உலகம்

‘737 மெக்ஸ்’ உற்பத்தியை நிறுத்துகிறது போயிங்‘போயிங்’ நிறுவனம் எதிர்வரும் ஜனவரி மாதத்தில் அதன் சிக்கலுக்குரிய ‘737 மெக்ஸ்’ விமானத்தின் உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.இரண்டு பாரிய விபத்துக்கள் இடம்பெற்ற பின்னர், ஒன்பது மாதங்களுக்கு இந்த ரக விமானங்கள் சேவையில் ஈடுபடாமல் இருக்கின்ற போதிலும், அதன் உற்பத்தி நடவடிக்கைகள் தொடர்ந்தன.

இந்தோனேசியா மற்றும் எதியோப்பியாவில் இரண்டு ‘737 மெக்ஸ்’ விமானங்கள் விபத்துக்குள்ளானதில் 300ற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இவ்வாறான நிலையில், இந்த வருட இறுதிக்குள் விமானம் மீண்டும்  பறக்கும் என போயிங் நம்பிக்கைகொண்டிருந்தது.

எனினும் விமானங்கள் விரைவாக தரையிறங்கும் என அமெரிக்க கட்டுப்பாட்டாளர்கள் சான்றிதழ் வழங்காமையால் விமானச் சேவைகள் எதுவும் இடம்பெறவில்லை.

வொஷிங்டனின் சியாட்டலை மையமாகக் கொண்ட போயிங், அமெரிக்காவின் மிகப்பெரிய ஏற்றுமதியாளர்களில் ஒன்றாகும்.

737 மெக்ஸ் உற்பத்தியுடன் தொடர்புடைய தொழிலாளர்களை பணிநீக்கம் செய்யப்போவது இல்லையென தெரிவித்துள்ளது. எனினும் உற்பத்தி நிறுத்தப்பட்டமையானது மிகப்பெரிய பொருளாதார தாக்கத்தை ஏற்படுத்துமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் இந்தோனேசியாவில் ஏற்பட்ட முதல் விபத்தைத் தொடர்ந்து அமெரிக்க விமான கட்டுப்பாட்டாளர்கள் மேலும், விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாக எச்சரித்தனர்.

எனினும் அதன் பின்னர், இந்த வருடம் மார்ச் மாதம் எதியோப்பியாவில் இரண்டாவது விபத்து பதிவானதை அடுத்து, போயிங் 737 மெக்ஸ் விமானத்தை எந்தவொரு விமான நிறுவனமும் சேவையில் ஈடுபடுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.