இலங்கை

Exclusive ! இலங்கையில் புதிய ஆப்பை சொருகியது இந்தியா – சீறிச் சினந்தது சீனா – இரகசிய ஒப்பந்தத்தால் பெரும் இழுபறி

இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையில் சில தினங்களுக்கு முன்னர் செய்துகொள்ளப்பட்ட இரகசிய பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றின் காரணமாக சீனா இலங்கை மீது கடும் அதிருப்தியடைந்திருப்பதாக தெரியவருகிறது.

சில தினங்களுக்கு முன்னர் கொழும்பு வந்த இந்திய பாதுகாப்பமைச்சின் செயலாளர் சஞ்சய் மித்ரா கொழும்பில் இலங்கை பாதுகாப்பமைச்சுடன் ஒரு ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டார். யாருக்கும் தெரியாமல் மிக இரகசியமாக செய்யப்பட்ட அந்த ஒப்பந்தம் கரையோர பாதுகாப்பு சம்பந்தமானது.

இலங்கையின் கரையோர பாதுகாப்புக்கு இந்தியாவின் ஒத்துழைப்பு பெறப்படுவதற்கான அந்த ஒப்பந்தப்படி இலங்கைக்கு சுமார் 104 கோடி ரூபாவை இந்தியா நன்கொடையாக வழங்கவுள்ளது.அத்துடன் இலங்கை கரையோர பாதுகாப்பு பணிகளில் இந்திய கடற்படை இலங்கை கடற்படையுடன் இணைந்து எதிர்காலத்தில் பணியாற்றும் ஏற்பாடும் இந்த ஒப்பந்தத்தில் உள்ளதாக தகவல்.

சீறியது சீனா

இலங்கை அரசு மிக இரகசியமாக செய்து கொண்ட இந்த ஒப்பந்தம் குறித்து அறிந்த சீனா, அது தொடர்பில் கடும் அதிருப்தி கொண்டுள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் சொல்கின்றன.

இலங்கை கரையோர பாதுகாப்பு என்ற போர்வையில் அம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் இலங்கையில் சீனா மேற்கொண்டுவரும் அபிவிருத்தி திட்டங்களை இந்திய கடற்படைமறைமுகமாக கண்காணிக்கலாமென கருதும் சீனா , இது தொடர்பிலான கடும் அதிருப்தியை இராஜதந்திர மட்டத்தில் இலங்கையிடம் தெரிவிக்க தயாராகி வருவதாக அறியமுடிந்தது.

இந்த ஒப்பந்தத்தை மீள்பரிசீலனை செய்து இரத்துச் செய்யுமாறு இலங்கையிடம் கோரிக்கை விடுக்கவுள்ள சீனா அப்படி இரத்துச் செய்யப்படாத பட்சத்தில் இலங்கைக்கு வழங்கும் உதவிகளை தொடருவதா என்பது குறித்தும் சிந்தித்து வருவதாக சொல்லப்படுகிறது.

முன்னதாக இந்த விவகாரம் குறித்து சீனா இராஜதந்திர மட்டத்தில் பிரதமர் ரணிலிடம் அதிருப்தியை வெளியிட்டுள்ள போதிலும் இது பாதுகாப்பமைச்சர் ஜனாதிபதி மைத்ரியின் முடிவென அவர் கை விரித்துவிட்டதாக சொல்லப்படுகிறது.

இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் குறித்து பல நாட்களாக கண்ணில் எண்ணெய் விட்டு பார்த்துக் கொண்டிருந்த புதுடில்லி இப்போது இந்த கரையோர பாதுகாப்பு ஒப்பந்தத்தின் மூலம் சீனாவின் இருப்பை இலங்கையில் கேள்விக்குறியாக்கியுள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் சொல்கின்றன.

ஒருபுறம் இலங்கைக்கு உதவும் வகையில் செயற்பட்டுள்ள இந்தியா மறுபுறம் சீனாவுக்கும் ஆப்பு வைத்து ஒரே கல்லில் இரண்டு காய்களை அடித்துள்ளதாக அந்த வட்டாரங்கள் மேலும் குறிப்பிட்டன.