விளையாட்டு

ஒன்லைன் மூலம் இளம் வீரர்களுக்கு பயிற்சி வழங்கவுள்ள டோனி

எதிர்வரும் ஜூலை மாதம் 2ஆம் திகதி முதல் ஒன்லைன் அகாடமியை (online academy)   திறப்பதுடன், அதனூடாக இளம் வீரர்களுக்கு பயிற்சி வழங்கவுள்ளதாகவும் இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் டோனி. 2 உலகக் கிண்ணங்களை வென்று அவர் நாட்டுக்கு பெருமை சேர்த்தவர். 2007 ஆம் ஆண்டு 20 ஓவர் உலகக் கிண்ணத்தையும், 2011 ஆம் ஆண்டில் ஒருநாள் போட்டி உலகக் கிண்ணத்தையும் டோனி தலைமையிலான இந்திய அணி கைப்பற்றியது.

கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடந்த உலகக்கிண்ண போட்டிக்கு பிறகு அவர் எந்தவித போட்டியிலும் விளையாடாமல் இருக்கிறார்.

இந்திய கிரிக்கெட் சபையின் ஒப்பந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 38 வயதான அவர் எப்போது ஓய்வு முடிவை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

IPL போட்டியில் ஆடிவிட்டு அதன் மூலம் 20 ஓவர் உலகக்கிண்ணத்துடன் டோனி ஓய்வு பெற முடிவு செய்து இருந்ததாக கூறப்பட்டது.

தற்போது கொரோனாவால் IPL போட்டி காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 20 ஓவர் உலகக்கிண்ணம் நடைபெறுவது சந்தேகமே.

இந்த நிலையில் கொரோனாவால் இந்தியாவில் தொடர்ந்தும் நீடிக்கும் ஊரடங்கால் வீட்டில் முடங்கி கிடக்கும் டோனி எதிர்வரும் 2ஆம் திகதியிலிருந்து ஒன்லைன் மூலம் இளம் வீரர்களுக்கு பயிற்சி வழங்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதற்காக பயிற்சி மையத்தை நிறுவ இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பயிற்சி மையத்தின் இயக்குனராக தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் டேரியல் கல்லினன் இருப்பார். அதே சமயத்தில் டோனியின் தலைமையின் கீழ் பயிற்சி மையம் செயற்படும்.

இதுகுறித்து டோனியுடன் கைகோர்த்துள்ள ஆர்கா ஸ்போர்ட்ஸ் நிறுவனம் கூறும்போது ”நாங்கள் இந்த முறையில் ஏற்கனவே 200 பேர்களுக்கு பயிற்சி அளித்துள்ளோம். ஜூலை 2ஆம் திகதியிலிருந்து பயிற்சி அளிக்க உள்ளோம். டோனி இதற்கு தலைமை பொறுப்பாளராக இருக்கிறார். மற்ற பயிற்சியாளர்கள் வீரர்களுக்கான பாடங்களை வழங்குவார்கள்” என்று தெரிவித்துள்ளது.