இலங்கை

Exclusive ! கொழும்பு ஊடாக தாய்லாந்துக்கு மாறவிருந்த கஞ்சிப்பான இம்ரான் !

 

டுபாயில் இருந்து நாடுகடத்தப்பட்ட நிலையில் கொழும்பு வந்த கஞ்சிப்பான இம்ரான் கொழும்பில் இருந்து தாய்லாந்துக்கு செல்ல முயன்றபோதே சி ஐ டியினரின் கைகளில் சிக்கியதாக உயர்மட்ட பாதுகாப்பு தகவல்கள் தெரிவித்தன.

மாக்கந்துர மதுஷுடன் கைது செய்யப்பட்ட கஞ்சிப்பான இம்ரான் மற்றும் இதர மூன்று பேர் நாடு கடத்தப்பட்ட நிலையில் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்து இறங்கினர்.

நேற்று பாடகர் அமல் பெரேராவின் மகன் நீண்ட விசாரணைகளுக்கு பின்னர் விடுவிக்கப்பட்டதால் அந்த அடிப்படையில் இவர்கள்  இன்று அச்சமின்றி இலங்கை வந்து தாய்லாந்து நோக்கி செல்ல தயாராகியுள்ளனர்.

டுபாய் பொலிஸார் நீண்ட விசாரணைகளுக்குப் பின்னர் கஞ்சிப்பான இம்ரான் மற்றும் பலரை நாட்டில் இருந்து வெளியேற உத்தரவிட்டிருந்தது. அதற்கு சிறிய கால அவகாசம் மட்டுமே வழங்கப்பட்டு அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்..

அதேசமயம் அவர்கள் சொந்த நாட்டுக்கே திரும்பவேண்டும் என்ற கட்டாயம் உள்ளதால் இன்று இலங்கை வந்த அவர்கள் இலங்கையூடாக தாய்லாந்து செல்ல மறைமுக ஏற்பாடுகளை செய்தனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த கையோடு குடிவரவு குடியகல்வு பீடத்திற்கு செல்லாமல் ட்ரான்சிட் பகுதியை நோக்கி செல்ல ஆரம்பித்த கஞ்சிப்பான இம்ரானை அடையாளம் கண்ட சி ஐ டியினர் அவரை கைது செய்தனர்.

இப்போது இம்ரானிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு வருகிறது.அவர் தாய்லாந்து செல்ல உதவியவர்கள் குறித்தும் தேடப்படுவதாக தகவல். மாக்கந்துர மதுஸுடன் கைது செய்யப்பட்ட இன்னும் சிலர் இலங்கைக்கு வரக் கூடுமென பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே நடந்த சம்பவங்கள் குறித்து பல முக்கிய தகவல்கள் கஞ்சிப்பான இம்ரானிடம் இருந்து கிடைத்திருப்பதாக உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.