்று தெரியவில்லை.என் மீது அல்லது பொலிஸ் மீது நம்பிக்கை இல்லாமல் இருக்கக் கூடும்.இதுபற்றி முன்னாள் பாதுகாப்பு செயலர் கபிலவிடம் கேட்டபோது ” மன்னியுங்கள் . இது ஜனாதிபதியின் உத்தரவு ” என்று அவர் என்னிடம் தெரிவித்தார்.

பொலிஸ் திணைக்களம் சட்டம் ஒழுங்கு அமைச்சின் கீழ் இயங்கியபோது தேசிய புலனாய்வுத்துறை பாதுகாப்பமைச்சின் கீழ் தான் இயங்கியது தேசிய புலனாய்வுத்துறை பிரிவுகளுக்கு நான் செல்ல முற்பட்டபோது எனக்கு உரிய பிரதிபலிப்பு காட்டப்படவில்லை.மறுக்கப்பட்டது. சி.ஐ டி.முக்கிய விவகாரங்களை விசாரித்த இன்ஸ்பெக்டர் நிஷாந்த சில்வாவை இடமாற்றம் செய்யும்படி பல தடவைகள் அழுத்தங்கள் வழங்கப்பட்டன.அதனை செய்யுமாறு ஜனாதிபதி என்னிடம் கோரியிருந்தார்.அப்போதைய பாதுகாப்பு செயலாளரும் அப்போது கோரியிருந்தார்.பாதுகாப்பமைச்சில் நடைபெற்ற புலனாய்வுத்துறை இணைப்புக்குழு கூட்டத்தில் ஏப்ரல் 9 ஆம் திகதி நான் கலந்து கொண்டிருந்தேன்.தாக்குதல் சம்பந்தமான விடயங்கள் அங்கு கூட்டத்தின் ஒரு அங்கமாகவே பேசப்பட்டன.பின்னர் நான் அவை குறித்து உரிய பாதுகாப்பு தரப்புக்களுக்கு அறிவித்தேன்.

தாக்குதல் சம்பவங்கள் குறித்து கேள்விப்பட்ட விடயங்களை விசேட அதிரடிப்படை ,குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் போக்குவரத்து,முக்கிய பிரமுகர்கள் பாதுகாப்பு ,மேல்மாகாண பொலிஸ் ஆகியவற்றுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர்மாருக்கு அறிவித்தேன்.

(சாட்சியங்கள் தொடர்கின்றன – மேலதிக தகவல்கள் விரைவில்…)