இலங்கை

தெரிவுக்குழு விடயத்தில் ஜனாதிபதியின் உத்தரவை ஏற்க மறுக்கும் பாதுகாப்பு அதிகாரிகள் !

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பாக ஆராயும் பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் பாதுகாப்புத்துறை உயரதிகாரிகள் ஆஜராக மாட்டார்களெனவும் அதற்கான பணிப்புரையை விடுத்துள்ளதாகவும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ள சூழ்நிலையில் , பாராளுமன்ற தெரிவுக்குழு அழைக்கும் பட்சத்தில் அதன் முன் ஆஜராவதென பாதுகாப்பு அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.

நடந்த தாக்குதல்கள் தொடர்பில் சி ஐ டி பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன , சி ஐ டி பணிப்பாளர் ஷானி ,பதில் பொலிஸ் மா அதிபர் சந்தன , அரச புலனய்வுத்துறை பணிப்பாளர் நிலந்த ஆகியோர் அடுத்த வாரம் தெரிவுக்குழு முன்னிலையில் ஆஜராகுமாறு அழைக்கப்படவுள்ளனர்.

முன்னதாக இவர்கள் ஜனாதிபதியின் பணிப்பின் பேரில் தெரிவுக்குழு முன்னிலையில் ஆஜராக மாட்டார்களென சொல்லப்பட்டாலும் இப்போதைய நிலவரப்படி அவர்கள் – தெரிவுக்குழு அழைக்குமாயின் ஆஜராக தீர்மானித்துள்ளதாக தகவல்.

” பாராளுமன்ற தெரிவுக்குழு விசாரணைக்கு அழைத்து ஆஜராகாத பட்சத்தில் 10 வருட சிறைத் தண்டனை முதற்கொண்டு பதவி வகித்தல்,ஓய்வூதியம் உட்பட்ட பல விடயங்களில் சிக்கல் ஏற்படக் கூடும்.தெரிவுக்குழுவில் ஆஜராகி ஜனாதிபதியினால் பதவி விலக்கப்பட்டாலும் பரவாயில்லை.ஆனால் ஆஜராகாமல் பிரச்சினைகளை எதிர்கொள்ள முடியாது.எனவே தெரிவுக்குழு அழைத்தால் ஆஜராகியாக வேண்டும்” என்று பெயர் குறிப்பிட விரும்பாத பாதுகாப்பு அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.

இதேவேளை இந்த தெரிவுக்குழு இரத்துச் செய்யப்படாத பட்சத்தில் அமைச்சரவை கூட்டத்தை கூட்டப்போவதில்லையென ஜனாதிபதி ஏற்கனவே அறிவித்து அதற்கேற்ப இவ்வார அமைச்சரவையை கூட்டவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.