விளையாட்டு

மொகாலியில் வெல்லுமா இந்தியா * இன்று நான்காவது ஒருநாள் போட்டி

இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதும் நான்காவது ஒருநாள் போட்டி மொகாலியில் நடக்கிறது. இதில் வென்று இந்திய அணி தொடரை கைப்பற்ற வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் இரு போட்டியில் இந்தியா வென்றது. மூன்றாவது போட்டியில் ஆஸ்திரேலியா வென்ற போதும் இந்தியா 2–1 என தொடரில் முன்னிலையில் உள்ளது. இரு அணிகள் மோதும் நான்காவது போட்டி இன்று பஞ்சாப்பில் உள்ள மொகாலியில் நடக்கிறது.

புதிய துவக்கம்

இந்திய அணியின் துவக்கத்தில் ரோகித் சர்மா (37, 0, 14), ஷிகர் தவான் (0, 21, 1) என இருவரும் தொடர்ந்து சொதப்புகின்றனர். வழக்கமாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடும் ரோகித்துக்கு இம்முறை என்ன ஆனது எனத் தெரியவில்லை. தவான் கடைசியாக களமிறங்கிய 6 போட்டிகளில் ஒன்றில் கூட 30 ரன்களை (28, 13, 6, 0, 21, 1) தாண்டவில்லை.

மிடில் ஆர்டரில் கேப்டன் கோஹ்லி (44, 116, 123) இரு சதம் அடித்து விட்டார். 4வது இடத்தில் வரும் அம்பதி ராயுடு (13, 18, 2) கிடைக்கும் வாய்ப்புகளை எல்லாம் வீணடிக்கிறார். இதனால் இன்று அணியில் மாற்றம் இருக்கும் என நம்பப்படுகிறது. லோகேஷ் ராகுல் களமிறங்குவது உறுதியாகிறது.

ரிஷாப் வாய்ப்பு

கேதர் ஜாதவ் (118 ரன்) நம்பிக்கை தருகிறார். தோனிக்குப் பதில் ரிஷாப் பன்ட் களமிறங்க காத்திருக்கிறார். இதில் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் உலக கோப்பை அணியில் இடத்தை உறுதி செய்யலாம். ‘ஆல் ரவுண்டர்’ விஜய் சங்கர் பவுலிங்கில் எழுச்சி பெற வேண்டும்.

ஷமி ஓய்வு

பந்துவீச்சை பொறுத்தவரையில் ராஞ்சி போட்டியில் காயம் பட்ட முகமது ஷமிக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஓய்வு தரப்படுகிறது. இதனால் பும்ரா, புவனேஷ்வர் குமார் கூட்டணி ‘வேகத்தை’ கவனிக்கும். சுழலில் குல்தீப், ஜடேஜா ஆறுதல் தருகின்றனர்.

கவாஜா மிரட்டல்

முதல் இரு போட்டிகளில் சறுக்கிய ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் தற்போது சுதாரித்துக் கொண்டனர். வேகமாக ரன்கள் சேர்க்கின்றனர். கவாஜா சதம் அடித்தது, கேப்டன் பின்ச் அரைசதம் விளாசியது நம்பிக்கை தந்துள்ளது.

பின் வரிசையில் மேக்ஸ்வெல், ஹேண்ட்ஸ்கோம்ப், ஸ்டாய்னிஸ், கரே என பலரும் அணியின் ஸ்கோர் உயர கைகொடுக்கின்றனர்.

பவுலிங்கில் சுழல் வீரர் ஆடம் ஜாம்பா, ரன்களை வாரி வழங்கினாலும் இந்திய வீரர்களுக்கு ஆபத்தானவராக உள்ளார். இதுவரை 3 போட்டியில் 7 விக்கெட் வீழ்த்தியுள்ளார். ‘வேகத்தில்’ கம்மின்ஸ் துவக்கத்தில் விக்கெட்டுகளை சாய்ப்பது இந்தியாவுக்கு சிக்கல் தருகிறது.

தோனி ‘ரெஸ்ட்’

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 4, 5வது போட்டியில் தோனி பங்கேற்க மாட்டார். இவர் கேட்டுக் கொண்டதால், ஓய்வு தரப்பட்டுள்ளது. தோனிக்குப் பதில் ரிஷாப் பன்ட் விக்கெட் கீப்பர் பணியை ஏற்கவுள்ளார்.

யாருக்கு சாதகம்

சண்டிகர் மைதானத்தில் இந்திய அணி ஒட்டுமொத்தமாக களமிறங்கிய 15 போட்டிகளில் 10ல் வென்றுள்ளது. மற்றபடி ஆஸ்திரேலிய அணிக்கு ராசியாக உள்ளது. இந்தியாவுக்கு எதிராக இங்கு மோதிய 4 போட்டிகளில் மூன்றில் வென்றது. இந்தியா 1ல் வெற்றி பெற்றது.

* இங்கு விளையாடிய 6 போட்டிகளில் ஆஸ்திரேலியா 5ல் வென்றது.

மழை வருமா

நான்காவது போட்டி நடக்கும் சண்டிகரில் (மொகாலி) வெப்பநிலை அதிகபட்சம் 26, குறைந்தபட்சம் 12 டிகிரி செல்சியசாக இருக்கும். மழை வர வாய்ப்பு இல்லை.

ஆடுகளம் எப்படி

சண்டிகர் ஆடுகளம் பொதுவாக பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும். பேட்ஸ்மேன்கள் ரன் மழை பொழியலாம். இங்கு நடந்த 24 போட்டிகளில் 15ல் முதலில் பேட்டிங் செய்த அணி வென்றது. இன்று ‘டாஸ்’ வெல்லும் அணி பேட்டிங் தேர்வு செய்யலாம்.