இலங்கை

Exclusive – பாராளுமன்றம் ஜனாதிபதியால் இடைநிறுத்தப்படும் சாத்தியம் !

நாட்டின் பாதுகாப்பு மற்றும் புலனாய்வுத்துறை அதிகாரிகளை அழைத்து விசாரணைகளை மேற்கொண்டு தேசிய பாதுகாப்பு இரகசியங்களை வெளியே கசியும் செயற்பாடுகளை பாராளுமன்ற தெரிவுக்குழு மேற்கொள்வதாகக் கூறி – அது நிறுத்தப்படவேண்டுமென ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன சபாநாயகர் ,கரு ஜயசூரியவை கேட்டிருப்பதாக தெரியவருகிறது.

அதேசமயம் பாராளுமன்ற தெரிவுக்குழு தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுக்குமாயின் பாராளுமன்றத்தை இடைநிறுத்த வேண்டிவரலாமென்று நேற்றிரவு பிரதமரை சந்தித்தபோது ஜனாதிபதி திட்டவட்டமாக கூறியுள்ளதாகவும் அறியவந்தது . இதனால் மீண்டும் நிறைவேற்று அதிகாரத்திற்கும் பாராளுமன்றத்திற்குமிடையில் இழுபறி நிலைமை உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது

இதேவேளை பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் இனி பாதுகாப்பு தரப்பின் உயரதிகாரிகள் ஆஜராகக் கூடாதென ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன உத்தரவை பிறப்பித்துள்ளதாகவும் கூறப்படுகிறது

கடந்த தெரிவுக்குழுவில் பாதுகாப்பு செயலர் கோட்டேகொடவும் தேசிய புலனாய்வுத் துறை தலைவரும் சமூகமளித்து சாட்சியமளித்திருந்தனர். இன்றைய தினம் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக்க சில்வா சாட்சியமளித்தார்.

பயங்கரவாத தடுப்பு பிரிவு மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர்கள் எதிர்காலத்தில் அழைக்கப்படுவார்களென இன்று தெரிவிக்கப்பட்டபோதும் அவர்கள் அதில் ஆஜராகுவார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது

முன்னதாக இந்தக் குழு ஜனாதிபதி மீது குற்றச்சாட்டுக்களை சுமத்த தயாராகி வருவதாக ஜனாதிபதி தரப்பு எம் பிக்கள் தெரிவித்து வந்த நிலையில் – கடந்த அமர்வில் சரத் பொன்சேகா எம் பி சாட்சியாளர்களை கடுமையாக கேள்விக்கு உட்படுத்தியிருந்த நிலையில் ஜனாதிபதியின் இந்த நகர்வு பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.